என் மலர்
கன்னி
2025 புத்தாண்டு ராசிபலன்
வருடத்தின் பிற்பாதி வளர்ச்சி கூடும் கன்னி ராசி நேயர்களே!
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியில் கேது சஞ்சரிக்கிறார். எனவே ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். 6-ல் சனியும், 9-ல் குருவும் இருப்பதால் அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சென்ற ஆண்டு கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் இப்பொழுது கை கூடிவரும். ராகு-கேது பெயர்ச்சிக்குப் பின்னால் உங்கள் முன்னேற்றம் கூடுதலாக இருக்கும்.
புத்தாண்டின் கிரக நிலை
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியில் கேதுவும், 7-ல் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். எனவே மனக் குழப்பம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மனக்கலக்கம் ஏற்படும். பணப்புழக்கம் சிறப்பாக இருந்தாலும் வீண் விரயங்களில் இருந்து விடுபட இயலாது. தன்னம்பிக்கையும், தைரியமும் கைகொடுக்கும். சர்ப்ப கிரகங்களின் ஆதிக்கத்தோடு ஆண்டு தொடங்குவதால் சர்ப்ப தலங்களுக்குச் சென்று யோகபலம் பெற்ற நாளில் வழிபாடு மற்றும் பரிகாரங்களைச் செய்யுங்கள்.
வருடத் தொடக்கத்தில் 6-ல் சனியும், 9-ல் குருவும் சஞ்சரிக்கிறார்கள். எனவே உத்தியோகப் பிரச்சனை படிப்படியாக மாறும். உயர் அதிகாரிகளின் ஆதரவோடு முன்னேற்றம் காண்பீர்கள். குருப்பெயர்ச்சிக்குப் பின்பும், ராகு-கேது பெயர்ச்சிக்குப் பின்பும் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும்.
கடன் சுமை குறையும். கொடுக்கல் - வாங்கல்கள் சீராகும். தொழில் போட்டிகளை முறியடிக்க புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தைப் பொறுத்தவரை பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்சனை படிப்படியாகத் தீரும்.
கும்ப - ராகு, சிம்ம - கேது
26.4.2025 அன்று ராகு-கேதுக்களின் பெயர்ச்சி நடைபெற உள்ளது. உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் ராகுவும், 12-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். '6-ல் ராகு வந்தால் சேரும் தொகை' என்பது பழமொழி. குருப்பெயர்ச்சிக்குப் பிறகு அஷ்டலட்சுமி யோகத்தையும் வழங்கும் விதத்திலேயே ராகுவின் சஞ்சாரம் உள்ளது. எனவே கணிசமான தொகை கைகளில் புரளும். கடமையை செவ்வனே செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பணிபுரியும் இடத்தில் பாராட்டும், புகழும் கூடும். ராகு வழிபாடு யோகம் சேர்க்கும்.
12-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். பக்குவமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். சுபச்செலவுகளை மேற்கொள்வதன் மூலம் வீண் விரயங்களில் இருந்து விடுபட இயலும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதியும், கல்யாணம், கல்வி சம்பந்தமாகவும் செய்த ஏற்பாடுகள் பலன்தரும்.
மிதுன - குரு சஞ்சாரம்
11.5.2025 அன்று குரு பகவான், மிருகசீர்ஷம் 3-ம் பாதத்தில் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அவரது பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிகிறார். 2-ம் இடத்தைப் பார்க்கும் குருவால் தனவரவு தாராளமாக வந்துசேரும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். குடும்ப முன்னேற்றம் கூடும். விலகிய சொந்தங்கள் விரும்பி வந்து இணையும்.
தட்டுப்பாடு தானாக விலகும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்துசேரும். குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. பாதியில் நின்ற கட்டிடப் பணி மீதியும் தொடரும். என்றைக்கோ குறைந்த விலையில் வாங்கிப்போட்ட இடம் இப்பொழுது அதிக விலைக்கு விற்று லாபத்தைக் கொடுக்கும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை மேலதிகாரிகள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். நல்ல சம்பவங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும்.
உடல் நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். ஊர் மாற்றம் திருப்தி தரும். குருவின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் எதிரிகளின் பலம் குறையும். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். உங்கள் செயல்பாட்டில் மற்றவர்கள் குறைகூற முடியாது. உங்கள் முன்னேற்றத்திற்கு குறுக்கீடாக இருந்த மேலதிகாரிகள் இடம் மாறிச் செல்வர். பணி நிரந்தரம் பற்றிய நல்ல தகவல் கிடைக்கும். பிள்ளைகளின் திருமணம் முடிவாகும்.
கும்ப - சனி சஞ்சாரம்
வருடத் தொடக்கம் முதல் கும்ப ராசியிலேயே சனி சஞ்சரிக்கிறார். அவரது பார்வை 3, 8, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே சனியின் பார்வை பலனால் சகோதர வர்க்கத்தினரின் மூலம் நன்மை கிடைக்கும். உங்கள் ராசிநாதன் புதனுக்கு, சனி நட்பு கிரகம் என்பதால் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது. வழக்குகள் சாதகமாக முடியும். 'நிலம், பூமியில் முதலீடு செய்யலாமா?' அல்லது 'விவசாயத்தின் மூலமாக வெற்றி காண இயலுமா?' என்று சிந்திப்பீர்கள்.
கடக - குரு சஞ்சாரம்
வருடத் தொடக்கத்தில் மிதுன ராசிக்குச் செல்லும் குரு பகவான், 8,10.2025 அன்று கடக ராசிக்கு அதிசாரமாகச் செல்கிறார். அங்கு 19.12.2025 வரை இருக்கும் குரு, உச்சம் பெற்றுப் பலம்பெறுகிறார். அவரது பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகிறது.
இதன் காரணமாக நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். முன்னோர் சொத்தில் பங்கு கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பால் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நிரந்தர வருமானம் பெற்று சேமிப்பை பெருக்குவீர்கள். இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும்.
குருவின் வக்ர காலம்
18.11.2025 முதல் 19.12.2025 வரை கடகத்திலும், 20.12.2025 முதல் 31.12.2025 வரை மிதுனத்திலும் குரு வக்ரம் பெறுகிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறுவது யோகம் தான். எனவே இக்காலத்தில் வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக்கொடுப்பர். தாய்வழி ஆதரவு திருப்தி தரும்.
உதிரி வருமானங்கள் வந்து உள்ளத்தை மகிழ்விக்கும். தெளிந்த சிந்தனையோடு செயல்பட்டு திட்டமிட்ட காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அரசியல் சார்ந்தவர்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். இக்காலத்தில் குருவிற்குரிய சிறப்பு தலங்களைத் தேர்ந் தெடுத்து வழிபட்டு வந்தால் நிரந்தரமாக நன்மை கிடைக்கும்.
சனியின் வக்ர காலம்
2.7.2025 முதல் 17.11.2025 வரை, கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். எனவே ஏற்றங்களும், நல்ல மாற்றங்களும் வந்து கொண்டே இருக்கும். தொழிலில் போட்டி அதிகரித்தாலும், அதைக் கடந்து முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள்.
அதே நேரம் உத்தியோகத்தில் சகப் பணியாளர்களிடம் உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி தெரிவிக்க வேண்டாம். சொத்துத் தகராறுகள் மீண்டும் தலைதூக்கலாம். தொழிலில் பழைய பங்குதாரர்கள் விலகிக் கொள்வதாகச் சொல்லி அச்சுறுத்தலாம். இருப்பினும் புதிய பங்குதாரர்கள் வந்திணையும் வாய்ப்பு உண்டு.






