என் மலர்tooltip icon

    ரிஷபம்

    2026 புத்தாண்டு ராசிபலன்


    நிம்மதியை விரும்பும் ரிஷப ராசியினருக்கு 2026ம் ஆண்டு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் வருடமாக அமைய நல்வாழ்த்துக்கள்.எந்த ஒரு செயலிலும் வேகம் இருக்கும். நேரத்திற்கு நல்ல சாப்பாடு ஆரோக்கியத்தை காப்பாற்றக்கூடிய வகையில் ஓய்வு நிம்மதியான தூக்கம் சந்தோஷமான வாழ்க்கை என்ன நிம்மதியாக இருப்பீர்கள். பத்தில் ஒரு பாவி இருக்க வேண்டும் என்பது ஜோதிட பழமொழி. இந்த 2026ம் ஆண்டு பத்தாம் இடத்தில் ராகு பகவான் இருப்பதால் தொழிலில் முன்னேற்றமான பலன்களை எதிர்பார்க்கலாம். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களின் சாதனைகள் பாராட்டப்படும்.இதுவரை தடை தாமதத்தை ஏற்படுத்திய அனைத்து முயற்சிகளும் சாதகமாகும்.

    குருவின் சஞ்சார பலன்கள்

    ஆண்டின் துவக்கத்தில் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் 2026 ஜுன் 2 முதல் வெற்றி ஸ்தானத்திற்கு செல்லப் போகிறார். குருபகவான் தனம், வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் 5 மாத காலம் திட்டமிட்டு செயல்பட்டால் பெரிய தொகையை சம்பாதிக்க முடியும். நீங்கள் விரும்பிய இடப்பெயர்ச்சி நடக்கும். ஊர் மாற்றம் வேலை மாற்றம் பதவி மாற்றம் வரலாம். தொழிலில் கடந்த காலங்களில் நிலவிய நெருக்கடிகள் குறைந்து படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும். ஸ்திர சொத்துக்களில் முதலீடு செய்யக்கூடிய அமைப்புகள் உள்ளது. தாயையும் தாய் வழி உறவுகளையும் அனுசரித்துச் செல்ல வேண்டும். அடமான நகைகள் சொத்துக்களை மீட்கக்கூடிய அமைப்பு உள்ளது. உடன்பிறந்தவர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மறையும். கற்ற கல்வி பலன் தரும். நிரந்தர வேலை கிடைக்கும். முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருந்தால் பிறர் மதித்திடக் கூடிய உயர்வான நிலையை அடைவீர்கள்.ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்தினால் மருத்துவச் செலவு குறையும். கண், பல் முகம் போன்றவற்றில் அறுவை சிகிச்சை செய்ய உகந்த காலமாக இருக்கும்.திருமணத்திற்கான முயற்சிகள் சாதகமாகவே இருக்கும். பெரிய எதிர்பார்ப்பை குறைத்தால் 2026 இல் திருமணம் நடக்கும்.

    சனியின் சஞ்சார பலன்கள்

    ரிஷப ராசிக்கு ஆண்டு முழுவதும் சனிபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்.உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட், பங்குச் சந்தை போன்ற துறையில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமான லாபகரமான பலன் கிடைக்கும். பொதுவாக சனி பகவானோ ராகு கேதுவோ 11ம்மிடமான லாப ஸ்தானத்திற்கு வரும்போது சுயதொழில் பற்றிய ஆர்வம் அதிகம் இருக்கும்.தற்போது லாப ஸ்தானத்தில் சனி பகவான் நிற்பதால் பலருக்கு சுயதொழில் ஆர்வம் உதயமாகும். அடுத்து சனிப் பெயர்ச்சியாகி மேஷ ராசிக்கு வந்தவுடன் உங்களுக்கு ஏழரை சனி ஆரம்பமாகும்.உங்கள் சுய ஜாதக ரீதியான தசா புத்தி சாதகமாக இருந்தால் இப்போது புதிய தொழில் தொடங்கலாம். தசா புக்தி சாதகமற்றவர்கள் இருப்பதை காப்பாற்றிக் கொள்வது நல்லது.

    நடக்க கூடிய தசா புத்திகளே ஒருவருக்கு வாழ்வின் பலன்களை நிர்ணயிப்பதால் பெரிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்பு சிந்தித்து செயல்படுவது நல்லது. அதே நேரத்தில் முதலீடு இல்லாத சுய தொழில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

    ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்

    ஆண்டின் துவக்கத்தில் 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் கேதுவும் 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் ராகு பகவானும் நின்று பலன் தருவார்கள். 5.12.2026 அன்று கேது பகவான் 3ம்மிடமான வெற்றி ஸ்தானத்திற்கும் ராகு பகவான் 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்திற்கும் செல்கிறார்கள்.பொதுவாக 4,10ம் இடங்களில் ராகு கேதுக்கள் சஞ்சரிக்கும் காலம் லக்னத்திற்கும் ஏழாம் இடத்திற்கும் பாதிப்பு ஏற்படும்.

