search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    வாஸ்து: மனை அல்லது இடத்தின் வடிவங்கள்
    X

    வாஸ்து: மனை அல்லது இடத்தின் வடிவங்கள்

    • ஒரு இடமானது சதுரமான அளவுகளில் அமைந்திருப்பது வாஸ்துவில் முதல் தரமானதாகக் கருதப்படும்.
    • வீடு கட்டுவதற்கு எப்போதுமே வட்ட வடிவமான இட அமைப்பு நிச்சயம் ஒத்து வராது.

    நாம் ஒரு இடத்தை அல்லது மனையைத் தேர்வு செய்யும்போது, அந்த இடத்தின் வடிவம் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில், சீரற்ற நீள, அகலங்கள் கொண்ட இடங்களை நாம் வாங்கி, வாஸ்து சாஸ்திரப்படி இடத்தை சீரமைத்து, கட்டிடத்தைக் கட்டும்போது நிறைய இடத்தைப் பயன்படுத்த முடியாமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டு. பயன்படுத்த இயலாத இடங்களையும் எப்படியாவது சரி செய்து பயன்படுத்த இயன்றவரையில் வாஸ்து விதிகள் உதவி செய்கின்றன. ஆனால், கட்டிடத்தின் மொத்தமான பயன்பாட்டிற்கு அது சேராமல் தனியாக நிற்கும் நிலை ஏற்படும். அதிக பண மதிப்புள்ள இடத்திற்குத்தான், இந்தப் பிரச்சினை அதிகமாக வருகிறது. அதனால் முன்கூட்டியே இந்த விஷயத்தில் சரியான முடிவு எடுப்பது அவசியம்.

    ஒரு இடமானது சதுரமான அளவுகளில் அமைந்திருப்பது வாஸ்துவில் முதல் தரமானதாகக் கருதப்படும். அதாவது நான்கு புறங்களிலும் சரியான அளவுகள் கொண்டவை, இந்த வகையைச் சார்ந்தவையாகும். சதுரமான மனைகளில் வடக்கு அல்லது தெற்குப் பார்த்து அமைந்த இடங்கள் பெண் தன்மையைக் குறிப்பிடும். அதாவது அதில் வசிப்பவர்கள் மென்மையான போக்கு கொண்டவர்களாக இருப்பர். பொதுவாக இவர்கள் கலை அல்லது அழகியல் சம்பந்தமான தொழிலில் முன்னுக்கு வருபவர்கள் ஆவார்கள். சதுரமான மனைகளில் கிழக்கு அல்லது மேற்குப் பார்த்த இடங்கள் ஆண் தன்மையைக் குறிப்பிடும். அதாவது, அதில் வசிப்பவர்கள் தமது முடிவுகளில் தீர்க்கமாகவும், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற நிலைப்பாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பொதுவாக இவர்கள் அரசுத் துறையிலோ அல்லது ஒரு நிறுவனத்தின் தலைமைப் பதவியிலோ அல்லது சமூகத்தின் முக்கியப் புள்ளியாகவோ இருப்பார்கள்.

    இரண்டாவது நல்ல தரமாகக் கருதப்படுவது செவ்வக வடிவமான இடமாகும். அதாவது இருமடங்கு நீளமும், ஒரு மடங்கு அகலமும் கொண்டவையாகும். அல்லது இருமடங்கு அகலமும் ஒரு மடங்கு நீளமும் கொண்டவையாகும். இதிலும் கிழக்கு, மேற்கு நீளம் கொண்ட மனைகள் மற்றும் தெற்கு, வடக்கு நீளம் கொண்ட மனைகள் என்று இரண்டு வகைகள் உண்டு. இதில் கிழக்கு, மேற்கு நீளம் கொண்ட மனைகள் சிவத் தத்துவம் பொருந்திய ஆண் மனையாகக் கருதப்படும். அந்த இடமானது ஆண்களது சகல முயற்சிகளையும் வெற்றியை நோக்கிச் செலுத்தக்கூடியது. தெற்கு, வடக்கு நீளம் கொண்ட மனைகள் சக்தியின் அம்சம் கொண்ட பெண் மனையாகக் கருதப்படும். அந்த இடமானது அங்குள்ள பெண்கள் முன்னின்று செய்யும் சகலவிதமான காரியங்களுக்கும் நல்ல வெற்றி வாய்ப்புகளைத் தரக்கூடியது.

    வீடு கட்டுவதற்கு எப்போதுமே வட்ட வடிவமான இட அமைப்பு நிச்சயம் ஒத்து வராது. காரணம் அதில் இரு திசை சக்திகள் இணைந்து செயல்பட வாய்ப்புகள் இல்லாததாகும். அதாவது ஈசானியம், அக்னி, வாயு, நிருதி ஆகிய மூலைகள் வடிவமைப்பில் வராமல் வளைவில் ஒடுங்கி நிற்கும். அதனால் பஞ்சபூத சக்திகள் சமஅளவில் பரவி, குடியிருக்கும் வீட்டில் சாதகமான அலை இயக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்காது. ஆனால், விளையாட்டு அரங்குகள், பூங்காக்கள், கோவில்கள், பொதுக்கட்டிடங்கள் ஆகியவற்றை வட்ட வடிவ மனைகளில் அமைக்கலாம்.

    வீடுகள் கட்ட சதுரம் அல்லது செவ்வகம் தவிர நீள்சதுரம், அகலத்தைப்போல மூன்றுக்கும் மேற்பட்ட மடங்கு நீளம் கொண்ட இடங்கள், வட்டம், அரைவட்டம், நான்கிற்கும் மேற்பட்ட கோணங்கள் உள்ளவை, ஓவல் வடிவங்கள், நான்கு பக்கங்களிலும் வெவ்வேறு அளவுகள் கொண்டவை, இன்னும் பிற வித்தியாசமான வடிவங்கள் ஆகியவற்றை நாம் தேர்வு செய்வதில் மிக்க கவனத்துடன் செயல்பட வேண்டும். சில தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில், கட்டாயமாக அந்த இடத்தை வாங்கித்தான் ஆக வேண்டும் என்றால் மட்டுமே, வாஸ்துப்படி அதில் சீர்திருத்தங்கள் செய்ய இயலுமா? என்று ஆராய வேண்டும். அதன்பிறகு நமக்கு சாதகமான அம்சங்கள் அதில் இருந்தால், அதில் ஈடுபட்டு வெற்றி காணலாம்.

    Next Story
    ×