என் மலர்

  விருச்சகம் - ஆண்டு பலன் - 2023

  விருச்சகம்

  ஆங்கில புத்தாண்டு ராசிப்பலன் 2023

  வீரமான விருச்சிக ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். முன்னோர்களின் நல்லாசி யையும், குல தெய்வ அருளை யும் பெற்றுத் தரவிருக்கும் ஆரவாரமான புத்தாண்டாக இந்த வருடம் அமையப் போகிறது. அனைத்து விதமான நல்ல முயற்சிகளும் பலிதமாகும்.

  மனதிற்குப் பிடித்ததை பிடித்தபடி செய்வீர்கள்.திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைவீர்கள். இந்த வருடம் சனி மற்றும் ராகு கேதுவின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. குருவின் சஞ்சாரம் சற்று சுமாராக உள்ளதால் ஆன்மீக வழிபாட்டில் கவனம் செலுத்தினால் மலை போல் வந்த துன்பம் பனி போல விலகும்.

  குருவின் சஞ்சார பலன்கள்:

  விருச்சிக ராசிக்கு 2,5ம் அதிபதியான குருபகவான் ஏப்ரல் 22, 2023 வரை 5ம் இடத்திலும் அதன் பிறகு 6ம் இடத்திலும் சஞ்சாரம் . செய்கிறார். வீடு, வாகனம் போன்ற சுப விரயத்திற்கு கடன் பெறலாம். சுப செலவுகளுக்கு சகோதர சகோதரியிடம் இருந்து கணிசமான தொகை கிடைக்கும். தொழில் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உறவுகளிடம் அமைதிப் போக்கினை கையாளவும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் நலனில் அதிக கவனம் தேவை. ஆரோக்கியக் குறைபாட்டை முறையான வைத்தியத்தில் சரி செய்ய முடியும்.

  வாழ்க்கைத் துணையின் பிரச்சினைகள் தீரும். ஆடம்பரச் செலவைக் குறைப்பதன் மூலம் சேமிப்பை அதிகரிக்க முடியும். குருவினால் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் பாதிப்பு இருக்காது. குடும்ப நலனுக்காக ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வர திட்ட மிடுவீர்கள். தடைபட்ட வேலை கிடைக்கும். வேலையாட்களால் தொல்லைகள் உருவாகலாம்.அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். பழைய வீட்டை புதுப்பித்து பொழிவு பெறச் செய்வீர்கள்.

  சனியின் சஞ்சாரபலன்கள்:

  ராசிக்கு 3, 4ம் அதிபதியான சனி பகவான் ஜனவரி 17, 2023 முதல் 4ம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். இது அர்தாஷ்டமச் சனியின் காலமாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். தேடி வரும் அதிர்ஷ்டத்தை தக்க சமயத்தில் பயன்படுத்தி பலன் பெறுவார்கள். தகுதிக்கும் திறமைக்கும் மீறிய வருமானம் கிடைக்கும். பங்குச் சந்தையில், யூக வணிகத்தில் பெரும் லாபத்தை கொடுப்பார்.

  பூர்வீகச் சொத்தில் நிலவிய குழப்பங்கள் தீரும். குழந்தைகளால் ஏற்பட்ட தர்ம சங்கடங்களும் பிரச்சனைகளும் அகலும்.புத்திர தோஷம் நீங்கும்.பிள்ளைகளுக்கு சுப நிகழ்வுகள் நடக்கும். சிலருக்கு புதியதாக காதல் உருவாகும். சிலருக்கு பட்டுப் போன காதல் மீண்டும் துளிர்விடும். புகழ், அந்தஸ்து, கவுரவம் உண்டாகும்.

