search icon
என் மலர்tooltip icon

  ரிஷபம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

  ரிஷபம்

  சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2023

  அன்பும் அழகும் நிறைந்த ரிஷப ராசி அன்பர்களே இதுவரை உங்கள் ராசிக்கு 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் நின்ற சனி பகவான் 10ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு சென்று ஆட்சி பலம் பெறப் போகிறார். தன் 3ம் பார்வையால் 12ம்மிடமான அயன சயன விரய ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 4ம்மிடமான சுக ஸ்தானத்தையும் 10ம் பார்வையால் 7ம்மிடமான களத்திர ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.

  தொழில் ஸ்தான சனியின் பலன்கள்: ரிஷப ராசிக்கு சனி பகவான் 9,10ம் அதிபதி. 9,10ம் அதிபதி 10ல் ஆட்சி பலம் பெறுவது ரிஷப ராசிக்கு தர்மகர்மாதிபதி யோகமாகும். 9ம் இடத்தில் சனி பகவான் இருந்த போது தர்மகர்மாதிபதி யோகத்தால் ஆரம்பித்த தொழில் பெரும் விருட்சமாகி கனி கொடுக்கும் காலம் வந்துவிட்டது. தொழிலை இழுத்து மூடிவிட்டு வேறு வேலைக்கு சென்று விடலாமா? என்று நம்பிக்கை இழந்து இருந்தவர்கள் கூட வாழ்வில் செட்டிலாக்கி விடும் வகையில் மாற்றமான நல்ல சுப பலன்கள் உண்டாகும்.

  ஒரு மனிதனை சமுதாயத்தில் தலை சிறந்த மனிதனாக உயர்த்திக் காட்டுவது அவனுடைய தொழில் தான். தொழில் சிறப்பாக இருந்தால் மற்ற அனைத்தும் தானாக தேடி வரும். நிலையற்ற தொழிலால் வாழ்க்கையே போராட்டமாக இருந்தவர்களுக்கு சீரான தொழில் வளர்சியால் மன நிம்மதியான வாழ்க்கையும் அமையும். அன்றாடம் கூலி வேலை செய்து சம்பாதித்தவர்கள் சொந்த தொழில் செய்து பெரும் வருமானம் ஈட்டும் நேரம் வந்து விட்டது. வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் வாழ்க்கை தரம் உயரும்.

  சிலருக்கு வருமான வரி கட்டக் கூடிய அளவிற்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.தன வரவு சிறக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும்.குடும்பம் மகிழ்சியாக இருக்கும். உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். இந்த சனிப் பெயர்ச்சியில் தொழிலில் பெரிய சாதனையை செய்யக் கூடிய வாய்ப்புகள் தேடி வரும் 3ம் பார்வை பலன்: சனி பகவான் தனது 3ம் பார்வையால் ராசிக்கு 12ம்மிடமான விரய அயன, சயன ஸ்தானத்தை பார்க்கிறார். ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். உடலில் இடது கண், பாதங்களில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் தக்க மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுதல் வேண்டும். வீடு, அல்லது அலுவலகத்தை மாற்ற நேரும்.

  அடிக்கடி அலைச்சல் மிகுந்த பயணம் செய்ய நேரும். விரய ஸ்தானம் என்பதால் செலவுகளும் கட்டுக்கு அடங்காமல் இருக்கும். வளர்த்த கடா மார்பில் பாயும் என்பது போல் உங்களின் சகோதரர் அல்லது உங்களின் உதவியைப் பெற்றவர்களே போட்டியாக, எதிரியாக மாறுவார்கள். எனினும் உங்கள் திறமையால் சாமர்த்தியத்தால் எதிரிகளை வெல்வீர்கள். நேரத்திற்கு உண்டு, உறங்க முடியாமல் கடுமையாக உழைக்க நேரும்.

  7ம் பார்வை பலன்: 7ம் பார்வையாக 4ம்மிடமான சுக ஸ்தானத்திற்கு சனியின் பார்வை இருப்பதால் ஆரோக்கிய தொல்லைகள் சீராகும். சுக ஸ்தானம் என்றவுடன் வீடு, வாகனம், சொத்து, சுகம் மட்டும் கிடையாது. இந்த பிராப்தங்கள் இருந்தாலும் அதை அனுபவிக்க ஆரோக்கியமும் அவசியம். தாய், தாய் வழி உறவுகளின் அன்பு, ஆதரவு, ஆசிர்வாதம் கிடைக்கும்.

