என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
தைப்பூச சிறப்பு
* மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் 12ம் நாள் தைப்பூசத்தன்று தெப்பத் திருவிழா நடைபெறும். சொக்கன், மீனாட்சியுடன் எழுந்தருளி உலாவருவார்கள். இக்குளம் தோண்டும்போது கிடைத்த மிகப்பெரிய கணபதிதான் முக்குறுணிப் பிள்ளையார்.
* தை மாதத்தில் பவுர்ணமியுடன் பூச நட்சத்திரம் சேரும் நாளே தைப்பூசத் திருநாளாகும். உலகில் முதலில் நீரும். அதிலிருந்து உயிர்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. இவை நடை பெற்ற நாள்தான் தைப்பூச நாள். இத்திருநாள் முருகன் அருளும் எல்லா திருத்தலங்களிலும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகின்றன. தைப்பூசத்தன்றுதான் வள்ளியை முருகன் மணம் புரிந்து கொண்டார்.
* ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று சிதம்பரம் நடராஜர் ஆலய சிவகங்கை தீர்த்தக்கரையில் தீர்த்தவாரியும், நடன தரிசனமும் சிறப்பாக நடைபெறுகின்றன. இவ்விழா தில்லையில் பத்து நாட்கள் நடைபெறும். இந்த தாண்டவம் காண வியாக்ரபாதர், பதஞ்சலி, ஜைமுனி ஆகிய மூன்று முனிவர்களின் சிலைகளை ஒரே பீடத்தில் எழுந்தருளச் செய்து சிவகங்கை கரைக்கு கொண்டு வருவர்.
* திருப்பைஞ்சீலி சிவாலய குடைவரை சந்நிதியில் சிவனும் அம்பாளும் முருகருடன் காட்சி தருகின்றனர். அவர்கள் காலடியின் கீழ் குழந்தை வடிவ எமனைக் காணலாம். இங்கு தைப்பூசத்தன்று சிவன் எமனுக்கு பதவி அருளும் விழா நடைபெறும்.
* பாபநாசம் பாபநாகர் ஆலயத்தில் தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்பிடை நின்று ஆடிக்காட்டியதால், அன்றைய தினம் நந்திக்கு சந்தனக் காப்பிடுவார்கள்.
* தைப்பூசத்தன்று வடலூரில் ஜோதி தரிசனம் காணலாம். இதை சத்ய ஞான சபையில் மாதந்தோறும் பூசத்தன்று 6 திரைகளை விலக்கி பாதி தரிசனம் காண வைப்பர். ஆனால் தைப்பூசத்தன்று மட்டும் 7 திரைகளை முழுவதும் விலக்கி முழுமையான ஜோதி தரிசனத்தை கண்ணாடியில் காட்டுவார்கள். 1871&ல் பிரஜோபதி வருடத்தில் வள்ளலார் ராமலிங்க அடிகள் முதல் வழிபாட்டைத் தொடங்கி வைத்தார். அது இன்றளவும் நடைபெறுகிறது. அவர் ஏற்றிய அடுப்பு அணையா அடுப்பாக பக்தர்களுக்கு இடைவிடாது அன்னதானமளித்து வருகிறது.
* கதித்தமலை முருகன் கோவிலில் தைப்பூசம் கழித்த 4&ம் நாளன்று காலை மலைமீது தேரோட்டம் நடைபெறும். இவ்வாலயம் மலைமீது அமைந்துள்ளதால் இங்கு தென்கிழக்கே ஒரு பாம்புப் புற்று பெரிதாக உள்ளது. இது ஒரு அதிசயப்புற்று. உத்தராயன புண்ணிய காலமாகிய தை முதல் ஆனி வரை வளர்ந்தும், தட்சிணாயன புண்ணிய காலமான ஆடி முதல் மார்கழி வரை தேய்ந்தும் வருவது சிறப்பாகும்.
* செல்வம் வேண்டுபவர்கள் வியாழனன்று வரும் பூசத்துன்று மகாலட்சுமி பூஜையை ஆரம்பிப்பார்கள். தைப்பூசத்தன்று சிவன், முருகன், மகாலட்சுமி கோவில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவதைக் காணலாம்.