  மனதளவில் ஆன்மீக வாதியாகவும் வெளி உலகத்திற்கு நாத்திகவாதியாகவும் மனதளவில் ஆன்மீகவாதியாகவும் இருப்பவர்களின் பக்தி வெளிப்படையாகும். சாஸ்த்திர நம்பிக்கை அதிகரிக்கும். குல தெய்வக குற்றம் நீங்கும். குல தெய்வ கோவிலுக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பு உண்டாகும். வயதான சிலர் பூர்வீகம் சென்று செட்டிலாவார்கள். அயல் நாட்டிலிருந்து பூர்வீகம் திரும்ப முடியாமல் சிரமப்பட்டவர்களுக்கு பூர்வீகம் திரும்பக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும். விரும்பிய பதவி மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் பதவியில் திறமைக்கு ஏற்ற பாராட்டும் பரிசும் கிடைக்கும். பணிச்சுமை குறையும். தொழிலில் புதிய சிந்தனைகளை செயல்படுத்துவீர்கள். தாய் மாமாவின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும்.

  ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்:

  அக்டோபர் 30, 2023 வரையில் ராசிக்கு 6ல் ராகுவும், 12ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். அதன்பிறகு ராகு 5ம் இடத்திற்கும், கேது 11ம் இடத்திற்கும் செல்கிறார்கள்.

  பண வரவு அமோகமாக இருக்கும். பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல வாபத்தை பெற்றுத்தரும். பத்திரிக்கை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்ய உகந்த காலம்.பிள்ளைகளின் சுப நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும். இழந்த பதவி தேடி வரும்.

  உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டு. பூர்வீகச் சொத்தில் நிலவி வந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும். அரசியல்வாதிகளுக்கு ஆதாயம் உண்டு. மகன், மகளுக்கு எதிர்பார்த்திருந்த வேலை கிடைக்கும்.பிள்ளைகளின் சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தை நடக்கும்.அதனால் சில செலவுகளும் வரும். கூட்டுத் தொழில் புரிபவர்கள் பொறுமை, நிதானத்துடன் இருக்க வேண்டும். தாய், தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

  திருமணம்: திருமணமாகதவர்களுக்கு திருமணம் கூடி வரும். திருமணக் கனவு நினைவாகும். ராசிக்கு சனியின் பத்தாம் பார்வை இருப்பதால் நல்ல சொந்த தொழில் செய்யும் வரன் அமைய வாய்ப்புள்ளது. வெகு சிலருக்கு அர்தாஷ்டமச் சனியால் திருமணம் தள்ளிப் போகலாம்.

  பெண்கள்: தம்பதிகளின் உறவில் அந்யோன்யம் நீடிக்கும்.புதிய முயற்சிகளை கவனத்துடன் அணுகவும்.ஆரோக்கியத்தில் அக்கரை தேவை.தாய் வழி இல்ல விசேஷங்களில் நடைபெறும் உறவுகளின் சந்திப்பு பால்ய வயது இன்பங்களை மலரச் செய்யும். சகோதரருக்கு கொடுத்த பணம் வசூலாகும்.குடும்ப உறவுகளிடையே நிலவி வந்த சங்கடங்கள் மறையும். தன வரவு தாராளமாக இருக்கும். அடமான நகைகள் மீண்டு வரும்.

  மாணவர்கள்: கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மீண்டும் தொடர வாய்ப்பு கிடைக்கும். சிலர் அரியர்ஸ் பாடத்தையும் சேர்த்து எழுதி உயர் கல்விக்குச் செல்வார்கள். குழந்தைகள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவார்கள். வேற்று மொழி கற்கும் ஆர்வம் அதிகரிக்கும்.

  விசாகம் 4: மன சஞ்சலங்கள் பஞ்சம குருவால் சீராகும். பிரிந்த நட்புகள் மலரும். உறவுகளால் ஏற்பட்ட பகைமை மாறும். சொத்துக்காக சண்டையிட்டவர்கள் சொந்தம் தான் முக்கியம் சொத்து முக்கியமல்ல என்பதை உணர்வார்கள். புரிதல் உண்டாகும். தடைபட்ட பொருள் வரவு சீராகும். திருமணம், குழந்தை பேறு போன்ற சுப விசயங்கள் மனதில் மட்டற்ற மகிழ்சியை தரும்.கடன்களால் ஏற்பட்ட கவலைகள் அகலும்.பெண்களுக்கு எதிர்பார்த்த உத்தியோக மாற்றம் சித்திக்கும் கணவன், மனைவி உறவில் அன்பு அதிகரிக்கும். புத்தியை தீட்ட வேண்டிய காலம்.புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நினைப்பதெல்லாம் நடக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்தை விற்று புதிய வீடு வாங்குவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். தங்கம் வாங்குவீர்கள். பிரார்த்தனைகள் உடனே பலிதமாகும்.

