search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    ஒலா எலெக்ட்ரிக் பெயரில் போலி வலைதளம், கோடிக்கணக்கில் மோசடி - 16 பேர் அதிரடி கைது!
    X

    ஒலா எலெக்ட்ரிக் பெயரில் போலி வலைதளம், கோடிக்கணக்கில் மோசடி - 16 பேர் அதிரடி கைது!

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் பெயரில் மோசடி செய்த வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    • கைதானவர்களிடம் இருந்து ஏராளமான மொபைல் போன்கள், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்கியதில் இருந்து ஏராளமான சர்ச்சைகளில் ஒலா எலெக்ட்ரிகி நிறுவனம் சிக்கித் தவிக்கிறது. வாகன முன்பதிவில் துவங்கி, வாகனங்களில் தீப்பிடித்து எரிந்த சம்பவங்கள் என ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை சுற்றி பரபரப்பு தகவல்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன.

    அந்த வரிசையில், ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் மற்றொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. இம்முறை நடந்த பிரச்சினையில் நாடு முழுக்க சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வந்த டெல்லி சைபர் செல் பிரிவு அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்ட கும்பலை கைது செய்துள்ளனர். இந்த கும்பல் நாடு முழுக்க மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பண மோசடி செய்து இருக்கிறது.

    பீகாரை சேர்ந்த ஒருவர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க இந்த வலைதளத்தில் பணம் செலுத்தி இருக்கிறார். எனினும், அவருக்கு ஸ்கூட்டர் டெலிவரி செய்யப்படாமல் இருந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஒலா எலெக்ட்ரிக் பெயரில் போலி வலைதளம் உருவாக்கி, மக்களை ஏமாற்றி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    மேலும் பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த மொபைல் நம்பரையும் கண்காணித்தனர். இதில் மோசடியில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பெங்களூரை சேர்ந்த இரண்டு பேர் இந்த மோசடிக்கு தேவையான போலி வலைதளத்தை உருவாக்கி இருக்கின்றனர். போலி வலைதளத்தை நம்பி பலர் அதில் தங்களின் தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

    பின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் விவரங்களை கொண்டு பயனர்கள் ஒவ்வொருத்தருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்காக போலி வலைதளம் மட்டுமின்றி கால் செண்டர் ஒன்றும் நடத்தப்பட்டு இருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க முயற்சித்த பயனர்கள் இந்த வலைதள விவரங்களை நம்பி அதிகபட்சம் ரூ. 70 ஆயிரம் வரை கட்டணமாக செலுத்தி உள்ளனர்.

    ஸ்கூட்டர் கட்டணம், போக்குவரத்து, காப்பீடு என பல்வேறு பெயர்களில் கட்டணம் செலுத்த வலியுறுத்தி, ஒவ்வொரு கட்டணத்தையும் தெளிவான ஆன்லைன் டிரான்ஸ்ஃபர் செய்ய இந்த மோசடி கும்பல் வலியுறுத்தி இருக்கிறது.

    "பாட்னாவில் போலி கால் செண்டர் நடத்தி வந்த கும்பலை கண்டுபிடித்து, இதுவரை 16 பேரை கைது செய்து இருக்கிறோம். இவர்களிடம் இருந்து 114 சிம் கார்டுகள், 60-க்கும் அதிக மொபைல் போன்கள், ஏழு லேப்டாப்கள், ரூ. 5 கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் அடங்கிய 25 வங்கி கணக்குகளை மீட்டு இருக்கிறோம். இந்த மோசடியில் நாடு முழுக்க ஆயிரம் பேர் ஏமாற்றப்பட்டு உள்ளனர்," என டெல்லி வடக்கு பகுதிக்கான துணை போலீஸ் கமிஷனர் தேவேஷ் மஹ்லா தெரிவித்தார்.

    Next Story
    ×