search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கதாநாயகனாக களமிறங்கும் டான்ஸிங் ரோஸ் ஷபீர்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
    X

    ஷபீர் கல்லராக்கல்

    கதாநாயகனாக களமிறங்கும் 'டான்ஸிங் ரோஸ்' ஷபீர்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

    • இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’பர்த்மார்க்’.
    • இந்த படம் மிஸ்ட்ரி-டிராமாவாக இரண்டு முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதை.

    இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் மிஸ்ட்ரி திரில்லர் திரைப்படம் 'பர்த் மார்க்'. இந்த திரைப்படத்தில் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' என்ற கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பால் புகழ் பெற்ற நடிகர் ஷபீர் கல்லராக்கல் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மிர்னா நடிக்கிறார். மேலும், தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி.ஆர். வரலட்சுமி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்திற்கு உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்கிறார்.


    இப்படம் குறித்து இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் கூறும்போது, 'பர்த் மார்க்' கதை ஒரு மிஸ்ட்ரி-டிராமாவாக இரண்டு முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதை. இந்த கதை 90-களில் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. கார்கில் போருக்குப் பிறகு தாயகம் திரும்பிய டேனி என்ற சிப்பாய், தன்வந்திரி என்ற 'Birth Village'-க்கு கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியை அழைத்து செல்கிறார். எந்தவிதமான சிக்கல்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் இல்லாமல் இயற்கையான பிரசவத்திற்குப் பெயர் போன இடம் இந்த கிராமம். இது போன்ற கிராமங்கள் இந்தியாவின் பல பகுதிகளில் இன்றும் உள்ளது.


    படத்தின் முன்னணி கதாபாத்திரங்கள் இந்த கிராமத்தில் தங்கியிருந்தபோது, அவர்கள் ஏதோ வித்தியாசமானதாக உணரும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட கற்பனையான கதையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கதையை கொரோனா காலக்கட்டத்தில் உருவாக்கினேன். நான் இந்தியாவின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள இது போன்ற கிராமங்களைப் பார்த்துள்ளேன். அறுவை சிகிச்சை சிக்கல்கள் இல்லாமல் இயற்கையான பிரசவத்திற்கு உதவும் வகையிலான இந்த பாரம்பரியத்தை பல தம்பதிகள் விரும்புவதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.


    படத்தில் சில மர்மங்கள் மற்றும் சஸ்பென்ஸ் உள்ளது. ஆனால், அதை விட எமோஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். குழந்தை பிறக்கும் செயல்முறை ஆண்கள் நினைப்பது போல் எளிதானது அல்ல. உடல்ரீதியான சவால்கள் தாண்டி மனரீதியாக பெண்கள் அனுபவிக்கும் மன உளைச்சல்கள் குறித்தும் பேசப்பட வேண்டும். இது போன்றதொரு காலக்கட்டத்தில் தன் மனைவியுடன் கணவன் வரும்போது அவன் மீண்டும் பிறக்கிறான். மேலும், இது தன் தாய் மீதும் பெண்கள் மீதும் மரியாதையை அவனுக்கு ஏற்படுத்துகிறது" என்று கூறினார்.


    கிராமத்தின் இயற்கை சூழலை கொண்டு வர வேண்டு என்பதற்காகவே தமிழ்நாடு மற்றும் கேரளா இடையே அமைந்துள்ள மறையூர் கிராமத்தின் குறுக்கே ஒரு கிராமத்தை படக்குழு அமைத்துள்ளது. 90-களில் நடக்கும் கதை என்பதால் அதற்கேற்றபடி, கதையின் ஒவ்வொரு பிரேமும் கச்சிதமாக அமைய தேவையான ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×