  பரிகாரம்: பெளர்ணமி திதியில் சத்திய நாராயணர் பூஜை நல்ல பலன்கள் அதிகரிக்கும்.

  அனுஷம்: தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கோபம் குறையும். வீண் அலைச்சல் நீங்கும். வியாபாரத்தில் தேங்கிய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் குறைந்தநேரம் வேலை பார்த்து அதிக வருமானம் ஈட்டுவீர்கள். தொழில், வேலையில் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வெளிவட்டாரத் தொடர்புகள் மூலம் தொழில், வியாபாரம் விரிவடையும். மனதிற்கு பிடித்த வரன் அமையும். பெரியோர்களின் நட்பும் நல் ஆசியும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். விரும்பிய வரன் கை கூடி வரும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து விசயத்தில் இருந்த வழக்குகள் சாதகமாகும். சொத்துக்கள் விற்பனையால் ஆதாயம் உண்டு.பெற்றோரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணவரவு சரளமாகும். உறவுகளின் அன்பில் உள்ளம் குளிரும்.

  பரிகாரம்: குலதெய்வ வழிபாட்டை முறைப்படுத்த பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமை அடையும்.

  கேட்டை: எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையாட்களால், உடன் பணிபுரிபவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமூகமாகும். மறைமுக எதிர்ப்புகள் விலகி நன்மை உண்டாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். அசையாச் சொத்து வகையில் அனுகூலங்கள் உண்டாகும். இளவயதினருக்கு புத்திர பிராப்தி உண்டாகும். வயோதிகர்களுக்கு தாத்தா, பாட்டி யோகம் உண்டு. ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பும், முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். நண்பர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் பண உதவி கிடைக்கும்.

  வீட்டில் சிறுசிறு சுப மங்கல நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். இல்லத்து விசேஷங்களுக்கு பாராமுகம் காட்டிய உறவுகளின் வருகை ஆனந்த கண்ணீரை வரவழைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட இன்னல் தீரும்.தம்பதிகளிடையே இணக்கமான சூழல் நிலவும். வரவு செலவு சீராக இருக்கும். ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.

  பரிகாரம்:ஞாயிற்று கிழமை காலை 6-7 சூரிய ஓரையில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

  விருச்சிக ராசியினர் புத்தாண்டில் சென்று வழிபட வேண்டிய ஸ்தலம் திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில். இங்கு சென்று வழிபட்டு வர சங்கடங்கள் நீங்கி ஒளிமயமான எதிர்காலம் அமையும்.

  விருச்சகம்

  ஆங்கில ஆண்டு பலன் - 2022

  அறிவாற்றலும், முன் கோபமும் நிறைந்த விருச்சிக ராசியினருக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் வருட கிரகங்களின் சஞ்சாரங்கள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. ஏப்ரல் 2022-க்குப் பிறகு பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். உயர்ந்த நிலையை எட்டிவிட வேண்டும் என்று வைராக்கியத்துடன் செயல்படுவீர்கள். மூளை பலம் தான் மூலதனம் என புதிய சிந்தனைகளால் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள்.கடந்த ஒரு வருடங்களாக வேலையின்மை மற்றும் தொழில் தோல்வியையும் சந்தித்து வந்த உங்கள் நிலை மாறும். ஆரோக்கிய குறைபாடு அகலும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். தொல்லை கொடுத்த வாழ்க்கை துணையிடமிருந்து விவாகரத்து கிடைக்கும். மனதிலிருந்த கவலைகள் மாறும். இனி விரிவான புத்தாண்டு பலன்களை காணலாம்.

