search icon
என் மலர்tooltip icon

  கன்னி - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

  கன்னி

  ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்8.10.2023 முதல் 25.4.2025 வரை

  கன்னி ராசி நேயர்களே!

  இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், அக்டோபர் 8-ந் தேதி முதல் 7-ம் இடத்திற்கு வருகிறார். அதே நேரம் ஜென்ம ராசிக்கு கேது வருகிறார். இதனால் சர்ப்ப தோஷ ஆதிக்கத்தில் இருக்கிறீர்கள். ராகுவும், கேதுவும் மேற்கண்ட இடங்களில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு வீற்றிருந்து, நட்சத்திர பாதசாரங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார்கள்.

  உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவானால், குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். இருந்தாலும் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் தளரவிட வேண்டாம். 7-ம் இடம் என்பது களத்திர ஸ்தானமாகும். அங்கு ராகு சஞ்சரிப்பதால், திருமண வயதை அடைந்த ஆண், பெண்களுக்கு திருமணப் பேச்சுவார்த்தை நடைபெறும். ஆனால் அவ்வளவு சுலபத்தில் திருமணம் முடிவாகாது.

  ஜென்மத்தில் கேது சஞ்சரிப்பதால் சிந்தனை ஆற்றல் அதிகரிக்கும். உறவினர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். சமூகப்பற்று மிக்க உங்களுக்கு பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். அடிக்கடி உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு உற்சாகத்தைக் குறைக்கும். ஆகையால் கவனமாக செயல்படுங்கள். சர்ப்ப சாந்தி பரிகாரங்களை செய்து கொள்வதன் மூலம் சகஜநிலைக்கு வரலாம்.

  குரு மற்றும் சனி வக்ர காலம்

  8.10.2023 முதல் 20.12.2023 வரை மேஷ ராசியிலும், 25.9.2024 முதல் 22.1.2025 வரை ரிஷப ராசியிலும் குரு வக்ரம் பெறுகிறார். இந்த வக்ர காலம் உங்களுக்கு சிறப்பாக அமையும். இடம், வீடு வாங்கும் யோகம் உண்டு. ஒரு சிலர் வீடு கட்டி குடியேறுவார்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

  8.10.2023 முதல் 24.10.2023 வரை மகர ராசியிலும், 10.7.2024 முதல் 5.11.2024 வரை கும்ப ராசியிலும் சனி வக்ரம் பெறுகிறார். இந்த வக்ர காலத்தில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். 'வெளிநாட்டு அழைப்புகளை ஏற்பது பற்றி யோசிப்பீர்கள். பெற்றோரின் அனுபவம் புதிய ஆற்றலை வழங்கும்.

  சனிப்பெயர்ச்சி காலம்

  20.12.2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் செல்கிறார். அவர் ஜீவன ஸ்தானத்திற்கு செல்வதால், பணி நிரந்தரம் ஏற்படும். தடைகள் ஒவ்வொன்றாக விலகும். 'விபரீத ராஜயோக' அடிப்படையில் எதிர்பாராத திருப்பங்கள் வந்துசேரும். பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு, புதிய பங்குதாரர்களை இணைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் மேற்படிப்பு, திருமணம் தொடர்பான முயற்சி வெற்றியாகும்.

  குருப்பெயர்ச்சி காலம்

  1.5.2024 அன்று ரிஷப ராசிக்கு குரு பகவான் செல்கிறார். அங்கிருந்து உங்கள் ராசியையும் 3, 5 ஆகிய இடங்களையும் பார்க்கப் போகிறார். குருவின் பார்வையால் இதுவரை நிலவிய குழப்பங்கள் அகலும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கைகூடும். பிள்ளைகளின் கல்வி, கல்யாணம் போன்ற முயற்சியில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு.

