என் மலர்tooltip icon

    கன்னி

    சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026

    கண்ணியமான கன்னி ராசியினரே

    கன்னி ராசிக்கு 5.6ம் அதிபதியான சனிபகவான் தற்போது கோட்ச்சாரத்தில் சம சப்தமஸ்தானத்தில் நின்று கண்டகச் சனியாக பலன் தருவார். தனது 3ம் பார்வையால் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் ராசியையும் 10ம் பார்வையால் 4ம்மிடமான சுக ஸ்தானத்தையும் பார்ப்பார்.மேலும் 2026 ஜூன் மாதம் முதல் குரு பகவான் லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்று ராசிக்கு ஏழாம் இடத்தில் உள்ள சனியை பார்ப்பதால் கண்டகச் சனியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறையும். இந்த கண்டகச் சனியின் தாக்கத்தை குருபகவானின் அருட் கருணையால் உங்களுக்கு சாதமாக மாற்ற முடியும். சற்றேறக் குறைய கண்ட கச் சனி காலம் முடியும் வரை குருபகவான் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்பார் என்பது மறுக்க முடியாத உண்மை. கண்டகச் சனி மனித வாழ்வில் சோதனை மிகுந்த காலம். ஆயுள் தீர்க்கம் . ஜனன கால ஜாதகத்தில் சுப பலன் தரக்கூடிய கிரகங்களின் தசா புத்தி நடந்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது என்பதை உறுதியாக சொல்லலாம். கணவன், மனைவி இருவருக்கும் சந்தேக குணம் இருந்து கொண்டே இருக்கும்.சிலர் மனைவியை கொடுமைப்படுத்தி இன்பம் காண்பர். வாழ்க்கை துணையால், திருமணத்தால் துன்பம் அடைந்தவர்களுக்கு விவாகரத்து கிடைக்கும். திருமண வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தும். இல்லறத் துறவி போல் வாழ நேரிடும். வாழ்க்கை துணையின் ஆரோக்யமும் பாதிப்படைந்தவாறே இருக்கும். சிலருக்கு தவறான எதிர் பாலின நட்பு ஏற்படும்.எதிர்காலத்தை பற்றிய பயஉணர்வு மிகுதியாகும். சிலர் பரிகாரம் என்ற மூட நம்பிக்கையால் மறு மாங்கல்யம் கட்டுவார்கள். மனித வாழ்க்கை என்பது கிடைப்பதற்கு அரியதான பொக்கிஷம். அதை கவனமாக கையாள வேண்டும். தவற விட்டால் சேதம் உங்களுக்கே என்பதை நினைவில் நிறுத்திக் கொண்டு காலத்தை நகர்த்த வேண்டும்.

    கண்டகச் சனியின் பொதுவான பலன்கள்

    நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையை அனுசரித்து செல்ல வேண்டிய காலமாகும்.உடல் நலம் குறையும்.வைத்தியச் செலவு அதிகரித்துக் கொண்டே இருக்கும். ஒரு நோய்க்கு வைத்தியம் செய்து சீர் செய்யும் முன் அடுத்த நோய் வந்து விடும்.சாமனியர்களையும் நிலை தடுமாற வைக்கும் என்பதால் வரவுக்கு தகுந்த செலவுகளை திட்டமிட வேண்டும். தவறான ஜாமின் கடன் பிரச்சனையை ஏற்படுத்தும். சொல்லாலும் செயலாலும் ஒன்ற முடியாது. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படும். புதிய வம்பு ,வழக்குகள் அவமானம் கதவை தட்டும்.

    எந்த பிரச்சனையிலும் தலையிடாமல் இருப்பது நன்மை. பூர்வீகச் சொத்து, தொழில் வழக்குகள் உருவாகலாம். அதனால் அவமானம், தலைமறைவு வாழ்க்கை ஏற்படலாம். வருமான வரி , விற்பனை வரி தொடர்பான ஆவணங்களை முறையாக வைத்து இருக்க வேண்டும். பைனாஸ் நிறுவனம், சீட்டு நடத்துபவர்கள் , கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை . திடீர் அதிர்ஷ்டம், பண வரவுகள் ஏற்படும். அதிர்ஷ்டம், பண வரவு உங்களைச் சார்ந்தவர்களுக்கே பயன்படும். உங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ரகசியமாகவே இருக்கும். பிரயாணத்தில் பொருள் இழப்பு, திருட்டு போதல் ஏற்படும்.உடன் பிறந்தவர்களை நம்பி நீங்கள் ஒப்படைத்த பணிகளால் இழப்பும், மன வருத்தமும் வரும். சகோதரரிடம் இணக்கமற்ற சூழ்நிலை ஏற்படும். உங்கள் சகோதரர் மேல் தவறு இருந்தாலும் பலி உங்கள் மீதே விழும். செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்க நேரும். தன் நம்பிக்கை தைரியம் குறையும்.இது வரை நீங்கள் கட்டி காப்பாற்றிய வீரம், விவேகம் மட்டுப்படும்.

