என் மலர்tooltip icon

    கன்னி

    2025 தமிழ் புத்தாண்டு ராசிபலன்

    கவனம் தேவை

    கண்ணியமான கன்னி ராசியினரே..

    எடுத்த காரியத்தை இறுதி வரை போராடி வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியான எண்ணம் உடைய உங்களுக்கு விசுவாசு தமிழ் புத்தாண்டு அமோகமான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.

    வருட கிரகமான சனி பகவான் ராசிக்கு ஏழாமிடத்தில் நின்று கண்டகச் சனியாக பலன் தரப் போகிறார். தனது 3ம் பார்வையால் ராசிக்கு 9ம் மிடமான பாக்கியஸ்தானத்தையும் 7ம் பார்வையால் ராசியையும் பத்தாம் பார்வையால் நான்காம் இடமான சுகஸ்தானத்தையும்பார்க்கிறார்.

    14.5.2025 முதல் குரு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு செல்கிறார். தனது 5ம் பார்வையால் 2ம்மிடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 4ம் மிடமான சுகஸ்தானத்தையும் 9ம் பார்வையால் 6ம்மிடமான ருணரோக சத்ரு ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

    18.5.2025 முதல் ராகு பகவான் ஆறாம் இடமான ருண, ரோக சத்ரு ஸ்தானத்திற்கும் கேது பகவான் 12ம் இடமான அயன சயன விரய ஸ்தானத்திற்கும் செல்கிறார்கள். இதனால் விசுவாச ஆண்டில் உருவாகக்கூடிய பலன்களை பார்க்கலாம்..

    விசுவாவசு ஆண்டின் பொதுவான பலன்கள்

    பொதுவாக அசுப கிரகங்கள் மறைவு ஸ்தானத்தில் வரும் போது சுப பலன்களே நடைபெறும். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பது ஜோதிட பழமொழி. அந்த பழமொழிக்கு ஏற்ப மறைவு ஸ்தானத்திற்கு செல்லும் அசுப கிரகங்களான ராகு-கேதுக்கள் ராசியில் நின்ற காலத்தில் ஏற்பட்ட இன்னல்கள் முடிவுக்கு வரும்.

    தொழில்தானத்திற்கு செல்லும் குரு பகவானால் சில அசவுகரிங்கள் நடக்கலாம். ஆனாலும் அவர் தனது பார்வை பலத்தால் கன்னி ராசியினரின் வாழ்நாள் விருப்பங்களை நிறைவு செய்வார்.

    அதேபோல் சப்தம ஸ்தானத்திற்கு செல்லும் சனி பகவான் தனது பார்வையால் சற்று ஏற்ற இறக்கமான பலன்களை வழங்குவார். எனினும் குரு பார்வை சற்று சாதகமாக இருப்பதால் எதற்கும் அஞ்சாமல் இயல்பான பணியில் ஈடுபடலாம்.

    இந்த கால கட்டத்தில் உங்களின் புகழ், தைரியம், நம்பிக்கை அதிகமாகும். தன வரவு அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களுக்கு தீர்வு கிடைக்கும்.

    மிகக் குறிப்பாக பிரிக்க முடியாமல் உள்ள சொத்து , பாதை இல்லாத சொத்து, பல வருடமாக கோர்ட், கேஸில் உள்ள சொத்துக்கு தீர்வு கிடைக்கும்.

    ஆலயத் திருப்பணி, குரு உபதேசம் கிடைக்கும். ஆன்மீக குருமார்களின் நட்பும், ஆசியும் கிட்டும். முன்னோர்களுக்கு முறையான திதி, தர்ப்பணம் செய்து ஆசி பெற முயல்வீர்கள். நீண்டதூர பிரயாணத்தை தரும் ஆன்மீக சுற்றுலா தலங்களான கேதார்நாத், பத்திரிநாத், கைலாஷ், மானசரோவர் போன்ற தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

    இஷ்ட , குல, உபாசனை தெய்வ வழிபாடு பலிதமாகும் காலம். நெடுந்தூர வெளிநாட்டு பயணம் அல்லது தீர்த்த யாத்திரை செய்ய ஏற்ற காலம்.

    ஏறாத கோவில் இல்லை, செய்யாத வைத்தியம் இல்லை, எனக்கு இனி கடவுள் நம்பிக்கை இல்லை என வருந்தியவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். நீர் நிலைகள் நிறைந்த பகுதி அல்லது நீராதாரம் சிறப்பாக உள்ள பகுதிக்கு வீடு மாற்றிச் செல்வீர்கள். சிலர் வெளி மாநிலம் , வெளிநாட்டிற்கும் இடம் பெயரலாம்.