  பெண்களுக்கான பலன்கள்

  இந்த ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு அதிக விரயத்தைக் கொடுக்கும். நிம்மதி குறையும். தொழிலைப் பொறுத்தவரை, யாரை நம்பியும் எதுவும் செய்ய இயலாது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

  வளர்ச்சி தரும் வழிபாடு

  சப்தம ராகுவால் சந்தோஷம் கிடைக்கவும், ஜென்ம கேதுவால் சிறப்புகள் காணவும் வெள்ளிக்கிழமைதோறும் விரதமிருந்து அம்பிகையை வழிபடுங்கள்.

  சிம்மம்

  ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - 2023

  12.4.2022 முதல் 30.10.2023 வரை

  எட்டில் ராகு/ இரண்டில் கேது

  இளமையான கன்னி ராசியினரே உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் ராகு பகவானும், 2ம் இடத்தில் கேது பகவானும் குரு பகவான் 7, 8ம் சனி பகவான் 5,6 ம் இடத்திலும் பயணிக்கிறார்.

  எட்டாமிட ராகுவின் பொதுபலன்கள்:எட்டாமிடம் என்பது திடீர் அதிர்ஷ்டம், ஆயுள் ,வம்பு, வழக்கு, தீராத நோய், கடன் பற்றிக் கூறுமிடம். பொதுவாக கோட்சாரத்தில் அசுப கிரகங்கள் மறைவு ஸ்தானத்திற்கு வரும் போது பெரிய பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற பய உணர்வு அனைவருக்கும் இருக்கும். இந்த கால கட்டத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. ஆனால் பய உணர்வினால் நேரம், காலம், பொருள் விரயம் உண்டாகும். வளர்ச்சி தடைபடும் என்பது மறுக்க முடியாத உண்மை. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதால் சிலருக்கு சுப பலன்களும் நடக்கும். ராகு தான் நின்ற பாவக பலனை பிரமாண்டப்படுத்துவார் என்பதால்

  மனதில் பெரிய திட்டங்கள் தோன்றும். குறுக்கு வழியில் அதிர்ஷ்டத்தை அடைய முயற்சிப்பார்கள். விட்டதை பிடிக்கிறேன் என அதிர்ஷ்டத்தை துரத்துவார்கள். ஆயுளை அதிகரிப்பார், ஆனால் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடக் கூடிய நோய்களின் வீரியத்தை அதிகப்படுத்தி உடல் தளர்ச்சியையும் மனபயத்தையும் மிகைப்படுத்துவார். ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சையை தந்து நித்திய கண்டம் பூரண ஆயுள் என நிம்மதியை குலைப்பார். சிலர் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு வெளியூர் என வாழ நேரலாம். சிலர் உறவுகளிடம் மனஸ்தாபத்தால் தனிமையாக வாழ விரும்பலாம்.

  கடுமையாக உழைத்தாலும் உழைப்பிற்கான ஊதியம் நற்பெயரும், அங்கீகாரமும் கிடைக்காது. தொழில் நடத்த தேவையான பொருளாதாரத்தை எப்படியாது திரட்டுவீர்கள். பெரிய சேமிப்போ லாபமோ எதிர்பார்க்க முடியாது. அதே நேரத்தில் பெரிய நஷ்டமும் இருக்காது. ராகு மேஷ ராசியில் உள்ள நட்சத்திரப் பாதங்களான கிருத்திகை, பரணி, அசுவினி நட்சத்திரங்களில் மூலம் ராசியை கடக்கிறார்.