  தாய் வழிச் சொத்தில் இருந்த குழப்பங்கள் தாய்மாமா மற்றும் நண்பர்கள் உதவியுடன் முடிவுக்கு வரும். சொத்து தொடர்பான வழக்குகள் முடிவிற்கு வரும். வீடு,நிலம், தோட்டம், வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. விவசாயிகளுக்கு பழைய விவசாய கடன் அல்லது வட்டி தள்ளுபடியாகும். கால்நடை வளர்ப்பு, பண்ணைத் தொழில் மூலம் வருமானம் உண்டு. வீடு கட்டுதல், விரிவாக்கம் செய்தல், வாஸ்துப்படி வீட்டை திருத்தி அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. சிலருக்கு வாடகை வருமானத்தை அதிகரிக்கும் சொத்துக்கள் சேரும். வீட்டில் விலை உயர்ந்த அழகு, ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். ஒரு சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்து வாங்குவார்கள்.

  10ம் பார்வை பலன்: சனியின் 10ம் பார்வை ராசிக்கு ஏழாமிடமான களத்திர ஸ்தானத்திற்கு பதிவதால் கணவன், மனைவிக்கு சிறு கருத்து வேறுபாடு வந்து மறையும். பல நேரங்களில் சம்பந்திகள் சண்டையாகவும் மாற வாய்ப்பு உள்ளது. உறவினர்கள், நண்பர்களுக்கு பண உதவி செய்தால் திரும்ப வராது. அதுவே கணவன் மனைவி கருத்து வேறுபாடுக்கு காரணமாக அமையும். முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து முயற்சிகளும் சிறு முயற்சியில் வெற்றி வாய்ப்பை தேடித்தரும்.

  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய பணி மாற்றம் ஏற்படும். அரசு உத்தியோகத்திற்கு முயற்சித்தவர்களுக்கு பணி நியமன ஆணை கிடைக்கும். வேலை பார்த்த இடத்தில் இருந்து வந்த பிணக்குகள் சீராகும். இது வரை நிரந்தர வேலை இல்லாதவர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும்.

  சனியின் அவிட்டம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 17.1.2023 முதல் 14.3.2023 வரை:

  ரிஷப ராசிக்கு 7,12ம் அதிபதியான செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள் மூலம் சில அசவுகரியங்கள் ஏற்படலாம். இக்கால கட்டத்தில் சிலர் தொழில் அல்லது உத்தியோக நிமித்தமாக வாழ்க்கைத் துணையை பிரிந்து வாழலாம். அல்லது கணவன் மனைவி கருத்து வேறுபாட்டாலும் பிரிய நேரும். சில கணவன், மனைவி கருத்து வேறுபாடு பஞ்சாயத்து நீதி மன்றம் செல்லும் நிலையை ஏற்படுத்தலாம். எந்த வம்பு வழக்காக இருந்தாலும் நீதி மன்றம் செல்லாமல் பெரியோர்களின் முன்னிலையில் பேசி தீர்த்தல் நலம். முதல் திருமணம் தோல்வியில் முடிந்த சிலருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும் வாய்ப்பும் உள்ளது.

  சதயம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 14.3.2023 முதல் 6.4.2024 வரை:

  கோட்சாரத்தில் அக்டோபர்30, 2023 வரை 12ம் இடத்திலும் அதன் பிறகு 11ம் இடத்திலும் சஞ்சரிக்கும் ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் பயணம் செய்யும் காலத்தில் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலர் ஆறு மாதம் வேலை பார்ப்பார்கள் பிறகு வேலை பிடிக்கவில்லை என்று சொந்த தொழில் செய்வார்கள். மறுபடியும் தொழில் சரியில்லை என்று வேலைக்கு செல்வார்கள்.

  வாழ்க்கையில் பார்க்காத தொழில் கிடையாது,செய்யாத வேலை கிடையாது என்று ரீதியாக தொழில் மற்றும் வேலையில் மாறி மாறி இருப்பார்கள். இவர்களுக்கு தொழில் செட்டாகுமா? வேலை செட்டாகுமா? என்ற கேள்வியுடன் பெற்றோர்கள் ஜோதிடரைத் தேடி அலைந்து கொண்டு இருப்பார்கள் சிலர் தவறான நட்பு வலையில் மாட்டலாம்.சிலர் மன நிம்மதிக்காக ஊரை விட்டு, மாநிலம் விட்டு தொலைதூரம் சென்று குடியேறலாம். ஜாமீன் கையெழுத்து போடுதல், வங்கியில் பணம் இல்லாமல் காசோலை கொடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

  17.6.2023 முதல் 4.11.2023 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலங்களில் முறையான திட்ட மின்மையால் உங்களின் செயல்பாடுகள் உங்களை பதம் பார்க்கும். வெகு நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகள் உங்களுக்கு மன உளைச்சல் தரும். மிகப் பெரிய தொழில் நிறுவனங்களை நடத்தி வருபவர்கள் தொழிலுக்கு தேவையான இன்சூரன்ஸ் செய்து கொள்வது நலம்.

