search icon
என் மலர்tooltip icon

    கன்னி

    சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2023

    வசீகரமான கன்னி ராசியினரே இதுவரை உங்கள் ராசிக்கு 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நின்ற சனி பகவான் 6ம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு சென்று ஆட்சி பலம் பெறப் போகிறார். தன் 3ம் பார்வையால் 8ம் இடமான ஆயுள், வம்பு வழக்கு ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 12ம் இடமான விரய, அயன, சயன மோட்ச ஸ்தானத்தையும்,10ம் பார்வையால் 3ம் இடமான சகாய ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.

    ருண, ரோக சத்ரு ஸ்தான சனியின் பலன்கள்: ஆறாம் அதிபதி சனி ஆறில் ஆட்சி பலம் பெறுகிறார். ஆறாமிடம் என்பது உப ஜெய ஸ்தானம். ஒரு மனிதனுக்கு வாழ்வில் உன்னதமான வெற்றியை உயர்ந்த நிலையைத் தருவதில் ஆறாமிடம் முதன்மை வகிக்கிறது. ஆறாமிடம் எனும் பொருள் கடன் இருந்தால் மட்டுமே தன் முயற்சியால் (3ம் பாவகம்) தொழில் செய்து (10ம் பாவகம்)லாபம்(11ம் பாவகம்) எனும் இன்பத்தை அனுபவிக்க முடியும்.

    இதையே வேறு விதமாக சொன்னால் பொருள் கடன் மிகுதியாக இருக்கும் ஒருவரே பொருளீட்ட,உழைக்க முயற்சி செய்து லாபம் ஈட்டுவார். இந்த சனிப் பெயர்ச்சியில் ஆறாமிடமான மறைவு ஸ்தானத்திற்கு வரும் சனி பகவான் 8, 12,3 ஆகிய இடங்களை பார்வை செய்வதால் 3,6,8,12 ஆகிய மறைவு ஸ்தானங்கள் இயங்குகின்றன. மறைவு ஸ்தானங்கள் இயக்கங்கள் மதில் மேல் பூனை என்பதால் சிறப்பித்துச் சொல்லக் கூடிய பலன் இல்லை என்றாலும் , சில நன்மைகளும் கன்னி ராசிக்கு கிடைக்கப் போவதில் எந்த சந்தேகமும் இல்லை. மறைவு ஸ்தான அதிபதிகள் வலுப் பெறக்கூடாது.

    கெட்டவன் கெட்டால் தான் ராஜ யோகம். ருண, ரோக, சத்ரு ஸ்தானாதிபதி வலுப் பெறுகிறார். ருணம்-கடன், ரோகம்- வியாதி, சத்ரு - எதிரி இந்த மூன்றும் உங்களை ஆட்சி செய்யப் போகிறது. இதனால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கேட்ட இடத்திலும் கேட்காத இடத்திலும் கூட கடன் கிடைக்கும். வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்க உங்கள் வீட்டு வாசலில் காத்து இருப்பார்கள். பண வரவு உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். வழக்கு வியாஜ்ஜியங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதிகளின் அறிகுறி தோன்றும், எனவே ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அரசியல்வாதிகளுக்கு சத்ரு ஜெயம் உண்டு. மாணவ மாணவிகளுக்கு போட்டித் தேர்வில் வெற்றி வாய்ப்பு அதிகம்.

    3ம் பார்வை பலன்: சனியின் 3ம் பார்வை 8ம் இடமான ஆயுள் வம்பு , வழக்கு ஸ்தானத்திற்கு இருப்பதால் நித்திய கண்டம் பூரண ஆயுள் . ஆயுள் தீர்க்கம். எவ்வளவு நோய் தாக்கம் இருந்தாலும் ஆயுளுக்கு பங்கம் இல்லை. முன்னோர் வழி சொத்தில் இருந்த வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத பிறர் பணம், வரதட்சணை பணம், எதிர்பாராத தன லாபம், லாட்டரி, புதையல் , உயில். ஆயுள் காப்பீடு போன்ற வகையில் கிடைக்கும். எப்பொழுதோ பதிவான வழக்குகள் இப்பொழுது விசாரணைக்கு வரும். ஜனன கால ஜாதகத்தில் 6,8,12ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசை, புத்தி நடப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்.

