என் மலர்
கன்னி
2025 ஐப்பசி மாத ராசிபலன்
கன்னி ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் தன ஸ்தானத்தில் பரிவர்த்தனை யோகம் பெற்றுள்ளார். சுக்ரனும், புதனும் தன் வீடுகளை மாற்றி அமர்ந்திருப்பதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய பாதை புலப்படும். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். ஆலய தரிசனங்களும், ஆன்மிகப் பயணங்களும் உருவாகும். விரயாதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் இருப்பதால் திடீர் விரயங்கள் உண்டு. என்றாலும் அதைச் சமாளிக்க, முன்னதாகவே அதற்குரிய தொகை வந்துசேரும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கிறார். அதிசாரப் பெயர்ச்சியாக இருந்தாலும் அதற்குரிய பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். 4, 7-க்கு அதிபதியானவர் குரு என்பதால் ஆரோக்கியம் சீராகும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்யாணத் தடைகளும், காரியத் தடைகளும் அகலும். தாயின் உடல்நலம் சீராகும். சென்ற மாதம் ஏற்பட்ட தட்டுப்பாடுகளும், பண நெருக்கடியும் தானாகவே விலகும். எதிர்பாராத வரவுகளால் இதயம் மகிழும். குடும்ப ஒற்றுமை பலப்பட நீங்கள் எடுத்த முயற்சி பலன்தரும். பழைய பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் கும்ப ராசியில் சனி- ராகு சேர்க்கை ஏற்படுகிறது. 6-க்கு அதிபதி சனி, 6-ம் இடத்திலேயே வக்ரம் பெறுவது யோகம்தான். 'வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லையே, கொடுத்த கடனை வாங்க முடியவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது மகிழ்ச்சி தரும் விதத்தில் கொடுக்கல் -வாங்கல்கள் ஒழுங்காகும். வளர்ச்சி அதிகரிக்கும் இந்த நேரத்தில் இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா என்று சிந்திப்பீர்கள். தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறை வேறும். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு மூலம் வெளிவந்து புது முயற்சியில் ஈடுபட்டு பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் நல்ல மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக தொழில் நடக்கும் இடத்தை மாற்றம் செய்ய விரும்புவீர்கள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக நடைபெறும். உடன்பிறந்தவர்கள் பகை மறந்து செயல்படுவர். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். உடல்நலனில் மட்டும் சிறுசிறு தொல்லைகள் வந்து அலைமோதும். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்பு கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். இப்ெபாழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். குறிப்பாக பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகம், தொழில் செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்குப் பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 21, 22, 27, 28, நவம்பர்: 7, 8, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.