  12.4.2022 முதல்14.6.2022 வரை ராகுவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்:விரயாதிபதி சூரியனின் நட்சத்திரத்தில் எட்டாமிடத்தில் ராகு சஞ்சரிக்கிறார். வெகு சிலருக்கு அதிர்ஷ்ட வசமாக வீடு, வாகனம், பொன், பொருள் சேர்க்கை, பிள்ளைகளின் திருமணம், கல்வி என சுப செலவுகள் ஏற்படலாம். சிலருக்கு கண் பார்வை குறையும். ஒருசிலருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யநேரும். புத்திர பாக்கிய யோகத்தில் தடை ஏற்படும். உடல்நலம் பாதிக்கும். அரசின் உதவித் தொகை கிடைப்பது தடைப்படலாம்.பயண அலைச்சல் மிகும். தீயவழியில் பொருள் விரயம் ஏற்படும். உங்களின் சொத்துகள் பிறரால் அனுபவிக்கப்படலாம். உடல் உஷ்ணம், அஜீரணம் தொடர்பான நோய்கள் சங்கடத்தில் ஆழ்த்தும்.

  15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:பரணி சுக்ரனின் நட்சத்திரம். சுக்கிரன் கன்னிக்கு 2,9ம் அதிபதி என்பதால் சிலர் மதம் மாறலாம் அல்லது கலப்புத் திருமணம் செய்லாம். குடும்பத்திலிருந்து பிரிந்த மூத்த சகோதர் மீண்டும் குடும்பத்துடன் சேர்வார். முன்னோர்கள் சொத்தைப் பிரிப்பதில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சொத்துகள் உங்களுக்கு சாதகமாகப் பிரிக்கப்படும். சட்டத்திற்கு புரம்பான மறுமணம் நடைபெறும். தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தந்தையால் ஆதாயமுண்டு.தந்தைக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும். தடைப்பட்ட ஊதியம் மொத்தமாக வந்துவிடும். வேலையில் 'மெமோ' வாங்கியவர்களுக்கு மீண்டும் சேர உத்தரவு வரும். சிலருக்கு மன ஆறுதல் தரும் எதிர் பாலின நட்பு கிடைக்கும்.

  21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்:கோட்சாரத்தில் ராசிக்கு 2ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கும் காலம். சுய சிந்தனை மட்டுப்படும். வந்த வாக்கிலும் போன வாக்கிலும் வாழ்க்கையை வாழ்வார்கள்.2,8ம், இடத்துடன் ராகு- கேதுக்கள் சம்பந்தம் பெறும்போது அடுத்தவரின் குறுக்கீடு மிகுதியாகும். சம்பந்தமில்லாத குற்றத்தில் உங்களை மாட்டி வம்பு வழக்கை உருவாக்குவார். அதனால் களங்கம் தரும் வீண் விமர்சனம், கவுரவக்குறைவு உருவாகும். வட்டிக்கு வட்டி கட்ட நேரும். வழக்குகளில் சாதகமாகத் தீர்ப்பு வராது. ரேஸ், சூதாட்டம், லாட்டரி போன்றவை மீளமுடியாத இழப்பில் கொண்டு நிறுத்தும்.

  2ம்மிட கேதுவின் பொதுபலன்கள்:2ம் இடம் என்பது தனம் வாக்கு குடும்ப ஸ்தானம் என்பதால் தன வரவு தடைபடும். பொருள் வரவு குறைந்தாலே குடும்பத்தில் நிம்மதி குறைவது இயல்பு. குடும்ப உறவுகள் விலகிச் செல்வது போன்ற அச்சம் உண்டாகும். வயது முதிர்ந்த தோற்றம் ஏற்படும். யாரையும் பார்க்க பேசப் பிடிக்காது. நேரத்திற்கு சாப்பிட முடியாது. சிலர் குறைந்த சம்பளத்திற்கு அதிக வேலை செய்வார்கள். பரம்பரையாக கௌரவத் தொழில் செய்பவர்கள் தொழில் தொடர்பான நல்ல முடிவை எடுக்கிறோம் என்று தவறான முடிவை எடுக்கவைக்கும் காலம்.

  பூர்வீக நிலம், வீடு போன்றவற்றை விற்பதை ஒத்திவைத்தால் வீண் விரயம் தடுக்கப்படும். அவ்வப்போது உடல் களைப்பு, அசௌகரியங்களால் அவதி ஏற்படும். கேது துலாம் ராசியில் உள்ள விசாகம், சுவாதி, சித்திரை நட்சத்திரங்கள் மூலம் தன் பயணத்தை செலுத்துகிறார்.