    7ம் பார்வை பலன்: சனியின் 7ம் பார்வை 12 ம் இடமான அயன ,சயன, விரய ஸ்தானத்திற்கு இருப்பதால் வெளி நாட்டு வேலை கிடைக்கும். வேலை பார்க்கும் கம்பெனியின் மூலம் பதவி உயர்வுடன் வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவீர்கள். தொழில் அதிபர்களின் நீண்ட நாள் கனவான ஏற்றுமதி இறக்குமதி தொழில் வாய்ப்பு தேடி வரும். வயதானவர்களாக இருந்தால் வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள், பேரன், பேத்திகளுடன் சென்று சிறிது காலம் தங்கி வருவார்கள். எவ்வளவு வருமானம் வந்தாலும் கட்டுக்கடங்காத விரயமும் இருக்கும். பணம் வந்த சுவடும் போன தடமும் தெரியாது. அதீத விரயதால் மன உளைச்சல் அதிகமாகும். கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல் சுபச் செலவுகள், சுப மங்கள விரயம் உண்டாகும். இடது கண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்ய நேரும். நிம்மதியான தூக்கம் வரும்.

    10ம் பார்வை பலன்: சனியின் 10ம் பார்வை 3ம் இடமான சகாய ஸ்தானத்திற்கு இருப்பதால் இடப்பெயர்ச்சி நிச்சயம் உண்டு. உங்களின் திறமையின் மீது நீங்கள் கொண்ட வைராக்கியம், பிடிவாத குணம், ஆளுமை திறன் உங்களின் தொழில், உத்தியோகம் மூலம் உங்களை வெளி உலகிற்கு அடையாளம் காட்டும். உங்களின் முன்னேற்றத்தை தடுத்தவர்கள் காணாமல் போவார்கள். திருமணம் , சடங்கு போன்ற விசேஷங்களில் குடும்பப் பகை, வருத்தம், சம்பந்திகள் சண்டை, பங்காளி பகையும் மறையும். இரு தரப்பினரும் நடந்ததை மறந்து விட்டு கொடுத்து பெருந்தன்மையோடு நடந்து கொள்வீர்கள். கெளரவப் பிரச்சனையால் பல வருடமாக தடைபட்ட குல தெய்வ வழிபாடு தொடரும். கவலைகள் மறைந்து வளம் பெருகும். சகோதர, சகோதரிகளால் பொருள் இழப்பு, நட்டம் ஏற்படும். நீண்ட கால கனவுகளும், முயற்சிகளும், திட்டங்களும், லட்சியமும் பலிதமாகும்.

    சனியின் அவிட்டம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 17.1.2023 முதல் 14.3.2023 வரை

    கன்னி ராசிக்கு 3,8ம் அதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் மூட நம்பிக்கை, அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் அதிகரிக்கும்.சோம்பலும், கோபமும் மிகுதியாகும்.உழைப்பில் ஆர்வம் குறையும் சுய தொழிலில் இருப்பவர்களுக்கு உத்தியோகத்தின் மேல் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சொந்த தொழில் எண்ணம் உதயமாகும். இலவச ஆபர் கொடுப்பவர்கள், முதலீட்டை இரட்டிப்பாக்கி தருவதாக கூறுபவர்களிடம் பணம் கொடுப்பது,ஆன் லைன் வணிகம், ஷேர் மார்க்கட், சொத்து வாங்குதல், விற்றல், ஜாமீன் கையெழுத்து போடுதல் போன்றவற்றில் விழிப்புடன் இருக்க வேண்டும். எதிர் பாலினத்தவரிடம் கவனமாக பழக வேண்டும். வாகனங்களில் கவனமாக சென்று வர வேண்டும்.வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் வேலை பார்க்கும் இடம், வேலையைப் பற்றிய முழு விபரமும் தெரிந்து கொண்டு செல்ல வேண்டும்.

    சதயம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 14.3.2023 முதல் 6.4.2024 வரை

    கோட்சாரத்தில் அக்டோபர் 30, 2023 வரை 8ம்மிடத்திலும் அதன்பிறகு 7மிடத்திலும் சஞ்சரிக்கும் கோட்சார ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் திடீர் அதிர்ஷ்டம் , புதையல் , உயில் சொத்து, தொழில் என பல்வேறு வழிகளில் பொருள் குவியும். தொட்டதெல்லாம் துலங்கும். எந்த வழியிலாவது உங்கள் தேவைக்கு ஏற்ற பொருளாதாரம் கிடைக்கும். கிடைக்கும். பொருளை பன் மடங்காக பெருக்க குறுக்குவழியில் நாட்டம் மிகும்.கூட்டுத் தொழிலில் பிரிவினை ஏற்படலாம். காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சனைகள் அறுவை சிகிச்சையில் சீராகும். அரசு காரியத்தில் எடுக்கும் முயற்சிகள் பெற்றி தரும். கண்ணுக்கு தெரியாத தீய சக்தியை நாடி பொருள் விரயம் செய்வீர்கள்.