  குரு சஞ்சார பலன்: ஏப்ரல் 13, 2022 வரை நான்காம் இடத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் நான்காமிடம் என்பது சுகஸ்தானம் என்பதால் லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துவிதமான சுக போக நாட்டம் சற்று மிகுதியாகும். தேவையில்லாத எண்ணங்கள் நிறைவேறாத செயலில் முயற்சியை உண்டாக்கி மன சஞ்சலத்தையும் அமைதியற்ற நிலையையும் ஏற்படுத்துவார். உடல் நலம் பாதிப்படையும். நெருங்கிய உறவுகள் பகையாவார்கள். தாய் வழி உறவுகளிடம் வீண், வம்பு, வழக்கு உருவாகும் அல்லது பொருளாதாரத்திற்கு யாருடைய கட்டுப்பாட்டிலாவது இருக்க நேரும்.

  சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு அமையும். சிலர் பழைய வீட்டை சீர்திருத்தியமைக்கலாம். சிலருக்கு அடமானத்திலிருந்த சொத்துக்கள் மீண்டு வரும். விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்று பணமாகிவிடும் அல்லது வேறு புது சொத்தாகி விடும். சிலருக்கு சொத்து வாங்க தாயின் ஆதரவு கிடைக்கும். ஓட்டை வண்டியை வைத்து காலத்தை ஒட்டியவர்கள் புது வண்டி வாங்கலாம்.சிலர் கடன்பட்டு வயல், தோட்டம் வீடு, வாகனம் வாங்குவார்கள்இதுவரை வாடகைக்கு போகாமல் இருந்த அசையும் அசையாச் சொத்துக்கள் வாடகைக்கு போகும். தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும்.

  ஏப்ரல் 13-ல் குரு கும்பத்திலிருந்து மீனத்திற்கு பெயர்ந்து ஆட்சி பலம் பெற்றவுடன் அதிர்ஷ்டம் பேரதிர்ஷடமாகும். கடன் வாங்கி புதிய தொழில் முதலீடுகள் செய்யலாம். அதிர்ஷ்டப் பணம் அதிர்ஷ்ட சொத்து, பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தாயின் ஆரோக்கியக் குறைபாட்டில் இருந்த கவலைகள் அகலும். தாய் வழி உறவுகளால் சில ஆதாயங்கள், செல்வம் கிடைக்கும். ஓய்வு நேரத்தை வீணடிக்காமல் உழைப்பீர்கள். செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும்.

  பலருக்கு சுய விருப்ப விவாகம் நடைபெறும். மூத்த சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். சிலருக்கு ஒரு துணை இருக்க மற்றும் ஒரு துணை கிடைக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். குலதெய்வ, குடும்ப தெய்வ வழிபாடு உங்களுக்கு உதவியாக இருக்கும். உடலும் உள்ளமும் குளிரும். சில பாதகங்கள் இருந்தாலும் பல திருப்புமுனையான சம்பவங்கள் உங்களை மகிழ்விக்கும்.

  சனியின் சஞ்சார பலன்கள்: கோட்சார சனி 3ல் இருப்பதால் பல்வேறு சோதனைகள் சாதனையாகும். ஆயுள் ஆரோக்கியம் சீராகும். உங்களின் முயற்சிகள் பலிதமாகும். தைரியம் ,தெம்பு உருவாகும். உடலிலும் மனதிலும் தெம்பு பிறக்கும். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சுற்றமும் நட்பும் உங்களின் முயற்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள். எழுத்து துறையில் இருப்பவர்களின் தனித்தன்மை மிளிறும். உழைப்பிற்கு ஏற்ற பலன் உண்டு. எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்தது நினைத்தபடியே நடக்கும்.

  இது வரை தடைபட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து உங்களை மகிழ்சி கடலில் ஆழ்த்தும். சிந்தனை செயல் திறன் கூடும். முகப் பொழிவு ஏற்படும். தன வரவு இரட்டிப்பாகும். திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கிட்டும்.சிலருக்கு வீடு மாற்றம் செய்ய நேரும். அசையும், அசையாச் சொத்து வாங்கி மகிழ்வீர்கள்.

