என் மலர்
சினிமா

சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் - தமிழ் ராக்கர்ஸ் அறிவிப்பு
சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #TamilRockers
தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதப்படும் ஒரு இணையதளம், தமிழ் ராக்கர்ஸ். புதிய தமிழ் படங்கள் திருட்டுத்தனமாக தமிழ் ராக்கர்ஸில் பதிவேற்றப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. பல வருடங்களாக முயற்சித்தும் இந்த தளத்துக்கு பின்னால் செயல்படுபவர்களை பிடிக்கவோ, தளத்தை முடக்கவோ முடியவில்லை.
சமீபத்தில், விஜய் நடித்து வெளிவந்த ‘சர்கார்’ படத்தை ‘ரிலீஸ்’ அன்றே வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பெயரில், ஒரு சவால் விடப்பட்டது. சொன்ன மாதிரியே ‘சர்கார்’ படம் ரிலீஸ் அன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இது, தமிழ் பட உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதேபோல் ரஜினிகாந்த் நடித்து வெளிவர இருக்கும் ‘2.0’ படத்தையும் ரிலீஸ் அன்றே வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பெயரில் சவால் விடப்பட்டு இருக்கிறது. இது, தமிழ் பட உலகில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், தங்கள் பெயரை பயன்படுத்தி சமூகவலைதளங்களில் பரவும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அறிவித்துள்ளது. தற்போது சமூகவலைதளங்களில் பகிரப்படும் பதிவுகளுக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
‘‘டுவிட்டரிலோ மற்ற சமூக வலைதளங்களிலோ நாங்கள் இல்லை. சமூக வலைதளங்களில் எங்களின் பெயரை பயன்படுத்தி யாராவது பதிவிட்டால், அது போலியே. அதுபோன்ற ஐ.டி.க்களையும், அவர்கள் பரப்பும் வதந்திகளையும் நம்பாதீர்கள்’’ என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.
Next Story






