என் மலர்
சினிமா செய்திகள்

எம்.என்.ராஜம், எஸ்.பி.முத்துராமனுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது அறிவிப்பு
- 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கு பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- 2025-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கு திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்து ராமன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந்தேதியன்று செய்தித்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கு பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவரான நடிகை எம்.என். ராஜம் அவர்கள், சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கி, 1949-ல் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமான இவர், 1950 மற்றும் 1960களில் முன்னணி நாயகியாக விளங்கினார். 200-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த இவர், பின்னர் தாயார், மாமியார் போன்ற பல்வேறு துணை வேடங்களிலும் சிறப்பாக நடித்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.
2025-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கு திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்து ராமன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த இயக்குநர்களில் ஒருவராவார். 1935 ஏப் ரல் 7-ந்தேதி காரைக்குடியில் பிறந்த இவர், 1960-ல் களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி இயக்குநராகத் தொடங்கி, பின்னர் 1970 முதல் 1990 வரை தமிழ் சினிமா வில் மிகவும் வெற்றிகரமான வணிக இயக்குநராக உயர்ந்தார். 70-க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களை இயக்கியுள்ளார்.
தமிழ் திரைப்படத்துறைக்கு அளித்த பங்களிப்புகளுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். எளிமை, நேர்மை, பணிவு ஆகியவற்றுக்கு பெயர் பெற்ற இவர், தமிழ் சினிமாவின் வணிக வெற்றியை தீர்மானித்த மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள எம்.என்.ராஜம், எஸ்.பி. முத்துராமன் ஆகிய இருவருக்கும் ரொக்கப் பரிசாக தலா ரூ.10 லட்சமும், நினைவுப் பரிசும் முதலமைச்சரால் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