    வேலையாட்களால் செலவும் கவுரக் குறையும் ஏற்படும். உங்களின் வலது கையாக பக்கமாக இருந்த உதவியாளரே உங்களுக்கு துரோகியாக மாறுவார். புதியதாக தேர்தலில் நிற்கும் எண்ணம் இருப்பவர்கள் அடுத்த சனிப்பெயர்ச்சி வரை இந்த எண்ணத்தை ஆறப் போடுவது நலம். யாருக்கும் தெரியாமல் சேர்த்து வைத்த கறுப்புப் பணத்தை எப்படி நல்ல பணமாக மாற்றுவது என்ற பயம் உங்களை ஆட்டுவிக்கும்.இடமாற்றம், வீடு மாற்றம் செய்ய நேரும். வலது காதில் செவித்திறன் குறைவு ஏற்படும். உடலின் வலப்புறம் வலி உணர்வு இருக்கும்.சிறு உடல் உபாதைகள், மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும்.

    சனியின் 3ம் பார்வை பலன்கள்

    சனியின் மூன்றாம் பார்வை 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் பதிவதால் ஆன்மீக நாட்டம் மிகும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பையை தூக்கிக் கொண்டு கோவில் குளம் என்று சுற்ற ஆரம்பித்து விடுவீர்கள். ஆன்மீக சொற்பொழிவு, பட்டி மன்றங்களில் கலந்து கொள்வீர்கள். தான தர்மங்கள் செய்து மட்டற்ற மகிழ்ச்சி அடைவீர்கள். புண்ணிய காரியங்கள் செய்வதில் ஆர்வம் மிகும். தர்ம ஸ்தாபனங்கள் நிர்ணயம் செய்வதில் ஆர்வம் பிறக்கும். நதிகளில், கடல்களில் புனித நீராடல் செய்து பெரும் பாக்கிய பலன்களை அதிகரிப்பீர்கள். மகான்களை தரிசிப்பது, சித்தர் ஜீவ சமாதிகளை போன்ற புண்ணிய வாய்ப்புகள் தேடி வரும். புண்ணிய ஸ்தலங்களை தரிசித்து மனம் ஆனந்தம் அடையும். சொத்து ,வியாபாரத்தை பிரித்து பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு நான் ஏன் பிறந்தேன்? .என் பிறப்பின் நோக்கம் என்ன? என் முன்னோர்கள் எனக்கு பாவம் சேர்த்துச் சென்றனரா? புண்ணியம் சேர்த்தவர்களா? என் சந்ததிகளை முன்னோர்களின் பாவத்திலிருந்து காப்பாற்ற முடியுமா? போன்ற கேள்விக்கு விடை காண முயல்வீர்கள். குல தெய்வம், பூர்வீகம் தெரியாதவர்கள் அதனை தெரிந்து கொள்ள கடுமையான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். தந்தையின் உடல் நலம் சிறக்கும். ஆயுள் பலம் அதிகரிக்கும். நோயின் தன்மை புரியும். பூர்வீக தொழிலால் மிகப் பெரிய கெளரவம் கிடைக்கும்.சிலர் பூர்விக சொத்தை விற்று புதிய தொழில் ஆரம்பிப்பார்கள்.

