search icon
என் மலர்tooltip icon

  ஆன்மிகம்

  அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன்: திருப்பித் தரும் வானம்
  X

  அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன்: திருப்பித் தரும் வானம்

  பூமியில் இருக்கின்ற நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி, அதை வானம் மீண்டும் மழையாகத் தருவதையே, ‘திருப்பித் தரும் வானம்’ என்ற சொல்லால் சுட்டுகிறது, குர்ஆன்.
  வானம் அல்லது ஆகாயம் என்பது பூமியின் மேற்புறத்தில் இருந்து குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் விரிந்திருக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய பரந்த வெளி. இது வளி மண்டலத்தையும் அதற்கு அப்பால் உள்ள விண்வெளியையும் குறிக்கும்.

  வானியலில் வானமானது வானக்கோளம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த வெளியில் உள்ள சூரிய, நிலா, நட்சத்திரங்கள் போன்றவற்றின் அசைவுகளை நம்மால் அவதானிக்க முடிகிறது.

  படைக்கப்பட்ட காலம் தொட்டு, மனிதன் இந்த உலகத்தைப் பற்றியும், சூரியன், சந்திரன், வானம், நட்சத்திரங்கள் பற்றியும் மிக சொற்பமாகவே அறிந்திருந்தான். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பூமியிலும், வானங்களிலும் உள்ளவை பற்றி விஞ்ஞான உலகம் பல அடுக்கடுக்கான உண்மைகளை எடுத்து வைத்தது. இதன் மூலம் இந்தப் பிரபஞ்சத்தை இறைவன் வீணாகப் படைக்கவில்லை என்பதை விளங்கிக் கொள்ள நம்மால் முடிந்தது.

  “நாம் வானங்களையும், பூமியையும் இவை இரண்டுக்கும் இடையே உள்ளவற்றையும் உண்மையைக் கொண்டே அல்லாது படைக்கவில்லை” (15:85) என்றும்,

  “வானத்தையும், பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டாக நாம் படைக்கவில்லை” (21:16) என்றும்,

  “வானங்களையும், பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை” (44:38) என்றும்,

  “வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை” (38:27) என்றும் இறைவன் திருமறையில் பல இடங்களில் பறை சாற்றுகிறான்.

  இந்த பிரபஞ்சத்தில் படைக்கப்பட்டுள்ள அனைத்தும் மனிதனுக்குப் பயன்படும் வகையில் அமைந்துள்ளன. இவற்றில் சிலவற்றை மனிதன் அறிந்திருக்கிறான். பெரும்பாலானவைகளின் நன்மைகளைப் பற்றி மனிதனால் இன்னமும் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

  “வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின் (அவ்வாறே) செல்லுங்கள். ஆனால் வல்லமை(யும் நம் அதிகாரமும்) இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது” (55:33) என்று திருமறையில் இறைவன் கூறுகின்றான்.

  மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம், மனிதன் விண்வெளிப் பயணம் மேற்கொள்ள முடியும் என்பதை எடுத்துக் கூறுகிறது.

  வளி மண்டலத்திற்கு வெளியே உள்ள பிரபஞ்சத்தை ஆராய ஆளுள்ள ராக்கெட்டுகளையும், ஆளில்லாத ராக்கெட்டுகளையும், பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சிகள் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடங்கின. இவற்றில் குறிப்பிடத்தக்கவை அமெரிக்காவின் அப்போலோ திட்டமும், அதில் உள்ளடங்கிய 1969-ம் ஆண்டு முதலில் நிலவில் கால் வைத்த நிகழ்ச்சியும், சோவியத் சோயுஸ் மற்றும் ‘சல்யூட்’ திட்டங்களும் ஆகும். இதைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டன.

  விண்ணில் பறக்க முடியுமா என்பதைக் கனவில்கூட காணமுடிய அந்தக் காலகட்டத்தில், விண்ணில் பறக்க முடியும் என்பதையும், அதற்கென்று ஓர் ஆற்றல்-சக்தி தேவை என்பதையும் கூறிய திருக்குர்ஆன், இறை வேதம் என்பதை மெய்ப்பிக்கிறது.

