என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

கண்ணகியும் ஆற்றுகால் பகவதி அம்மனும்
- ஆற்றுகால் கோவிலில் நடக்கும் பொங்காலை விழாவில் இக்கருத்தை மையப்படுத்தியே திருவிழா கொண்டாடப்படுகிறது.
- விழாவின் முதல் நாள் முதல் இறுதி நாள் வரையிலான நிகழ்வுகள் அனைத்தும் சிலப்பதிகார கதையை மையப்படுத்தியே அமைந்திருக்கும்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த ஆற்றுகாலில் குடிகொண்டிருக்கும் பகவதி அம்மனை சிலப்பதிகார நாயகி கண்ணகியின் மறு அவதாரமாக கருதுகிறார்கள்.
சிலப்பதிகாரம், தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையானது. இதன் நாயகி கண்ணகி.
இவருக்கும் சோழ நாட்டின் காவிரி பூம்பட்டினத்தை சேர்ந்த கோவலனுக்கும் திருமணம் நடந்தது.
ஆடல், பாடல்களில் ஆர்வம் கொண்ட கோவலன் திருமணம் முடிந்த பின்னர் ஆடல்கலையில் சிறந்து விளங்கிய மாதவியின் மீது ஈர்ப்பு கொண்டு அவரோடு சென்று விட்டார்.
சில காலங்களுக்கு பிறகு அவர் மாதவியை பிரிந்து மீண்டும் கண்ணகியை தேடி வந்தார்.
கோவலனும், கண்ணகியும் மீண்டும் புது வாழ்க்கையை தொடங்க அவர்களுக்கு பணம் தேவைப்பட்டது.
இதற்காக கண்ணகி, தான் அணிந்திருந்த கால் சிலம்பை கழற்றி கொடுத்து அதனை விற்று கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை தொடங்கலாம் எனக் கூறினார்.
கண்ணகியின் யோசனைபடி கோவலன், கண்ணகியின் சிலம்பை விற்க பாண்டிய நாட்டின் மதுரைக்கு சென்றார்.
அங்கு பாண்டிய மன்னனின் அரண்மனை பொற்கொல்லனை சந்தித்தார்.
அவரிடம் கண்ணகியின் காற்சிலம்பை விற்று தரும்படி கேட்டார்.
கோவலன் மதுரைக்கு செல்லும் முன்பே பாண்டிய நாட்டு ராணியின் காற் சிலம்பு காணாமல் போயிருந்தது.
இதனை திருடிய தாக அரண்மனை பொற் கொல்லன் மீது பழி சுமத்தப்பட்டது.
அதில் இருந்து தப்பிக்க பொற்கொல்லன் யோசித்து கொண்டிருந்த வேளையில்தான், கோவலன் அவரை சந்தித்து கண்ணகியின் காற்சிலம்பை காட்டி அதனை விற்று தரும்படி கேட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பொற்கொல்லன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தார்.
அவர் கோவலனை, பாண்டிய மன்னனின் அரச சபைக்கு அழைத்து சென்று அங்கு அரசியின் காற்சிலம்பை திருடியது கோவலன் என கூறினார். இதை கேட்டதும் அரசன், ஆத்திரமடைந்து கோவலனுக்கு மரண தண்டனை விதித்தார். கோவலன் கொல்லப்பட்டார்.
இதற்கிடையே காற்சிலம்பை விற்க சென்ற கணவன் கோவலன் இன்னும் வீடு திரும்பவில்லையே என்று கண்ணகி பரிதவித்து கொண்டிருந்தார்.
நீண்ட நேரமாகியும் அவர் வராததால் கோவலனை தேடி கண்ணகி மதுரைக்கு வந்தார்.
மதுரை வந்த பின்புதான் கோவலன் கொலையுண்ட தகவலை அறிந்தார். அதிர்ச்சி அடைந்த அவர் உடனே பாண்டிய மன்னனின் அரசவைக்கு சென்று தன்னிடம் இருந்த மற்றொரு காற்சிலம்பை காட்டி நீதி கேட்டார்.
கண்ணகியின் ஆவேசமும், அவர் பால் இருந்த நியாயத்தையும் புரிந்து கொண்ட மன்னன், அங்கேயே உயிரிழந்தான்.
அதன்பின்பும் ஆவேசம் அடங்காத கண்ணகி, மதுரை நகரை தீக்கிரை யாக்கினார். அதன்பின்பு அதே ஆவேசத்துடன் சேர நாட்டின் கொடுங்காளூர் நோக்கி புறப்பட்டார்.
மதுரையில் இருந்து புறப்பட்டு கொடுங்காளூர் செல்லும் வழியில் கரமனையாறும், கிள்ளியாறுக்கும் இடையே உள்ள ஆற்றுகால் பகுதியில் தங்கி இளைப்பாறினார்.
அப்போது அங்கிருந்த முதியவர்கள், கண்ணகியிடம் விபரம் கேட்டு அவரை ஆசுவாசப்படுத்தினார்கள்.
அவரது கோபத்தை தணித்து சாந்தப்படுத்தினார்கள். இதனால் சாந்தடைந்த கண்ணகி, அங்கேயே குடிகொண்டதாகவும், இதனாலேயே அவருக்கு ஆற்றுகாலம்மா என்ற பெயர் ஏற்பட்டது.
ஆற்றுகால் கோவிலில் நடக்கும் பொங்காலை விழாவில் இக்கருத்தை மையப்படுத்தியே திருவிழா கொண்டாடப்படுகிறது.
விழாவின் முதல் நாள் முதல் இறுதி நாள் வரையிலான நிகழ்வுகள் அனைத்தும் சிலப்பதிகார கதையை மையப்படுத்தியே அமைந்திருக்கும்.






