search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    வாஸ்து: மனையின் தன்மைகள் எப்படி இருந்தால் நல்லது?
    X

    வாஸ்து: மனையின் தன்மைகள் எப்படி இருந்தால் நல்லது?

    • இப்போதுள்ள நவீன கட்டுமானத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எந்த விதமான மண்ணிலும் கட்டிடம் அமைக்க இயலும்.
    • மனைப்பகுதியில் தாமரைக்குளத்தின் வாசனை, மாட்டுத் தொழுவ வாசனை போன்றவை இருப்பது நல்ல பலன்களைத் தரும்.

    வீட்டு மனை அல்லது வயல், தோட்டம் வாங்கும்போது முதலில் கவனிக்க வேண்டியது, மனையில் மண்ணின் தன்மை என்ன என்பதுதான். மண் என்ன நிறத்தில் உள்ளது. என்ன மணம் வீசுகிறது. பாறைகளுடன் கூடியதா, சிறுசிறு கூழாங்கற்கள் உள்ள இடமா, சாதாரண மண் அமைப்பா, சதுப்பு நிலமா அல்லது பெரிய மரங்கள் இருக்கும் காட்டுப் பகுதியா என்ற விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மனைப்பகுதியில் தாமரைக்குளத்தின் வாசனை, மாட்டுத் தொழுவ வாசனை போன்றவை இருப்பது நல்ல பலன்களைத் தரும்.

    வெளிர் நிறமண், சற்றே இள மஞ்சள், செம்மண், சற்றே கருப்பாக உள்ள மண், பழுப்பு நிற மண், விவசாயம் செய்த மண், அதிகமாகக் கூழாங்கற்கள் இல்லாதது ஆகியவை வீடுகள் கட்ட உகந்தவை. இடத்தின் மண்ணை எடுத்துத் தண்ணீர் தெளித்துவிட்டு சில மணி நேரம் கழித்துப் பார்க்கும்போது நுரையாக இருந்தால் பொருளாதார வளம் கொண்ட மண் அமைப்பாகவும், தயிர் வாசனை வீசினால் சமமான வாழ்வு தரும் மண் அமைப்பாகவும், தேன் வாசனை வீசினால் முன்னேற்றமான வாழ்வு தரும் மண் அமைப்பாகவும் கருதலாம். நெய் வாசனை, மீன் வாசனை முதலியவை குறைந்த பலன்களைத் தரும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

    இப்போதுள்ள நவீன கட்டுமானத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எந்த விதமான மண்ணிலும் கட்டிடம் அமைக்க இயலும். இப்போது நடைமுறையில் உள்ள மண்ணின் பளு தாங்கும் திறன் சோதனை (LOAD BEARING CAPACITY TEST) மூலமாக நாம் அமைக்கும் கட்டிடத்தின் அளவுகளையும், உயரங்களையும் எளிதாக முடிவு செய்யலாம். பெரும் நீர்ப்பரப்பான கடலில் கூட உணவகங்கள், விமான ஓடுதளங்கள், தங்கும் விடுதிகள், போக்குவரத்திற்கான பாலங்கள் முதலியன தற்போது அமைக்கப்பட்டு உள்ளன.

    பழைய காலங்களில் நமது வாஸ்து சாஸ்திர வல்லுனர்கள் மண்ணின் வலு மற்றும் அதன் சாதகமான அம்சங்களைத் தெரிந்துகொள்ள பல்வேறு வழிகளைக் கையாண்டுள்ளனர். அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இடத்தின் மையத்தில் ஒரு அடி நீளம், ஒரு அடி அகலம், ஒரு அடி ஆழம் உடைய ஒரு குழி பறிக்க வேண்டும். வெளியே எடுக்கப்பட்ட மண்ணை மீண்டும் அந்தக் குழிக்குள் போட்டுக் குழியை மூடினால், மூடப்பட்டது போக மண் மீதியாக இருந்தால் அந்த நிலம் கட்டிடம் அமைக்க உத்தமமான இடமாகும். மீதம் எதுவும் இல்லாமல் மூடப்படுவதற்கு மட்டுமே மண் சரியாக உள்ள நிலம் மத்திமமான இடமாகும். வெட்டப்பட்ட குழியில் வெட்டிய மண்ணைப் போட்டு மூடிய பிறகும் குழியானது நிரம்பாமல் இருந்தால், அந்த நிலமானது அவ்வளவு சரியானதல்ல என்பது முன்னோர்களின் கணிப்பு.

    மேலும் இடத்தின் மையத்தில் ஒன்றுக்கு ஒன்று என்ற அளவில் குழி எடுத்து, அதில் சுத்தமான நீரை நிரப்பி வைத்து விட்டு 12 மணி நேரம் கழித்து வந்து பார்க்கும்போது, குழியிலுள்ள நீர் பாதிக்கும் மேலாக இருந்தால் அது நல்ல நிலமாகவும், நீரானது பாதிக்கும் குறைவாக இருந்தால் மத்தியமான நிலமாகவும், சுத்தமாக நீரே இல்லாமல் இருந்தால் அது அவ்வளவு சரியாக வராது என்றும் முடிவு செய்தார்கள். அவ்வாறு வெட்டப்பட்ட குழியில் சுத்தமான நீரை, ஒரு சுப ஹோரையில் நிரப்பிய பின்பு அதில் மலர்களைப் போடவேண்டும். அவ்வாறு நாம் போட்ட மலர்கள் வலமாகச் சுற்றினால் அதாவது கடிகாரமுள் சுற்றுவது போலச் சுற்றினால், அம்மனையில் நல்ல சக்திகள் ஆட்சி செய்கின்றன என்றும், அவ்வாறு போடப்பட்ட மலர்கள் இடமாகச் சுற்றினால், அம்மனையில் சுபமான சக்திகள் அவ்வளவாகப் பலம் பெறவில்லை என்றும் பொருள்.

    சரியான முடிவுகள் கிடைக்கப்பெறாத நிலங்களை ஆராய்ந்து பார்த்த அக்கால வாஸ்து சாஸ்த்திர நிபுணர்கள், அந்த நிலங்களின் பஞ்சபூத விகிதாச்சாரங்களில் ஏற்பட்ட குற்றம் குறைகளை, அதனதன் தன்மைக்கேற்ற விதங்களில் நிவர்த்தி செய்த பின்பே கட்டிட வேலைகளை தொடங்கி நல்ல விதமாகக் கட்டி முடித்தார்கள்.

    Next Story
    ×