    உடல் பெருக்கம் ஏற்படும். வாயுத் தொல்லை உருவாகும். எந்த செயலையும் பல முறை யோசித்து திட்டமிட்டு சொல்படுத்தும் தைரியம் இருந்தாலும் கோபம் கூடவே இருந்து குழி பறிக்கும். பூர்வீகச் சொத்து பிரச்சனை சிறிது அதிகமாகும்.

    கூட்டு குடும்பமாக இருந்த அண்ணன், தம்பிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியும் நிலை ஏற்படும் என்பதால் உடன் பிறந்தவர்களுடன் அனுசரித்து செல்ல வேண்டும்.

    பொருளாதாரம்

    ராசிக்கு 2,4,6ம் மிடத்திற்கு குருப் பார்வை இருக்கிறது. 2ம்மிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பார்வை உள்ளதால் ஒருவர் வருமானத்தில் தள்ளாடிய குடும்பம். உபரி லாபத்தால் சீராக இயங்கும். குடும்பத் தேவைகள் நிறைவேறும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டே இருக்கும். வேலைப்பளு கூடினாலும் அதற்கேற்ற வருமானம் கிடைக்கும்.

    சொத்துக்களின் மதிப்பு உயரும். தாயின் மூலம் திரண்ட சொத்துக்கள், பணம், நகைகள் கிடைக்கும். அடமானச் சொத்துக்கள், நகைகளை மீட்கக் கூடிய வகையில் வாழ்வாதாரம் உயரும். விண்ணப்பித்த கடன் தொகை கிடைக்கும்.

    உத்திரம் 2, 3, 4

    மன வலிமை அதிகரிக்கும். எதிர் நீச்சல் போட்டு உழைத்து ஆதாயத்தை அதிகரிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். கவுரவப் பதவிகள், இழந்த பதவிகள்,வேலை கிடைக்கும். முன்னேற்றம் அதிரிக்கும். புத்திர பிராப்தம் உண்டாகும். பங்குச்சந்தை, பந்தய வெற்றி, எதிர்பாராத தொழில் லாபம் போன்றவற்றால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். ஆரோக்கிய குறைபாடு சீராகும்.

    பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம். வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்வாதாரம் உயரும் அழகு, ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வீடு, வாகனம் போன்றவைகள் மூலம் சுப விரயம் உண்டாகும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், சம்மந்திகளிடம் நயந்து பேசவும்.

    அஸ்தம்

    வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். எந்த காரியத்திலும் சுறுசுறுப்பாக இறங்குவீர்கள். கற்ற கல்வி மூலம் நிறைந்த வருமானமும் திரண்ட சொத்துக்களும் சேரும். சகலகலா வல்லவர்களாக இருப்பீர்கள். ஆரோக்கிய குறைபாடு மருத்துவத்திற்கு கட்டுப்படும். குழந்தை பேறு, திருமணம், வீடு, வாகன யோகம் என இந்த ஓராண்டு காலம் அடை மழைதான்.

    அரைகுறையாக நின்ற பணிகள் முழுமையாக முடிவடையும். சுப காரியப் பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவிற்கு வரும். சங்கடங்கள் விலகி நன்மைகள் அதிகரிக்கும். கை விட்டுப் போன பொருட்கள் யாவும் மீண்டும் கிடைக்கும்.

    சித்திரை 1, 2

    எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் உண்டாகும். சுகபோக வாழ்க்கை கிடைக்கும்.லௌகீக நாட்டம் அதிகரிக்கும். பொருளாதார நிலை திருப்தியளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வீடு மாற்றம், வேலை மாற்றம் என விரும்பத் தகுந்த மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளால் சகாயங்கள் உண்டாகும்.

    தொழிலில் லாபம் வருவதற்கு புதிய முயற்சிகளை, யுக்திகளை கடைபிடிப்பீர்கள். தொழில், உத்தியோகம், திருமணம், குழந்தை, வீடு வாகன யோகம், போன்ற அனைத்து விதமான பாக்கியங்களும் உண்டாகும். பிள்ளைகளின் சுப காரியங்கள் கோலாகலமாக நடைபெறும்.

    திருமணம்

    திருமணத் தடை அகலும். ராசியில் உள்ள கேதுவும், 7ல் உள்ள ராகுவும் 18.5.2025 அன்று அகன்றவுடன் சர்ப்ப தோஷ பாதிப்பு முழுமையாக அகலும். அந்த கால கட்டத்தில் குடும்ப ஸ்தானத்திற்கு குருவின் பார்வையும் பதிவதால் மனம் விரும்பிய வரன் கைகூடும். மனதிற்கு பிடித்த காதல் மண வாழ்க்கை அமையும். திருமணத்திற்கு பெற்றோர்கள், பெரியோர்கள் மற்றும் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.