    இந்த காலகட்டங்களில் திருமணத்திற்கு வரம் தேடுபவர்கள் மிகுந்த கவனத்துடன் தேட வேண்டும் தவறான வரனை நம்பி பின்னாளில் வருத்தப்படக்கூடாது.அதேபோல் நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையுடன் எந்தவித கருத்து வேறுபாடும் வைத்துக் கொள்ளக் கூடாது.தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. சிலர் தாய் வழி உறவுகளுடன் தேவை–யற்ற பகைமையை ஏற்படுத்–திக் கொள்வார்கள்.புதிய சொத்துக்களை வாங்கும் போதும் விற்கும்போதும் அனுபவஸ்தர்களின் ஆலோசனையை கேட்பது நல்லது. சிலர் தவறான விலை நிர்ணயம் செய்து விடுவார்கள். உதாரணமாக ஒருவர் வாங்கக் கூடிய சொத்தின் மதிப்பு 5 லட்சம் என்றால் 6 லட்சத்திற்கு வாங்குவார்கள்.அதே நேரத்தில் ஒருவர் விற்கக்கூடிய சொத்தின் மதிப்பு 5 லட்சம் என்றால் 4 லட்சத்திற்கு விற்பார்கள். இழப்பு எந்த விதத்தில் வேண்டுமானாலும் ஏற்படும் என்பதால் சாதகம் பாதகம் அறிந்து செயல்பட வேண்டும்.

    கிருத்திகை 2, 3, 4

    திடீர் முன்னேற்றங்கள் உண்டாகும் வருடம். லாப ஸ்தானத்தில் நிற்கும் சனிபகவான் எதிர்பாராத வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் தரலாம்.காலம் கனியும்போது கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும்.வீடு, வாகன யோகம் மற்றும் முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். சகோதர சச்சரவுகள் விலகும்.குடும்ப உறுப்பினர்கள் முயற்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    விரைவில் சிலர் தொழில், வேலைக்காக குடும்பத்தை பிரிந்து வெளியூர், வெளிநாடு செல்லலாம். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும்.பெண்களுக்கு புகுந்த வீட்டினரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். அரசு பணியாளார்கள் வீண் பழியிலிருந்து விடுபடுவார்கள். திருமண வரன் பார்ப்பதில் கவனம் மற்றும் பொறுமை தேவை. சிலருக்கு விருப்ப திருமணம் நடைபெறும்.

    வீடு, வாகன யோகம் கை கூடி வரும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய குறைபாடு அறுவை சிகிச்சையில் சீராகும். வியாழக்கிழமை நவக்கிரக குரு பகவானை வழிபடவும்.

    ரோகிணி

    சந்திரனின் ஆதிக்கம் பெற்ற ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 2026ம் ஆண்டில் விவேகத்துடன் செயல்பட்டு விரும்பிய இலக்கை அடைவீர்கள்.தனித்திறமை வெளிப்படும். முயற்சியில் தளர்ச்சி இல்லாத வளர்ச்சி உண்டாகும். புதிய தேடல்கள் உருவாகும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். உடன் பிறப்புகளால் அனுகூலமும், ஆதாயமும் உண்டாகும். பொன் பொருள், சேர்க்கை அதிகரிக்கும். வாழ்க்கைத் தரம் உயரும். எதையும் சமாளித்து நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.பெற்ற பிள்ளைகளால் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும்.தந்தை வழி உறவுகளிடம் இருந்த சங்கடங்கள், பிரச்சனைகள் விலகி ஆதரவு உண்டாகும்.தொழில், உத்தியோக ரீதியான வழக்கின் தீர்ப்பு சாதகமாகும். கடன், நோய், எதிரி தொல்லைகள் அகலும். கணவன், மனைவி அன்பாக இல்லறம் நடத்துவார்கள். புதிய வீடு வாங்குதல், புதிய வீடு கட்டி குடிபுகுதல், போன்ற பாக்கிய பலன்கள் இனிதே நடந்தேறும். போட்டி பந்தயங்கள், கலந்து கொள்பவர்கள் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. நீண்ட காலமாக தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். திருப்பதி வெங்கடாஜலபதியை வழிபடவும்.

    மிருகசீரிஷம் 1,2

    எதிர்பாராத தன லாபம் உண்டாகும் வருடம். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். தொழிலை விட்டு விலகி விடலாம் என்று நினைத்தவர்களுக்கு கூட நம்பிக்கையை அதிகரிக்கும் விதமான மாற்றங்கள் ஏற்படும்.அரசு உத்தியோகத்திற்கு நல்ல செய்தி தேடி வரும். வருமானம் அதிகரிக்கும். பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்கிய நிலை மாறும். தேவையற்ற செலவுகள் குறைந்து சேமிப்பு உயரும்.புதிய சொத்துகள் வாங்கும் போது முறையான பத்திரப் பதிவுவை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். புத்திர பிராப்தம் உண்டாகும். திருமணத் தடை அகலும். மன ரீதியாக, உடல் ரீதியாக அனுபவித்த வேதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருந்த நோய்கள் சாதாரண வைத்தியத்தில் குணமாகும். குல தெய்வ கோவில் மற்றும் ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.கணவன், மனைவி ஒற்றுமையாக இருந்தாலும் மூன்றாம் நபரின் குறுக்கீடு நிம்மதி குறைவை ஏற்படுத்தும் என்பதால் பிறரின் நயவஞ்சக பேச்சை நம்பக்கூடாது.வழக்குகளின் தீர்ப்பு சாதகமாகும்.அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு சிறப்பு.

    பரிகாரம்: சுப பலனை அதிகரிக்க கால பைரவரை அரளி மாலை அணிவித்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×