    சனியின் ஏழாம் பார்வை பலன்கள்

    சனியின் 7ம் பார்வை ராசிக்கு இருப்பதால் ஜனன கால ஜாதகத்தில் சாதகமான தசாபுத்தி இல்லாதவர்களுக்கு புனர் பூ தோஷம் ஏற்பட்டு ஜான் ஏறினால் முழம் சறுக்கும். மனத்தில் வெறுமை குடிபுகும். இது என்ன வாழ்க்கை என என்ற எண்ணம் ஏற்படும். நன்றி கெட்ட குடும்ப உறவுகளை நினைத்து மனம் வெதும்பும்.முகத்தில் கவலை, துக்கம் நிறைந்து இருக்கும். தோற்றப் பொழிவு குறையும். முடி நரைக்கும்.முகத்தில் கரும்புள்ளிகள் தழும்புகள் தோன்றும்.மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். ஞாபக மறதி மிகும். எனக்கு உதவி செய்ய யாருமில்லை என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பீர்கள். அதிர்ஷ்டம் என்னை தேடி வருமா? என அதிர்ஷ்டத்தை தேடி காலம் தள்ளுவீர்கள். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத முன்னோர் சொத்துக்காக இருக்கும் பொன், பொருளையும் ஏமாந்து பிறருக்கு கொடுத்து பின்னர் அதற்காக வருந்துவீர்கள்.எல்லாம் எனக்கு தெரியும் என்று நினைத்து செயல்பட்டு எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் இருந்த நீங்கள் உலக மாற்றத்தை கண்டு புதிய வழிகளை தேடி சிந்திப்பீர்கள். இள வயது கன்னி ராசி வாலிபர்கள் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி பெற்றோர், உற்றார் உறவினரிடம் கெட்ட பெயர் எடுப்பீர்கள்.உடல் சோர்வு , கை, கால் , மூட்டு வலி மிகுதியாகும்.

    சனியின் 10ம் பார்வை பலன்கள்

    சனியின் 10ம் பார்வை சுக ஸ்தானமான 4ம் இடத்தில் பதிவதால் தாயின் பிறந்த குலத்திற்கு பெருமை சேர்ப்பீர்கள். தாயாரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க முயல்வீர்கள். வாகனம், நகைகள், விதவிதமான ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள்.நிலம் விற்றல் , வாங்குதல் போன்ற பணிகள் சிறு தடை தாமதத்துடன் நடக்கும். நிலம் தோட்டம் வாங்கி விவசாயத்தில் புதுமையை புகுத்தும் எண்ணம் மிகும். விவசாயிகள் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு தேடி வரும். பாசனத்திற்கு தேவையான நீர் கிடைக்கும் அல்லது ஆழ் துளை கிணறு அமைப்பீர்கள். கால்நடை வளர்ப்பில் ஆர்வம் மிகும். சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு வீட்டை விரிவுபடுத்தவும். பராமரிப்பு செலவு மிகும். ஒரு சிலர் வசதி குறைவான வாடகை வீட்டிற்கு செல்ல நேரும். வாகனம் பழுதாகி அதிக செலவை இழுத்து வைக்கும்.பழைய வாகனங்கள் வாங்குபவர்கள் தரம் இல்லாத பொருளுக்கு அதிக பணம் செலவு செய்வீர்கள். மாணவர்கள் தேவையில்லாத சிந்தனையில் மனதை சிதற விடாமல் இருப்பது. நல்ல நண்பர்களுடம் நட்பு வைக்க வேண்டும். கூடா நட்பு கேடில் முடிந்து கெட்ட பெயர் எடுத்து தரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு ஞாபகக் குறைவு அதிகமாகும். மேம்போக்காக படித்தால் மனதில் நிற்காது.பலமுறை படித்தால் மட்டுமே மனதில் பதியும்.

    திருமணம்

    கோட்ச்சார குரு பகவான் மிகச் சாதகமான நிலையில் இருப்பதால் ஜூன் 2026க்கு மேல் லாப ஸ்தானத்திற்கு குரு பகவான் வருவதால் கண்டக சனியின் பாதிப்பு குறைந்து திருமண தடை அகலும். மேலும் அடுத்த சனிப்பெயர்ச்சியில் உங்களுக்கு அஷ்டமசனி ஆரம்பிக்கும் என்பதால் திருமணம் தொடர்பான உங்கள் சுயசாத ரீதியான தோஷங்களை அறிந்து அதற்கான பரிகாரங்களை செய்து திருமணத்தை நடத்த முயற்சி செய்வது நல்லது.

    பெண்கள்

    குடும்பத்தில் அமைதி நிலவும். பணப் புழக்கம் மிகுதியாக இருக்கும். கடன் தொல்லை குறையும். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு இடப் பெயர்ச்சி மனதை மகிழ்விக்கும். வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். அதற்கு தேவையான கடன் தொகை கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான முயற்சியில் சகோதரரின் ஆதரவு திருப்தி. தரும்.சுப நிகழ்விற்கான அறிகுறிகள் தென்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்வது மிகவும் நல்லது.

    பரிகாரம்

    சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொடுத்து வணங்க வேண்டும். அன்னதானத்திற்கு இயன்ற உதவி செய்யலாம். சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவக்கிரகஙகளின் தாக்கம் குறையும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×