  பூரட்டாதி நட்சத்திர சஞ்சார பலன்கள் 6.4.2024 முதல் 29.3.2025 வரை: ரிஷப ராசிக்கு அஷ்டமாதிபதி மற்றும் லாபாதிபதியாகிய குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்யும் காலத்தில் கவனமாக செயல்பட்டால் இழுபறியில் இருந்த பூர்வீக சொத்து தொடர்பாக பேச்சு வார்த்தைகள் முயற்சிகள் சாதகமாகும் . சிலர் குலத் தொழிலில் இருந்து விடுபட்டு வேறு தொழில் செய்ய ஆர்வப்படுவார்கள். பல வங்கி ஏறியும் கிடைக்காத வீட்டுக் கடன், தொழில் கடன் இப்பொழுது கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கிய குறைபாட்டிற்கு வைத்தியம் செய்ய நேரும். அரசியல்வாதிகளிடையே கருத்து ஒற்றுமை ஏற்படும்.

  30.6.2024 முதல் 15.11.2024 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலத்தில் தொழிலை வளப்படுத்துவீர்கள். புதிய தொழில் கிளைகள் உருவாக்க ஏற்ற காலம். தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக உதவிக்கரம் நீட்டுவார்கள். உடன் பிறப்புகளால் சந்தோஷம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உருவாகும். பிள்ளைகளால் நிம்மதி கிடைக்கும். சுப விரையம் மிகுதியாகும். பூர்வீகச் சொத்து பிரிப்பதில் கருத்து வேறுபாடு ஏற்படும் அல்லது பூர்வீகச் சொத்து கை விட்டு போகும் நிலை வரும்.

  திருமணம்: சனியின் 10ம் பார்வை ராசிக்கு 7ம் இடமான களத்திர ஸ்தானத்தில் பதிகிறது. புனர் பூ தோஷத்தால திருமண வாய்ப்புகள் இழுபறியாகும்.ஜாதகம் சரியாக இருந்தால் வரன் பிடிக்காது. வரன் ஒத்து வந்தால் ஜாதகம் பொருந்தவில்லை போன்ற சங்கடங்கள் நிகழும். சிலருக்கு காதல் கலப்பு திருமணம் நடக்கலாம். 7ம்மிடத்துடன் சம்பந்தம் பெற்ற கிரகங்களின் தசா புக்தி நடந்தால் உரிய வயதில் திருமணம் நடைபெறும்.

  பெண்கள்: புகுந்த வீட்டாரின் அன்பும், ஆதரவும் மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் நிலவிய உட்பூசல் குறைந்து அமைதிப் பூங்காவாகும். தேவையற்ற பேச்சுக்கள், வாக்கு வாதங்கள் குறையும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வருமானம் உயரும். வருமானம் தரக்கூடிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கைவிட்டுப் போனது எல்லாம் தேடி வரும். பங்குச் சந்தை லாபம், அதிர்ஷ்ட பணம், சொத்துக்கள் என எதிர்பாராத ராஜ யோகங்கள் ஏற்படலாம். பெண்களுக்கு கணவரால் அதிர்ஷ்டமும், யோகமும் உண்டாகும்.

  பரிகாரம்: நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும் உங்கள் வயதிற்கும், தகுதிக்கும் திறமைக்கும் , பூர்வ புண்ணிய பலத்திற்கும் ஏற்ப சுப பலனை வழிபாட்டால் அதிகரிக்க முடியும். காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு இராகு காலத்தில்,செய்வது சிறந்தது. அதுவும் இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம். வசதி இருப்பவர்கள் உடல் நலம் குன்றியவர்களுக்கு மருத்துவ உதவி செய்யலாம்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ரிஷபம்

  சனிப்பெயர்ச்சி பலன்கள்

  ஜனவரி 24-ம் தேதி 2020 முதல் 2023 ஆண்டு வரை

  ஒன்பதாமிடத்தில் சனி, உயர்வுகள் வந்திடும் இனி!

  ரிஷப ராசி நேயர்களே!

  இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 9-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கின்றார். அஷ்டமத்துச் சனி விலகிவிட்டது. எனவே இனி தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. தொழில் ஸ்தானத்திற்கும், பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் என்பதால், சனி பகவான் தன் சொந்த வீடான மகர ராசியில் சஞ்சரிக்கும் பொழுது எண்ணற்ற நற்பலன்களை வழங்குவார். தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.

  மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கின்றார். அந்த குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. மேலும் அங்குள்ள குருவோடு இப்பொழுது சனியும் சேர்ந்து 'நீச்சபங்க ராஜயோகம்' ஏற்படப் போகின்றது. மகரத்தில் குரு இருக்கும் பொழுது, சனி சாதகமான பலன்களை ஏராளமாக கொடுக்கலாம்.

  பொன் பொருள் சேர்க்கை உண்டு

  டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பிதுர்ரார்ஜித ஸ்தானத்திற்கு சனி வருகின்றார். அதுமட்டுமல்லாமல் 9-ம் இடம் பாக்கிய ஸ்தானமாகவும் கருதப்படுகின்றது. அதே நேரத்தில் 10-ம் இடம் எனப்படும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியாக சனி விளங்குவதால், இதுவரை தடைப்பட்ட உயர்வுகள் தானாக வந்து சேரும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும் விதத்திலேயே இந்த சனிப்பெயர்ச்சி அமைகின்றது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகளும், எதிர்பார்த்த ஊதிய உயர்வும் வந்து சேரும். கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக மாறும். பிதுர்ரார்ஜித சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். உடல்நலம் சாதாரண சிகிச்சையிலேயே குணமாகி உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள்.

  சனியின் பார்வை பலன்கள்

  உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் 3, 6, 11 ஆகிய மூன்று இடங்களையும் முறையாகப் பார்க்கின்றார். எனவே இதுவரை பிரச்சினையுடன் வாழ்ந்த உங்களுக்கு மன அமைதி கிடைக்கப்போகின்றது. 3-ம் இடத்தை சனி பார்ப்பதால் முன்னேற்றப் பாதையில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உடல் ஆரோக்கியம் சீராகும். மேலும் யோககாரகனாக சனி விளங்குவதால், உத்தியோகத்தில் திடீரென புதிய பொறுப்புகளும், அதற்கேற்ற விதம் சம்பள உயர்வுகளும் கூட கிடைக்கலாம்.

  சனியின் பார்வை 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் பதிவதால், பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.

  சனியின் பாதசாரப் பலன்கள்

  27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரிய சாரத்தில் சனி சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், துணிந்து சில முடிவுகளை எடுத்து மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். சுக ஸ்தானாதிபதி சூரியன் என்பதால், சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும்.

  28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், வெற்றிச் செய்திகள் வீடு வந்துசேரும். குடும்பத்தில் விரிசல்கள் அகன்று உறவு பலப்படும். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணி தொடரும்.

  27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, திருமண வாய்ப்புகள் கைகூடும். திடீர் திருப்பங்கள் ஏற்படும். இடையில் கும்ப ராசியில் சனி சஞ்சரிக்கப் போகின்றார். எனவே 'சொந்த வீடு கட்டியும் அதில் வசிக்க முடியவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, அதில் குடியேறும் முயற்சி கைகூடும்.

  குருப்பெயர்ச்சிக் காலம்

  சனிப்பெயர்ச்சி காலத்தில், மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 10-ல் குரு வருவதால் பதவி மாற்றங்களும், இடமாற்றங்களும் உருவாகலாம். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, லாப ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, 'விபரீத ராஜயோக' அடிப்படையில் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

  ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

  21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சி நடக்க உள்ளது. அப்போது மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு மனநிம்மதி குறையும். எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். வாங்கிய இடத்தை விற்க நேரிடும். தூரதேசத்தில் உள்ள சொந்தங்களால் சில நன்மைகள் ஏற்படும். குடும்ப ரகசி யங்களை வெளியில் சொல்வதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படலாம்.

  8.10.2023-ல் நடைபெறும் பெயர்ச்சியின்போது, மீனத்தில் ராகுவும், கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அப்பொழுது உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம் பலம்பெறுகின்றது. வெளிநாட்டு வணிகம் லாபம் தரும். பிள்ளைகள் வெளிநாடு செல்ல எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, இதுவரை கேட்டுக் கிடைக்காத சலுகைகள் இப்பொழுது கிடைக்கலாம்.

  வெற்றிக்குரிய வழிபாடு

  சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனி பகவானை வழிபட்டு வருவதோடு, இல்லத்து பூஜை அறையில் அபிராமி அம்மன் படம் வைத்து, அபிராமி அம்மன் பதிகம் பாடி வழிபட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எளிதில் வெற்றி கிடைக்கும்.

  ×