search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அகிலன் திரைக்கதை - வசனத்தில் டி.எம்.சவுந்தரராஜன் நடித்த பட்டினத்தார்
    X

    அகிலன் திரைக்கதை - வசனத்தில் டி.எம்.சவுந்தரராஜன் நடித்த பட்டினத்தார்

    அகிலன் திரைக்கதை - வசனத்தில் டி.எம்.சவுந்தரராஜன் நடித்த பட்டினத்தார்

    பிரபல இசை அமைப்பாளராகத் திகழ்ந்த ஜி.ராமநாதன், 1962-ல் பட்டினத்தார் வரலாற்றை திரைப்படமாகத் தயாரித்தார்.

    பட்டினத்தாராக பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் நடித்தார். எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் இடைவிடாமல் பின்னணி பாடிக்கொண்டிருந்த சவுந்தரராஜன், பட்டினத்தார் மீது கொண்ட பற்றின் காரணமாக படத்தில் நடிக்க முன்வந்தார். முக்கிய வேடத்தில் எம்.ஆர்.ராதா நடித்தார்.

    இந்தப் படத்திற்கான திரைக்கதை, வசனத்தை தஞ்சை ராமையாதாசும், அகிலனும் இணைந்து எழுதினார்கள். படத்தை கே.சோமு டைரக்ட் செய்தார். டி.எம்.சவுந்தரராஜன், தன்னால் சிறப்பாக நடிக்கவும் முடியும் என்பதை, இப்படத்தின் மூலம் நிரூபித்தார். ஜி.ராமநாதன் இசை அமைப்பில். டி.எம்.எஸ். குரலில் பாடல்கள் சிறப்பாக அமைந்தன. அகிலன், தஞ்சை ராமையாதாஸ் வசனங்கள், ஆழமாக அமைந்திருந்தன. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம், பிரமாதமாக ஓடியது.

    அகிலன் புகழ் பெற்ற எழுத்தாளராக இருந்தும்-எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் படங்களின் கதாசிரியராக இருந்தும் வசதியுடன் வாழவில்லை. வரவை விட செலவு அதிகமாக இருந்தது. நிரந்தரமான வேலை ஒன்றில் இருந்து கொண்டு, எழுத்துப்பணியிலும், கலைப்பணியிலும் ஈடுபடுவது நல்லது என்று, அவர் மீது அன்பு கொண்ட நண்பர்கள் எடுத்துக் கூறினார்கள்.

    அதிர்ஷ்டவசமாக, சென்னை வானொலி நிலையத்தில் சொற்பொழிவுத்துறை அமைப்பாளர் வேலை காலியாக இருந்தது. அதில் அகிலன் சேர்ந்தார். அந்தப்பணி அவருடைய இலக்கிய ஆர்வத்துக்கு இசைந்ததாக இருந்தது. அதே சமயம், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.

    1966-ல் இப்பணியில் சேர்ந்த அகிலன், பிறகு தென்னிந்திய முதன்மை அமைப்பாளராகப் பதவி உயர்வு பெற்றார். 1982-ல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இலக்கியத்துக்காக இந்தியாவில் வழங்கப்படும் மிகப்பெரிய விருதான "ஞானபீட விருது'' பெற்றவர், அகிலன். அவர் எழுதிய "சித்திரப்பாவை'' என்ற நாவலுக்காக இந்த விருது கிடைத்தது.

    1977 செப்டம்பரில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் அகிலனிடம் ஞானபீட விருதை (தங்கப்பதக்கத்துடன் ரூ.1 லட்சம் ரொக்கம்) அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் வழங்கினார். ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அகிலன் என்பது குறிப்பிடத்தக்கது. (அகிலனை அடுத்து, ஜெயகாந்தன் சமீபத்தில் இந்த விருதைப் பெற்றார்.)

    அகிலனுக்கு "நற்கதை நம்பி'' என்ற பட்டத்தை குன்றக்குடி ஆதீனத்தின் சார்பாக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, ஏற்கனவே முதல்-அமைச்சராக இருந்தபோது வழங்கினார். அகிலனின் நாவல்களும், சிறுகதைத் தொகுதிகளும், தமிழக அரசின் பரிசுகளைப் பெற்றுள்ளன. பல கதைகள் இந்தி, வங்காளம், கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பல கதைகள், பாட புத்தகங்களாக வைக்கப்பட்டுள்ளன.

    ரஷியா, மலேசியா, சிங்கப்பூர் உள்பட பல நாடுகளில் அகிலன் சுற்றுப்பயணம் செய்துள்ளார். திருமண விழாக்களில் நடத்துவதற்கென்றே இவர் எழுதிய "வாழ்வில் இன்பம்'' என்ற நாடகத்தையும், "உயிர்ப்பலி'' என்ற நாடகத்தையும் (தாகூரின் கதை) டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடகமாக நடத்தினர்.

    அகிலனின் "சித்திரப்பாவை'', "வானமா பூமியா'', "நெஞ்சின் அலைகள்'' ஆகிய கதைகள், டெலிவிஷன் தொடர்களாக ஒளிபரப்பாயின. "நெஞ்சின் அலைகள்'' தொடருக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் அகிலனின் மகனான அகிலன் கண்ணன். இலக்கியத்தில் அரும்பெரும் சாதனைகள் புரிந்த அகிலன் 1988 ஜனவரி 31-ந்தேதி காலமானார்.
    Next Story
    ×