என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

திருப்புடைமருதூர் சிறப்பு தகவல்கள்-20
- வேண்டிக் கொண்ட செயல்கள் நிறைவேறிட சுவாமிக்கு பட்டு வஸ்திரங்கள் சாத்தி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யலாம்.
- அம்பாளுக்கு புடவை சாத்தி திருக்கல்யாணம், வளையல்கள் போட்டு, தொட்டில் கட்டி வளைகாப்பு மற்றும் படிபாயாசம் படைத்தும் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றலாம்.
1. திருப்புடைமருதூர் ஆலயம் கட்டப்பட்டு 1200 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.
2. இந்த தலத்து விநாயகர் பெயர் அனுக்கை விநாயகர். இங்கு நைவேத்தியமாக சுத்தன்னம் படைத்து வழிபடுகின்றனர்.
3. வட இந்தியாவில் வாரணாசியை காசியாக புகழ்வது போல் தென் இந்தியாவின் காசியாக திருப்புடைமருதூர் புகழப்படுகிறது.
4. சிவாலயங்களில் பொதுவாக ஈசனின் இடது பக்கம் அம்பாளின் சன்னதி அமைந்திருக்கும். இந்த தலத்தில் ஈசனுக்கு வலது பக்கத்தில் அம்பாள் சன்னதி அமைந்துள்ளது.
5. இந்த ஆலயம் உருவாக மூலக்காரணமாக அமைந்த பிரம்மதண்டம் ஆலயத்தின் முக்கிய பகுதியான கருவறை அருகே இடது பக்கத்தில் இருப்பதை காணலாம்.
6. கருவறையை சுற்றி ராமேஸ்வரம் லிங்கம், காசி லிங்கம் என்ற பெயர்களில் சிறிய லிங்கங்கள் உள்ளன.
7. திருப்புடைமருதூர் ஆலயத்தின் வடக்குப் பகுதியில் தாமிரபரணி நதி ஓடுகிறது. மற்ற இடங்களில் வேகமாக ஓடும் தாமிரபரணி ஆற்று தண்ணீர், இந்த தலம் அருகே நிதானமான வேகத்துடன் மெல்ல ஓடுகிறது. எனவே இங்கு ஆனந்த குளியல் போடலாம்.
8. நடராஜர் ஆடும் கோலத்தில் தனி சன்னதியில் உள்ளார். இவர் புனுகு வாசனைத் திரவியத்தால் உருவாக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
9. திருப்புடைமருதூர் ஆலயம் அருகில் அத்தாளநல்லூர் ஆதிமூலம் கஜேந்திரவரதர் ஆலயம் மற்றும் வீரவநல்லூர் பூமிநாதர் ஆலயங்கள் உள்ளன. உங்கள் பக்தி யாத்திரையை திட்டமிட்டு அமைத்துக் கொண்டால் இந்த ஆலயங்களுக்கும் சென்று தரிசனம் செய்ய முடியும்.
10. இந்த தலத்து மூலவரை நாறும்பூநாதர் என்று அழைப்பது போல உற்சவரை பூநாதர் என்று அழைக்கிறார்கள்.
11. தைப்பூசம் 10 நாட்கள், ஆனி உத்திரம், ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, கந்தசஷ்டி, பங்குனி உத்திரம் ஆகியவை இந்த தலத்து முக்கிய திருவிழாக்களாகும்.
12. திருமணத்தடை, புத்திரதோஷம், தீராத பிணிகள், குடும்ப கஷ்டங்கள், துன்பங்கள் நீங்கிடவும், குடும்ப ஐஸ்வர்யம் பெறவும், கல்வி, கேள்விகளில் சிறக்கவும், வியாபாரம் விருத்தி அடையவும் இங்கு வேண்டிக் கொள்ளலாம்.
13. வேண்டிக் கொண்ட செயல்கள் நிறைவேறிட சுவாமிக்கு பட்டு வஸ்திரங்கள் சாத்தி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யலாம்.
14. அம்பாளுக்கு புடவை சாத்தி திருக்கல்யாணம், வளையல்கள் போட்டு, தொட்டில் கட்டி வளைகாப்பு மற்றும் படிபாயாசம் படைத்தும் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றலாம்.
15. இறைவன் கொடும் பாவங்கள் செய்தவர்களையும் பக்தி தந்து ஆட்கொள்ளும் செய்திகள் திருப்புடைமருதூர் புராணம் நூலில் உள்ளன.
16. இறைவனைப் 'போற்றி' சொல்லித் துதிப்பதற்கான பாடல்கள் இந்நூலில் பல உள்ளன. அவற்றைத் தொகுத்து அன்பர்கள் பாராயணம் செய்து பல்வகை நலன்களையும் பெறலாம்.
17. இந்த ஆலயத்தின் கோபுர உட்புறச் சுவர்களில் தீட்டப்பட்ட பழம்பெரும் வண்ண ஓவியங்களும், அங்குள்ள மரச் சிற்பங்களும், கற்சிற்பங்களும் சிறந்த கலைப் படைப்புகளாக திகழ்கின்றன.
18. பழம் பெரும் சிவத்தலமான திருப்புடைமருதூர் திருத்தலம், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றாலும் மிக்க பெருமை கொண்டது.
19. இத்தலத்தின் பெருமைகளை விளக்கும் நூல்கள் பல உள்ளன. திருப்புடை மருதூர்ப் பதிற்றுபத்து அந்தாதி, திருப்புடை மருதூர் இரட்டை மணிமாலை, திருப்புடை மருதூர் மும்மணிக் கோவை, திருப்புடைமருதூர்ப் பள்ளு என்பன அவை.
20. சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதியாக இருந்த ரத்தின வேல் பாண்டியன் திருப்புடை மருதூரில் பிறந்தவர். இத்தலத்து இறைவன் பால் ஈர்ப்பு உள்ளவர். திருப்புடை மருதூருக்கும், திருக்கோவிலுக்கும் எண்ணற்ற சேவை செய்துள்ளார்.