  “அல்லாஹ் எவர்களுக்கு நேர்வழி காண்பிக்க விரும்புகின்றானோ அவர்களுடைய உள்ளத்தை இஸ்லாத்தின் பக்கம் (செல்ல) விரிவாக்குகின்றான். எவர்களை அவர்களுடைய வழிகேட்டிலேயே விட்டுவிட விரும்புகின்றானோ அவர்களுடைய உள்ளத்தை (நிர்ப்பந்தத்தால்) வானத்தில் ஏறுபவ(னி)ன் (உள்ளம்) போல் கஷ்டப்பட்டு சுருங்கும்படியாக்கி விடுகிறான்” (6:125) என்ற இறை வசனம், விண்ணில் மேலேறிச் செல்பவரின் இதயம் சுருங்கும் என்பதை எடுத்துக் கூறுகிறது.

  விண்வெளியில் பயணம் மேற்கொள்பவர்களின் இதயம் சுருங்கும்; இறுக்கமான நிலையை அடையும் என்பதை இன்றைக்கு விண்வெளி வீரர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். விண்வெளி வீரர்கள் மட்டுமல்ல, விமானப் பயணிகள் கூட இத்தகைய அனுபவத்தை உணர முடியும்.

  வியப்பில் நம்மை ‘அண்ணாந்து’ பார்க்க வைக்கும் இன்னொரு திருக்குர்ஆன் வசனம், “திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக” (86:11) என்பதாகும்.

  இந்த வசனத்திற்கான பொருள் பல நூற்றாண்டுகளாக புரியாமல் இருந்தது. இந்த வசனத்திற்கு எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் நல்ல விளக்கத்தை விஞ்ஞானிகள் அளித்துள்ளனர்.

  பூமியில் இருக்கின்ற நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி, அதை வானம் மீண்டும் மழையாகத் தருவதையே, ‘திருப்பித் தரும் வானம்’ என்ற சொல்லால் சுட்டுகிறது, குர்ஆன்.

  சூரியனின் வெப்ப ஆற்றல் காரணமாக கடலிலும், நீர் நிலைகளிலும் இருக்கின்ற நீர் ஆவியாகி மேகங்களாக மாறுகின்றது. இந்த மேகங்களின் மீது குளிர்ந்த காற்று தாக்கும்போது இது குளிர்வடைந்து மழை நீராக மீண்டும் பூமியை வந்தடைகிறது. மழைநீரில் முக்கால் பகுதி கடலிலும், கால் பகுதி நிலத்திலும் பெய்கிறது. நிலத்தில் பெய்யும் மழைநீரில் ஒரு பகுதி நீர் நிலைகளில் சேமிக்கப்படுகிறது. எஞ்சிய நீர் கால்வாய்கள், ஆறுகள் வழியாக கடலில் சென்று கலக்கின்றது. கடல் நீர் மீண்டும் ஆவியாகி மேகங்களாக மாறுகின்றது. இது தொடர்ந்து சுழற்சியாக நடந்து கொண்டிருப்பதால் இதை ‘நீர் சுழற்சி’ என்று அழைக்கிறோம்.

  மேலும் பூமியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் அனுப்பப்படுகின்ற ஒலி மற்றும் ஒளி அலைகளை வானம் மீண்டும் பூமிக்குத் திருப்பி அனுப்புகிறது. இதன் மூலம் இன்றைக்கு நாம் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கேட்கவும், காணவும் முடிகிறது.

  பொதுவாக பொறுமைக்கு பூமியையும், வள்ளல் தன்மைக்கு வானத்தையும் உவமையாகக் கூறுகிறோம். இதைத் ‘திருப்பித் தரும் வானம்’ என்ற அற்புதமான அடைமொழி மூலம் இறைவன் நமக்கு அடையாளப்படுத்தி இருக்கின்றான்.
  Next Story
  ×