  12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்:விசாகம் குருவின் நட்சத்திரம். குரு கன்னி ராசிக்கு 4,7ம் அதிபதி. 4,7ம் அதிபதியின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் கேது சுகவீனத்தை அதிகப்படுத்துவார். எனவே ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தாயின் ஆரோக்கியத்திற்காக மருத்துவ செலவு செய்ய நேரும். தாய் வழிப் பூர்வீகச் சொத்துப் பிரிப்பதில் கருத்து வேறுபாடு உருவாகும் அல்லது நீதி மன்றத்தில் வழக்கு பதியலாம். பங்குதாரர்களிடம் மனக் கசப்பால் கூட்டுத் தொழிலில் பிரிவினை உண்டாகும்.

  சிலர் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். பிரிவினை பூர்வீக சொத்து தொடர்பான விஷயத்திற்காக இருக்கலாம் அல்லது பரம்பரை கூட்டுக் குடும்ப பிரிவினை அல்லது பரம்பரை கூட்டுத் தொழில் நிர்வாகக் கணக்கு வழக்குகளில் குளறுபடி செய்ததற்காகவும் இருக்கலாம். வீடு, வாகனக் கனவு நிறைவேறுவதில் தடை, தாமதம் ஏற்படும் அல்லது வாங்கும் சொத்தில் வில்லங்கம் இருக்கலாம்.

  18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்: கோட்சாரத்தில் ராசிக்கு 8ல் பயணிக்கும் ராகுவின் நட்சத்திரத்தில் கேது பயணிக்கும் காலத்தில் குடும்பத்தில் உறவினர்கள் வெளிப் பேச்சில் நல்லவர்களாகவும் மனதிற் குள் வஞ்சகம் வைத்தும் பேசுவார்கள். அரசுவழி ஆதாயம் கிடைப்பதில் தடை ஏற்படும்.தொழில் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருக்க வேண்டும்.சிலருக்கு வருமான வரி, சொத்து வரி போன்றவற்றால் மன சஞ்சலம் ஏற்படும். இழுபறியாக இருந்துவந்த குடும்ப சொத்து விவகாரம் சட்டத்தின் உதவியை நாடவைக்கும்.

  27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்:சித்திரை செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் கன்னி ராசிக்கு 3,8ம் அதிபதி என்பதால் ஞாபக சக்தி குறையும். மறதி ஏற்படலாம். இடப்பெயர்ச்சி செய்ய நேரும். அது வசிப்பிடமாகவோ, தொழில் செய்யும் இடமாகவோ இருக்கும். திட்டமிட்டு செயல்படுத்துவதில் தடை தாமதம் நிலவும். எடுக்கும் முயற்சிகள் இழுபறியாக இருக்கும்.

  விலை உயர்ந்த ஆபரணத்தை கவனமாக கையாள வேண்டும். நகைகளை பேங்க் லாக்கரில் பத்திரமாக வைக்கவும். பணத்தை நம்பிக்கையான அரசுடைமை வங்கிகளில் சேமிக்கவும்.சிலருக்கு அதிர்ஷ்ட வசமாக பிள்ளை இல்லாதவர்களின் உயில் சொத்து, அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். பாலிசி முதிர்வுத் தொகை, பங்குச் சந்தை முதலீடு என பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும்.

  ராகு/கேதுக்கள் சற்று பாதகமாக இருந்தால் கூட 7ம் இடத்தில் ஆட்சி பலம் பெறும் குருவின் பார்வை ராசிக்கு இருப்பதால் ஒருவருட காலத்திற்கு குருவின் பார்வை கவசமாக காக்கும் என்பதால் தைரியமாக, தெம்பாக இருக்கலாம்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×