search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து 179 ரன்னில் சுருண்டு பரிதாபம்
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து 179 ரன்னில் சுருண்டு பரிதாபம்

    • முதல் இன்னிங்சில் கேமரூன் கிரீன் ஆட்டமிழக்காமல் 174 ரன்கள் குவித்தார்.
    • நாதன் லயன் 4 விக்கெட் வீழ்த்த நியூசிலாந்து சொற்ப ரன்களில் சுருண்டது.

    நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று வெலிங்டனில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா கேமரூன் கிரீன் சதத்தால் நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்திருந்தது. கேமரூன் கிரீன் 103 ரன்னுடனும், ஹேசில்வுட் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. கேமரூன் கிரீன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார். அவருக்கு ஹேசில்வுட் உறுதுணையாக இருந்தார். கேமரூன் கிரீன் 150 ரன்னை கடந்தார். கடைசி விக்கெட்டாக ஹேசில்வுட் 22 ரன்னில் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா 115.1 ஓவர்களில் 383 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. கேமரூன் கிரீன் 174 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். ஹென்றி 5 விக்கெட் வீழ்த்தினார்.

    கடைசி விக்கெட்டுக்கு கிரீன்- ஹேசில்வுட் ஜோடி 116 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசி விக்கெட்டுக்கு அதிக ரன் எடுத்த ஜோடி என்ற சாதனையை படைத்தது. இதற்கு முன்பு 2004-ம் ஆண்டு மெக்ராத்- கில்லஸ்பி ஜோடி 114 ரன்கள் சேர்த்ததே அதிக பட்சமாக இருந்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து திணறியது. அந்த அணி 29 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்தது. பின்னர் பிலிப்ஸ்- ப்ளண்டெல் ஜோடி நிதானமாக விளையாடியது. பிலிப்ஸ் அரை சதம் அடித்தார்.

    அவர் 72 ரன்னிலும், ப்ளெண்டெல் 33 ரன்னிலும், ஹென்றி 42 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இதனால் நியூசிலாந்து 43.1 ஓவரில் 179 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட் கைப்பற்றினார்.

    கேமரூன் கிரீன்

    204 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா 4 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தது. ஸ்மித் ரன் எதுவும் எடுக்காமலும், லபுசேன் 2 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

    இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 13 ரன்கள் எடுத்து இருந்தது. கவாஜா 5 ரன்னுடனும், நாதன் லயன் 6 ரன்னுடனும் களத்தில இருந்தனர். தற்போது வரை ஆஸ்திரேலியா 217 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    Next Story
    ×