    17.6.2023 முதல் 4.11.2023 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலங்களில் இது வரை உங்களைத் துரத்திய அவமானம், நஷ்டம், கவலைகள் விலகும். பொறுப்புகள், கடமைகள் அதிகரிக்கும். பிறரை நம்பி களத்தில் இறங்கி ஏமாற்றம் அடைந்த நீங்கள் சுய நம்பிக்கையில் இழந்தததை ஈடுகட்டுவீர்கள். விரும்பிய வேலைக்கு சோதனை தேர்வில் வெற்றி பெற்றாலும் விஐபி சிபாரிசுக்கு அலைய நேரும். தொழில் வாழ்க்கை முறையில் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் சனிக்கு ராகு சம்பந்தம் ஏற்பட போவதால் இனம் புரியாத குறை, கவலை தோன்றலாம்.

    பூரட்டாதி நட்சத்திர சஞ்சார பலன்கள் 6.4.2024 முதல் 29.3.2025 வரை

    கன்னி ராசிக்கு 4,7ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணை விஷயங்களிலும் நட்பு கூட்டு பங்குதாரர்கள் வழி இருந்த விரக்தி மன இறுக்கங்கள் மாறும். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். நல்ல வருமானமும் கிடைக்கும்.

    பெற்றோர்களுடன் சேர்ந்து கூட்டு குடும்பமாக வாழும் அமைப்பு உருவாகும். இது வரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. சிலருக்கு தாயின் மூலம் வருமானம் கிடைக்கும். சிலர் புதியதாக சுய தொழில் துவங்கலாம். சிலர் வேலையில் இருந்து விடுபட்டு கடன் பெற்று புதிய சுய தொழில் அல்லது கூட்டுத் தொழில் துவங்கலாம். ஏற்கனவே சுய தொழில் நடத்துபவர்கள் புதிய தொழில் கிளைகள் துவங்கலாம்.

    30.6.2024 முதல் 15.11.2024 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலத்தில் பூர்வீக நிலப் பிரச்சனை தீரும். பூர்வீகத்தால் யோகம் உண்டாகும். மனைவியால், உடன் பிறந்தவர்களால், தாய்மாமனால் அனுகூலமான பலன்கள் நடைபெறும். வர வேண்டிய கடன் வசூலாகி கொடுக்க வேண்டிய கடனும் ஓடி அடையும்.வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சக ஊழியர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தலைக்கு மேல் வந்த பிரச்சனைகள் தலைப்பாகையோடு சென்று விடும்.

    திருமணம்: கோட்சாரத்தில் அக்டோபர் 30, 2023 வரை 2 , 8ம்மிடத்திலும் அதன்பிறகு 1,7மிடத்திலும் சஞ்சரிக்கும் கோட்சார கேது/ராகுக்கள் சஞ்சரிக்கிறார்கள். எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல் நிதானமாக செயல்பட்டால் திருமண முயற்சி பலிதமாகும். மறுமண முயற்சியில் வெற்றி உண்டு.

    பெண்கள்: வைராக்கியத்தாலும், விடாமுயற்சியாலும் சிரமமான கடுமையான காரியங்களைக் கூட எளிதாக நடத்தி முடிப்பீர்கள். ஜனன கால ஜாதரீதியாக நன்மையான தசாபுக்திகள் நடந்தால் நன்மையின் அளவை அளவிட முடியாத வளர்ச்சி உண்டு. எதிர்காலத்தில் உங்கள் பெயர் பிரகாசிக்குமளவு புகழ், பெருமை, கவுரவம் சேரும். தாய் வழி உறவுகளுடன் ஏற்பட்ட மனக் கசப்பு மறையும் வாய்ப்பு உள்ளது.

    பரிகாரம்: கடுமையாக உழைத்தால் ஆறாமிட சனிபகவான் வெற்றியை வழங்குவார்.சகலவிதமான தடைகள் கடன் நோய் விலகி செல்வம் செல்வாக்கு சொல்வாக்கு போன்ற பலவிதமான நற்பலன்கள் கிடைக்கும்.அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி வழங்க ருண, ரோக, சத்ரு ஸ்தான இயக்கம் மட்டுப்படும். குலதெய்வ வழிபாடு உங்களை நன் முறையில் வழி நடத்தும். தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×