என் மலர்
கன்னி
2026 தை மாத ராசிபலன்
கன்னி ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், தனாதிபதி சுக்ரனோடு இணைந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே, பொருளாதாரத்தைப் பொறுத்தவரை நிறைவு ஏற்படும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து காரியங்களை முடித்துக்கொடுப்பர். 10-ல் குரு இருப்பதால் புதிய பொறுப்புகள் வந்துசேரும். உத்தியோகத்தில் பதவி மாற்றம் ஏற்படலாம். பொதுவாழ்வில் இருப்பவர்கள் வீண்பழியில் இருந்து விடுபடுவர். அவர்கள் விரும்பியபடியே பதவி வாய்ப்பு கிடைக்கும்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற குரு, வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கும் பொழுது இனிய பலன்கள் ஏராளம் நடைபெறும். குறிப்பாக இடம், பூமி வாங்கும் முயற்சியில் இருந்த தடை அகலும். கடன் சுமை குறைய எடுத்த முயற்சி கைகூடும். 'வரன்கள் வந்து வந்து திரும்புகின்றதே.. எதுவும் முடிவாகவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இனி வரும் வாய்ப்புகள் நல்லதாக அமையும். குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய மூன்று இடங்களில் பதிகின்றது. அந்த மூன்று இடங்களுக்குரிய பலன்கள் உங்களை வந்தடையும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். கொடுக்கல் - வாங்கலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வாடகைக் கட்டிடத்தில் இருந் தவர்கள் சொந்தக் கட்டிடத்திற்கு மாற எடுத்த முயற்சி கைகூடும். தாயின் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரத்தை அளிப்பர். குடும்பத்தில் கருத்து வேறுபாடு அகல, விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. இருப்பினும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. பழைய பிரச்சனைக்குப் புதிய அணுகுமுறையில் தீர்வு காண்பீர்கள்.
கும்ப - புதன்
உங்கள் ராசிநாதனாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். 'மறைந்த புதனால் நிறைந்த தனலாபம்' என்பார்கள். அதன்படி 6-ல் சஞ்சரிக்கும் புதனால், பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமாக ஊதிய உயர்வுடன் நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். தொடர் கடனால் அவதிப்பட்டவர்களுக்கு, கொடுக்கல்- வாங்கலை ஒழுங்கு செய்துகொள்ள வழிபிறக்கும். பெற்றோரின் ஆதரவோடு பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். ஒரு சிலருக்கு உத்தியோக மாற்றம் உறுதியாகும்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன் 7.2.2026 அன்று கும்ப ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவரது பெயர்ச்சி மூலம் குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. பழுதாகி செலவு வைக்கும் பழைய வாகனத்தால் அவதிப்பட்டவர்களுக்கு, புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உருவாகும். பெற்றோர் வழி ஆதரவு திருப்தி தரும் விதம் அமையும். போட்டிக்கு மத்தியில் வியாபாரம் வெற்றிநடைபோடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்பட்டு மனக்குழப்பத்தை உருவாக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் முற்பாதியில் லாபம் வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வருவதில் தாமதம் ஏற்படும். மாணவ - மாணவிகள் கல்வியில் வெற்றி பெற, கடினமாக முயற்சிக்க வேண்டியதிருக்கும். உறவினர் பகை உருவாகும் என்பதால், பெண்கள் கவனமாக செயல்படுங்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 17, 18, 25, 29, பிப்ரவரி: 1, 2, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.






