என் மலர்
சினிமா செய்திகள்

90-களில் வலம் வந்த முன்னணி கதாநாயகிகள்.. இப்போ எங்கே? எப்படி இருக்கிறார்கள்?- ஒரு பார்வை
1990 கால கட்டத்தில் தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த வெளி மாநில கதாநாயகிகள் பலர் திருமணமாகி சொந்த ஊரில் செட்டில் ஆகிவிட்டனர்.
ரூபினி- 1987 முதல் 1994 வரை ரஜினி, கமல் மற்றும் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்த ரூபினி 1995ம் ஆண்டு மோகன் குமார் என்பவரை திருமணம் செய்தார். அவருக்கு அனிஷா ரயானா என்ற மகள் உள்ளார்.
மும்பையில் வசித்து வரும் ரூபினி இயற்கை மருத்துவராகவும், மகளுடன் இணைந்து நடனபயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறார்.
சிவரஞ்சனி: 1990-1999 வரை தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் கதாநாய–கியாக ஜொலித்து வந்தவர் சிவரஞ்சனி. பூனைக்கண் அழகி என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சிவரஞ்சனி மனசார வாழ்த்துங்களேன், தலைவாசல், தங்கமனசுக்காரன், சின்ன மாப்ளே, பொன் விலங்கு உள்பட பல படங்களில் நடித்தார். மெதுவா தந்தி அடிசாமி என அரவிந்தசாமியுடன் அவர் ஆடிய நடனம் ரசிகர்களை இருக்கையில் ஏறி ஆட வைத்தது.
சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போதே நடிகர் ஸ்ரீகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ரோஷன், ரோகன் என்ற 2 மகன்களும், மேதா என்ற மகளும் உள்ளனர்.
ரோஷன் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். விரைவில் படம் திரைக்கு வர இருக்கிறது. மகள் மேதா கனடாவில் படித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய சிவரஞ்சனி குடும்பத்துடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். அவரது தந்தையும், தாயாரும் அவருடன் வசித்து வருகிறார்கள்.
ரவளி: 1995-ம் ஆண்டு வெளியான திருமூர்த்தி படத்தில் விஜயகாந்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரவளி தொடர்ந்து சத்யராஜ், பார்த்திபன், நெப்போலியன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.
2007-ம் ஆண்டு நீலிகிருஷ்ணா என்பவரை ரவளி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
செங்குருவி, செங்குருவி என்ற பாடலுக்கு விஜயகாந்துடன் ஆடி பாடிய ரவளி தற்போது ஆளே அடையாளம் தெரியாமல் தோற்றமளிக்கிறார். கணவர் மற்றும் மகள்களுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.
நக்மா: நக்மா... தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி திரையுலக ரசிகர்கள் மறக்க முடியாதவர். சினிமாவில் இருந்து விலகிய நக்மா மும்பையில் வசித்து வருகிறார். அரசியல் மற்றும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்.
மோகினி: வா வா அன்பே... தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு... அங்கே சென்று அன்பை சொல்லு என ஈரமான ரோஜாவில் இடம் பெற்ற பாடலில் மோகினியின் காந்த கண் அழகு இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத வகையில் இருந்து வருகிறது.
தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழியில் பல படங்களில் பிசியாக நடித்து வந்த மோகினி கடந்த 2006ம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார்.
தஞ்சாவூரில் ஸ்ரீனிவாசன் ஐயங்கார்-சுந்தரி ஆகியோருக்கு மகளாக பிறந்த மோகினி கிறிஸ்தவ மதத்திற்கு மாறி கிறிஸ்தவ போதகராக இருந்து வருகிறார்.
மந்த்ரா: பிரியம் என்ற படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மந்த்ரா. தொடர்ந்து லவ்டுடே, ரெட்டை ஜடை வயசு, பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்காகவுரி உள்பட பல படங்களில் நடித்து ஒரு கலக்கு கலக்கியவர் மந்த்ரா. சினிமாவில் பிசியாக நடித்து கொண்டிருந்த மந்த்ரா, நிவாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அவருக்கு ஒரு மகள் இருக்கிறார் திருமணத்திற்கு பிறகு பல வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்த மந்த்ரா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஐதராபாத்தில் தற்போது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
மாளவிகா: கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு, வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடல்களால் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் மாளவிகா. 2007-ம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 38 வயதாகும் மாளவிகாவுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். உடல் கட்டுகோப்பு விஷயத்தில் அக்கறை கொண்ட மாளவிகா யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பகிர்ந்து ஆரோக்கியத்திற்கு ஊக்கம் அளித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஒரு படத்தில் தற்போது நடித்துள்ளார்.