    பெண்கள்

    மனதில் புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். திறமைக்கேற்ப பாராட்டுகளும், அங்கீகாரங்களும் கிடைக்கும். ஆன்மீகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

    பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கணவருடன் அனுசரித்துச் செல்லவும். திருமண வயதில் உள்ள பிள்ளைகளின் திருமணம் பிரம்மாண்டமாக VIP வீட்டு திருமணம் போல் சிறப்பாக நடைபெறும்.

    மாணவர்கள்

    4ம் இடத்திற்கு குரு பார்வை இருப்பதால் அரசு பொதுத் தேர்வு எழுதும் கன்னி ராசி மாணவ, மாணவிகள் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைவார்கள் . உங்களின் திறமை, உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கப் பெறும். பட்ட கஷ்டத்திற்கு நல்ல தீர்வு கிடைக்கும். குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    முதலீட்டாளர்கள், வியாபாரிகள்

    ராசிக்கு 10ம்மிடமான மிதுனம் சில்லறை வணிகத்தை குறிக்கும் இடம் என்பதால் சிறு வியாபாரிகள் பெரும் லாபம் ஈட்டுவார்கள். பங்கு வணிகத்தில் ஆர்வம் ஏற்படும். காப்பீட்டு நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டும்.புதன் தொடர்பான கணிதம், வங்கி, ஜோதிடம், சார்ந்த தொழில்கள் வளரும்.

    வட்டித் தொழில், அடகு பிடித்தல், படப்பிடிப்பு தொழில் செய்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிறு லாபம் காட்டி பெரும் நட்டத்தில் தள்ளிவிடும். சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் , கடத்தல் செய்பவர்கள் சிறை செல்ல நேரும். அரசின் டெண்டர், ஏலம், காண்ட்ராக்ட் எடுக்கும் போது தொழில் வளர்ச்சி பிரம்மாண்டமாக இருக்கும்.

    இக்கால கட்டத்தில் புதிய முதலீட்டை குறைத்து கொள்வதால் விரயத்தை தவிர்க்க முடியும்.மேலும் கூட்டுத் தொழிலையும் தவிர்க்க வேண்டும் அல்லது தொழில் கூட்டாளிகளுடன் கவனமாக இருக்க வேண்டும். ஆன்லைன் வியாபாரம் அதிக லாபத்தைக் கொடுக்கும்.

    உத்தியோகஸ்தர்கள்

    வெளிநாட்டு வாழ்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு உத்தியோக வாய்ப்பு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மிகப் பிரகாசமாகவுள்ளது. வீட்டிலும் வெளியிலும் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். மன சஞ்சலத்தால் ஏற்பட்ட ஆரோக்கிய கேடு சீராகும்.

    நண்பர்கள், வாழ்க்கைத் துணை மூலம் உதவிகள் கிடைக்கும். வாழ்க்கையில் பிடிப்பும், உற்சாகமும் அதிகரிக்கும். சிந்தனை திறன் அதிகரிக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் உண்டு.

    அரசியல்வாதிகள்

    பொது ஜனத்தை குறிக்கும் ஏழாமிடத்திற்கு சனி பகவான் வருவதால் புதிய நட்பு வட்டாரம் உருவாகும். சிலருக்கு புதியதாக அரசியல் நாட்டம் மிகும். அரசியல் கட்சிகள், சங்கங்கள் இயக் கங்களில் முன்னிலை உறுப்பின ராகுவீர்கள். பொது காரியங்களில் நாட்டம் மிக்க நீங்கள், எல்லாச் செயலுக்கு தலைவராகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்.

    தர்ம ஸ்தாபனம், அறக்கட்டளைகள் நிறுவி அன்னதானம், தானதர்மம் செய்பவர்களின் புகழ் பரவும். அதிகார பலமிக்க அரசாங்க பதவி, அரசியல் செல்வாக்கு, தொழில் ஆதாயம் உண்டு. உங்களை நம்பி வந்தவரின் பிரச்சனைகளை எளிதில் தீர்த்து வைப்பீர்கள்.பேச்சாற்றலால் நினைத்ததை சாதிப்பீர்கள்.

    பரிகாரம்

    தினமும் திருக்கோளாற்று பதிகம் பாராயணம் செய்ய வேண்டும் அல்லது ஒலிக்கச் செய்து கேட்க வேண்டும். அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு உணவு தானம் செய்ய வேண்டும். எத்தகைய கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.

    ×