என் மலர்
ரிஷபம்
2025 தமிழ் புத்தாண்டு ராசிபலன்
லாபகரமான வருடம்
அழகான ரிஷப ராசியினரே,
எதிலும் ஆர்வத்துடன் செயல்படும் ரிஷப ராசியினருக்கு பிறக்கப்போகும் விசுவாவசு ஆண்டு பண மழை பொழியும் ஆண்டாக அமையப்போகிறது. ஆண்டின் துவக்கத்தில் சனி பகவான் லாப ஸ்தானத்தில் நிற்கிறார். தனது மூன்றாம் பார்வையால் ராசியையும், ஏழாம் பார்வையால் 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பத்தாம் பார்வையால் 8ம் மிடமான அஷ்டம ஸ்தானத்தையும் பார்க்கிறார். இதுவரை ஜென்மத்தில் நின்ற குரு பகவான் 14.5.2025 முதல் தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு செல்கிறார்.
தனது ஐந்தாம் பார்வையால் 6ம்மிடமான ருண,ரோக, சத்ரு ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 8ம் மிடமான அஷ்டம ஸ்தானத்தையும், 9ம் பார்வையால் தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார்.
அதேபோல் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரித்த கேது பகவான் நான்காம் இடமான சுகஸ்தானத்திற்கு செல்கிறார். லாப ஸ்தானத்தில் சஞ்ரித்த ராகு பகவான் தொழில் ஸ்தானம் செல்கிறார். இதனால் இந்த ஆண்டிற்கு ஏற்படக்கூடிய பலன்களை பார்க்கலாம்.
விசுவாவசு ஆண்டின் பொதுவான பலன்கள்
12 ராசிகளில் பிறக்கும் போகும் தமிழ் புத்தாண்டு ரிஷப ராசியினருக்கு மிக மிக சாதகமாக உள்ளது என்றால் அது மிகைப்படுத்தலாகாது. உங்களின் தோற்றம், செயல்பாடு ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும். நடை, உடை, பாவனைகளில் கம்பீரம் ஏற்படும். தடைபட்ட செயல்கள் வெகு விரைவில் செயலாக்கம் பெறும்.
உங்களுடைய தகுதி, திறமை உயரும் சமூதாய அங்கீகாரம் ஏற்படும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மாற்றங்களும் ஏற்றங்களும் வீடு தேடி வரும்.குடும்ப உறுப்பினர்களிடையே அனுகூலமான சூழல் உருவாகும். சகல சௌபாக்கியமும் உருவாகும்.
ஜென்ம குருவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையத் துவங்கும். தொட்டது துலங்கும். தடைக்கற்கள் படிக்கற்களாக மாறும். தெய்வ அனுகூலம் தற்போது கிடைக்கப் பெறுவதால் சுய ஜாதக ரீதியான அனைத்து விதமான தோஷங்களும் சாபங்களும் விலகும். தடைபட்ட அனைத்து இன்பங்களும் மீண்டும் வந்து சேரும். கூப்பிட்ட குரலுக்கு குல தெய்வம் ஓடி வந்து நிற்கும்.
இனம் புரியாத நோய் தாக்கம், மனசஞ்சலம் பயம் அகலும். புதியதாக பிறப்பெடுத்தது போன்ற உணர்வு மேலோங்கும். உங்கள் வாழ்நாள் லட்சியங்களை, எண்ணங்களை கனவுகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றக் கூடிய முயற்சிகளில் ஈடுபடலாம். தடைபட்ட அனைத்து சுப நிகழ்வுகளும் நடக்கும்.
தடைபட்ட தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த காலமாக இருக்கும். குடும்ப விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். கடன் தொல்லை குறையும். மூத்த சகோதர, சகோதரிகள் சித்தப்பா மூலம் நல்ல ஆதாயம் உண்டு. குல தெய்வம் தெரியாதவர்கள் அதை கண்டுபிடிக்க முயற்சிக்கலாம்.
பூர்வீகம் தெரியாதவர்களுக்கு பூர்வீகம் தெரியும். குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடை தாமதங்கள் அகலும் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து மருமகள், மருமகன் பேரன் பேத்தியை பார்ப்பீர்கள். காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கும்.
கவுரவப் பதவி, கவுரவப் பட்டம் கிடைக்கும். பங்குச் சந்தை மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகமாகும். புதிய ரத்த அணுக்கல் உற்பத்தியாகி நோய் எதிர்ப்பு சக்தி கூடும். ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
பொருளாதாரம்
வருட பலனை பொறுத்தவரை அனைவரின் முதல் எதிர்பார்ப்பும் பொருளாதாரம் பற்றியதாகவே இருக்கும். பணபர ஸ்தானம் என்பது 2,5,8,11 இந்த நான்கு ஸ்தானங்களுக்கும் குரு சனி சம்பந்தம் உள்ளது. நியாயமாக நேர்மையாக உண்மையாக உழைப்பவர்களுக்கும் சுய ஜாதக ரீதியாக புதன், குரு, சனி தசை நடப்பவர்களுக்கும் செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும்.
அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் தரக்கூடிய காலகட்டம். வீண் இழப்புகள், விரயங்கள் நஷ்டங்கள் குறையத் துவங்கும். கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் அளவில் லாபங்கள் அதிகரிக்கும். வராக் கடன்கள் வசூலாகும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் PF பணம், பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும். வாடகை வருமானம் தரக் கூடிய சொத்துக்கள் சேரும். தடைபட்ட வாடகை வருமானம் வரத் துவங்கும். சொத்துக்களுக்கு நல்ல வாடகை கிடைக்கும்.
