என் மலர்
OTT

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து ஓர் பார்வை
- தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் கண்டு களிக்கலாம்.
- நாளை மறுநாள் முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் காணலாம்.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
டியூட்
கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். இப்படத்தில் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது. 'டியூட்' படம் ஓ.டி.டி. தளத்தில் எப்போது வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, 'டியூட்' படம் வருகிற 14-ந்தேதி வெள்ளிக்கிழமை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதனை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் கண்டு களிக்கலாம்.
தெலுசு கடா
சித்து ஜொன்னலகட்டா, ராசி கன்னா மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'தெலுசு கடா'. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படத்தை பிரபல ஸ்டைலிஸ்ட் நீரஜா கோனா இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில் வருகிற 14-ந்தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆக இருக்கிறது. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானபோது கலவையான விமர்சனங்களைப் பெற்றது, தற்போது ஓடிடியில் பார்வையாளர்களை ஈர்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டெல்லி க்ரைம் சீசன் 3
டெல்லி க்ரைம் சீரிஸின் 3 மூன்றாவது சீசன் வருகிறது. இதில் ஹுமா குரேஷி புதிய வில்லியாகத் தோன்றுகிறார். ஷெஃபாலி ஷா மீண்டும் டிசிபி வர்திகா சதுர்வேதி கதாபாத்திரத்திலும், ஜெயா பட்டாச்சார்யா விமலா பரத்வாஜ் ஆகவும் நடிக்கின்றனர். நாளை மறுநாள் முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் காணலாம்.
தசாவதார்
சுபோத் கனோல்கர் இயக்கிய இந்த மராத்தி த்ரில்லரில் திலீப் பிரபாவல்கர், பரத் ஜாதவ், மகேஷ் மஞ்ச்ரேக்கர், சித்தார்த் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். வயதான தசாவதார் நடிகர் தனது கடைசி நாடகம் மூலம் ஆன்மீக மற்றும் கலாச்சாரப் போரில் சிக்குகிறார். வருகிற 14ந்தேதி முதல் ஜீ5 தளத்தில் பார்க்கலாம்.
ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த்
உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்த ஆக்ஷன் அட்வென்ச்சர் படம், ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் (2022) படத்தின் தனித்துவமான தொடர்ச்சியாகும். இது ஜுராசிக் பார்க் பிரான்சைஸின் ஏழாவது படம். ஸ்கார்லெட் ஜோஹன்சன், மஹர்ஷலா அலி, ஜொனாதன் பெய்லி ஆகியோர் நடித்துள்ளனர். மூன்று டைனோசர் இனங்களின் டிஎன்ஏ-வை சேகரிக்க ஒரு விஞ்ஞானிகள் குழு ஆபத்தான தீவுக்குப் பயணிக்கிறது. நவம்பர் 14ந் தேதி ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.
இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும் ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளது.






