என் மலர்tooltip icon

    ரிஷபம்

    2025 புத்தாண்டு ராசிபலன்

    பொது வாழ்வில் புகழ் கூடும் ரிஷப ராசி நேயர்களே!

    புத்தாண்டு வந்துவிட்டது. உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகமான சனி பகவான் 10-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் முத்தான பலன்கள் கிடைக்கப் போகிறது. சென்ற ஆண்டு நிறையத் தடைகளையும், தாமதங்களையும் சந்தித்து வந்த உங்களுக்கு, இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே கிரகங்கள் சாதகமாக சஞ்சரிக்கின்றன. அஷ்டமாதிபதி குரு வக்ர இயக்கத்தில் சஞ்சரித்து ஆண்டு தொடங்குவதால், எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.

    புத்தாண்டின் கிரக நிலை

    புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், 10-ம் இடம் எனப்படும் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தொழில் ஸ்தானாதிபதி சனியும் இருக்கிறார். எனவே இந்த ஆண்டு தொழில் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கிறது. பழைய தொழிலை பைசல் செய்துவிட்டு, புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். கூட்டாளிகளோடு இருந்த மனஸ்தாபங்கள் மாறும். கேட்ட இடத்தில் உதவிகளும் கிடைக்கும்.

    ஜென்மத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் வக்ரம் பெறுவது யோகம்தான். அஷ்டமாதிபதியாகவும் குரு விளங்குவதால் அதன் வக்ர காலம் ஒரு பொற்காலமாக அமையும். எதிர்பாராத நற்பலன்கள் நடைபெறப் போகிறது. செவ்வாய் வக்ரம் பெற்றும், நீச்சம் பெற்றும் இருப்பதால் சொத்துக்கள் வாங்கும் சூழல் உருவாகும். 11-ல் ராகு இருப்பதால் உத்தியோகத்தில் தடைப்பட்ட பதவி உயர்வு தானாக வந்துசேரும். பஞ்சம ஸ்தானத்தில் கேது இருப்பதால் பிள்ளைகள் வழியில் விரயங்கள் உண்டு.

    கும்ப - ராகு, சிம்ம - கேது

    26.4.2025 அன்று ராகு-கேதுக் களின் பெயர்ச்சி நிகழவிருக்கிறது. உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் ராகுவும், 4-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகும் ராகுவால், தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஒரு சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பர். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கலாம்.

    சொத்துப் பிரச்சனைகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சட்ட ரீதியாகச் சில பிரச்சினைகள் வரலாம். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தொழில் கூட்டாளிகளின் தாக்கம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். எனவே இதுபோன்ற காலங்களில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை யோகபலம் பெற்ற நாளில் செய்து வழிபட்டு வந்தால் தடைகள் தானாக விலகும்.

    மிதுன - குரு சஞ்சாரம்

    11.5.2025 அன்று குரு பகவான், மிருகசீர்ஷம் 3-ம் பாதத்தில் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அவரது பார்வை 6, 8, 10 ஆகிய மூன்று இடங்களில் பதிவாகிறது. குருவின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றில் இருந்து விடுபடுவீர்கள். இன்னல் தந்தவர்கள் மனம் மாறி உங்கள் வெற்றிக்கு உறுதுணைபுரிவர். ஊர் மாற்றம், இடமாற்றம் எதிர்பார்த்தபடி வந்துசேரும்.

    குருவின் பார்வை 8-ம் இடத்தில் பதிவதால் சுப விரயங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். வளர்ச்சிப் பாதையில் இருந்த குறுக்கீடுகள் அகலும். 'தொழிலில் பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு, புதியவர்களைச் சேர்த்துக் கொள்ளலாமா?' என்று யோசிப்பீர்கள். கடன் சுமை படிப்படியாகக் குறையும். எதிரிகளின் பலம் குறையும். வழக்குகள் சாதகமாக முடியும். பெற்றோரின் மணிவிழா சிறப்பாக நடைபெறும்.

    குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் தொழில் முன்னேற்றம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் வந்து கொண்டேயிருக்கும். துணிந்து முடிவுகளை எடுத்து மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். புதிய பணியாளர்களை நியமித்து தன வரவைப் பெருக்கிக் கொள்வீர்கள். வங்கியில் உள்ள சேமிப்பு உயரும். போட்டிக்கு கடை வைத்தோர் விலகுவர். புதிய திருப்பங்கள் ஏற்படும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்போடு அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

    கும்ப - சனி சஞ்சாரம்

    வருடத் தொடக்கம் முதல் கும்ப ராசியிலேயே சனி சஞ்சரிக்கிறார். அவரது பார்வை 4, 7, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. ஆரோக்கியத் தொல்லைகள் அடிக்கடி வரும். 10-ம் இடம் வலுப்பெறுவதால் தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். நிலையான வருமானத்திற்கு வழி வகுத்துக் கொள்வீர்கள். பெற்றோரின் உடல்நலனில் பாதிப்புகள் ஏற்படலாம். அண்ணன், தம்பிகளுக்குள் பிரச்சினைகள் உருவாகலாம். பூர்வீக சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    கடக - குரு சஞ்சாரம்

    வருடத் தொடக்கத்தில் மிதுன ராசிக்குச் செல்லும் குரு பகவான், 8.10.2025 அன்று கடக ராசிக்கு அதிசாரமாகச் செல்கிறார். அங்கு 19.12.2025 வரை இருக்கும் அவர், உச்சம் பெற்று பலம் பெறுகிறார். இக்காலத்தில் உன்னதமான பலன்கள் ஏற்படும். அதிர்ஷ்டம் வந்துசேரும். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. குருவின் பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிவதால் கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையைச் சரிவரச் செய்வீர்கள். வாழ்க்கைத் துணையால் நன்மை ஏற்படும்.

    பாக்கிய ஸ்தானமும், லாப ஸ்தானமும் பலப்படுவதால் தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல்கள் அகலும். பூர்வீகச் சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து கொள்வதில் இருந்த தடை அகலும். கட்டிடம் கட்டும் முயற்சி பலன்தரும். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சம்பளம் கிடைக்கும்.

    குருவின் வக்ர காலம்

    18.11.2025 முதல் 19.12.2025 வரை கடகத்திலும், 20.12.2025 முதல் 31.12.2025 வரை மிதுனத்திலும் குரு வக்ரம் பெறுகிறார். இக்காலத்தில் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். இருப்பினும் குரு வக்ர காலத்தில் ஓரளவு உங்களுக்கு நன்மையும் செய்வார். அ

    க்கறை செலுத்தாத காரியங்களிலும் ஆதாயம் கிடைக்கும். முதல் முயற்சியில் தடை ஏற்பட்ட காரியம் 2-ம் முறையாக செய்யும் பொழுது அதில் வெற்றி கிடைக்கும். சுபச்செலவுகள் அதிகரிக்கும் நேரம் இது.

    சனியின் வக்ர காலம்

    2.7.2025 முதல் 17.11.2025 வரை, கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். இக்காலத்தில் தொழிலில் குறுக்கீடுகள் அதிகரிக்கும். எதிலும் அகலக் கால் வைக்க வேண்டாம். வருமானத்தை விடச் செலவு கூடும். தொழில் கூட்டாளிகள் விலகிக்கொள்வதாகச் சொல்லி அச்சுறுத்துவர். நல்ல காரியங்கள் செய்ய முன்வரும்போது குறுக்கீடு அதிகரிக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் குறையும்.

    சமுதாயப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். இக்காலத்தில் சனிபகவான் வழிபாடும், சுயஜாதகப்படி திசாபுத்திக்கேற்ற வழிபாடுகளும் அவசியம் தேவை. சனி - செவ்வாய் பார்வை காலத்தில் மிக மிக கவனம் தேவை.

    ×