கிருத்திகை 2,3,4
சிலர் புத்திசாலியாக திட்டம் போட்டு புதிய தொழில் துவங்குவார்கள். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். மருத்துவ தொழில், நகைத்தொழில் , கவரிங் நகை, அழகு ஆடம்பர பொருள், போன்ற தொழில் சிறப்பான வளர்ச்சி பெரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள். வேலை மாறுவதை தவிர்த்தல் நலம். அஷ்டமாதிபதி, லாப ஸ்தானாதிபதியாகிய குரு தன் வீட்டை தானே பார்ப்பதால் மனைவி அல்லது உறவினரின் உயில் சொத்து, பங்குச்சந்தை, லாட்டரி, இன்சூரன்ஸ் ஆகியவற்றின் மூலம் எதிர்பாராத திடீர் தன வரவு ஏற்பட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பீர்கள்.
குழந்தை பிறப்பில் நிலவிய தடைகள் அகலும். நிம்மதியாக உறங்குவீர்கள்.இளம் பருவத்தினர் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகள் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். .
ரோகிணி
இது வசந்த காலம்.மனம் மிகுந்த உல்லாசமாக இருக்கும். கடந்தகால நெருக்கடிகள் குறையத் துவங்கும். வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். புதிய ஆபரணங்கள் துணிமணிகள் வாங்கி மகிழ்வீர்கள். அடமானத்தில் இருந்த நகை வீடு வந்து சேரும். வீடு மனை தொடர்பான சாதகமான பலன் நடக்கும்.
விற்காமல் கிடந்த பூர்வீக சொத்துக்களுக்கு நல்ல விலை கிடைக்கும் .ஒரு சிலருக்கு நல்ல இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தைகளால் பெரும் மகிழ்ச்சி அடைவீர்கள். வேலையில் உங்கள் திறமைகள் பாராட்டப்படும்.
வெளிநாட்டு வேலை அல்லது தொழில் மூலம் பணவரவு கிடைக்கும். தடைபட்ட குல தெய்வ வழிபாடு நிறைவேறும். ஆன்மீகச் சுற்றலாவிற்கு ஏற்ற காலம். தம்பதிகள் கருத்து வேறுபாடு மறையும். வீட்டில் சுப மங்கள நிகழ்வுகள் நடக்கும்.
மிருகசீரிடம் 1, 2
அன்றாடம் உழைக்கும் தொழிலாளிகளின் வறுமை, தரித்திரம் விலகும். சிலருக்கு சொந்தத் தொழில் ஆர்வம் உண்டாகும். கடந்த கால இழப்புகளில் இருந்து மீளும் நிலை உண்டாகும். கணவன் மனைவி உறவு பலப்படும். வீடு, வாகன முயற்சி சாத்தியமாகும்.
சிலருக்கு எதிர்காலம் பற்றிய வீண் பய உணர்வு மனதை வாட்டும். பல நாட்களாக இருந்து வந்த உடல் நல பிரச்னைகள் நீங்குவதோடு, மருத்துவ செலவு வெகுவாக குறையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இழந்த வேலை மீண்டும் கிடைக்கும்.
வீடு, வாகன யோகம் உண்டாகும். தொழில் மற்றும் சொத்துக்களுக்காக எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும்.தந்தையின் உள்ளுணர்வை புரிந்து கடந்த கால கசப்பான சம்பவங்களை மறக்க முயற்சிப்பீர்கள்.
திருமணம்
திருமணத் தடை அகலும். திருமண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும். இது வரை வரன் தேடி அலுத்தவர்களுக்கு நல்ல வரன் வரும். உங்கள் மனம் விரும்பிய வாழ்க்கைத் துணை அமையும். வீட்டுப் பெரியவர்களின் ஆசியுடன் திருமணம் நடக்கும். மறு திருமண யோகமும் கூடி வரும்.
மேலும் நின்று போன திருமணங்கள் இனி சுபமாக நடைபெறும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள்.
பெண்கள்
சுக்கிரன் பகவான் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மிகவும் மென்மையாக மற்றவர்களை அனுசரித்து செல்வீர்கள். எதையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மையும் அதிகமிருக்கும். நினைத்த காரியத்தை செம்மையாக முடிப்பீர்கள். மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வாழ்வீர்கள். உங்களை குழப்பத்தில் ஆழ்த்திய பல விசயங்கள் நல்ல முடிவிற்கு வரும்.
உங்களின் துன்பங்கள், துயரங்கள் குறைந்து நிம்மதி கிடைக்கும் காலம் வந்துவிட்டது. இதுவரை இருந்து வந்த தடை தாமதங்கள் நீங்கி கிடைத்தற்கரிய பல நற்பலன்கள் உங்களை தேடி வரும். இந்த ஆண்டு உங்களுக்கு ராஜயோகத்தை வழங்கக் கூடிய ஆண்டாக அமையப் போகிறது.
மாணவர்கள்
ஞாபக சக்தி அதிகமாகும். படித்த பாடம் அப்படியே மனதில் பதியும். நல்ல சத்தான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியத்தை கடைபிடிக்க வேண்டும். மாணவர்களுக்கு விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கும். எதிர்கால வாழ்க்கைக்கு பயன் தரும் கோடை வகுப்புகளில் சேர்ந்து பொது அறிவை வளர்ப்பீர்கள். இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதுபவர்கள் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.
பரிகாரம்:
சாதுக்கள் மற்றும் உடல் ஊனமுள்ளவர்களுக்கு அன்னதானம் செய்தல் நலம். ரிஷபம் என்பது நந்திகேஸ்வரரைக் குறிப்பதால், பிரதோஷ காலத்தில் நந்தி தேவரின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் ஈசனை தரிசித்து வழிபடுவது விசேஷம். இதனால், உங்கள் வாழ்க்கை வளம் பெறும்.