  26.2.2022 முதல் 6.4.2022 வரை ராசி அதிபதி செவ்வாயும் 3, 4-ம் அதிபதி சனியும் 3ம் இடமான சகாய ஸ்தானம், இளைய சகோதர ஸ்தானத்தில் இணைகிறார்கள். செவ்வாய் உங்களின் ராசி அதிபதி. அவரே 6ம் அதிபதி என்பதால் உங்களுக்கு எதிரி என்று ஒருவர் வெளியில் இருந்து வரத் தேவை இல்லை. உங்களின் செயல்பாடே உங்களுக்கு எதிரியாக மாறும்.

  சகோதர்களிடம் ஒத்துப் போக முடியாத நிலை உண்டாகும். சிலரின் தாய், தந்தை உயில் எழுதலாம். உயில் உங்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். காது, மூக்குத் தொண்டைக்கு சிகிச்சை செய்ய நேரும். கண் திருஷ்டி செய்வினைக் கோளாறு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும்.உஷ்ணம் தொடர்பான நோய்கள் வாட்டி எடுக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். எனினும் தேவைக்கு அதிகமாக கடன் வாங்கினால் திருப்பி கட்ட முடியாமல் பகை உருவாகும்.

  சொத்து அடமானத்தின் பெயரில் கடன் வாங்கும் எண்ணம் தோன்றும். யாருக்கேனும் ஜாமீன் போட்டு வம்பு வழக்கில் சிக்கி கொள்ள நேரும். விற்கப்பட வேண்டிய சொத்துக்கள் முறையான ஆவணம் இன்மையால் தடைபடும். அண்டை அயலாருடன் சொத்து தொடர்பான எல்லைத் தகராறு உண்டாகும். அடுத்தவர் தவறை சுட்டிக் காட்டி உங்களின் வெளிப்படையான பேச்சால் பிரச்சனையை விலை கொடுத்து வாங்கக் கூடாது.

  ராகு/கேது சஞ்சார பலன்: ராசியில் கேதும் 7-ல் ராகுவும் 12.4.2022 வரை சஞ்சா ரம் செய்கிறார்கள். ராசியில் உள்ள கேது உங்க ளின் அனுசரணையான அணுகு முறை யால் அனைவரின் நன்மதிப்பைப் பெற்றுத் தரும். பொதுக் காரியங் களில் ஈடுபடுபவர்களின் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, கௌரவம் உயரும். உங்கள் இன, மத இயக்கங்களில் முதன்மைப் பதவியும், கௌரவமும் தேடிவரும். லக்னத்தில் நிற்கும் கேது பலவிதமான தொழில் ஞானத்தை வழங்குவார். ஏழாமிட ராகு மிகுதியான பொருளாசையைக் கொடுத்து தவறான செயலைத் தூண்டுவார். ராகுவின் தாக்கத்தால் ஆன்மா தன் தொழில் ஞானத்தை மறக்கும்.

  பரம்பரையாக கௌரவத் தொழில் செய்பவர்கள் தொழில் தொடர்பான நல்ல முடிவை எடுக்கிறோம் என்று தவறான முடிவை எடுக்கவைக்கும் காலம். அதிர்ஷ்டத்தின்மீது நம்பிக்கை வைத்து வருமானத்தை அதிகரிக்கும் எண்ணம் தோன்றும். பல ஆண்டுகளாக தொழில் செய்தவர்கள்கூட தவறான முடிவை எடுக்கிறார்கள். அதிர்ஷ்டத்தைத் தேடி லாபத்தை இழக்கநேரும். ஏழாமிட ராகு ஒருசிலரின் தந்தைக்கு தவறான நட்பை ஏற்படுத்தி, அதன்மூலம் பொருள் இழப்பை மிகுதிப் படுத்தி, தொழிலை நிலைகுலையச் செய்யும். கௌரவத்தைக் காக்க பூர்வீக சொத்தையும் இழக்கநேரும் என்பதால் கவனம் தேவை.

  12.4.2022-ல் கேது 12-ம் இடத்திற்கும் ராகு 6-ம் இடத்திற் கும் மாறுகிறது. உடல் ஆரோக்கியம் குறையும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். அரசியல் பணிகளில் இருப்பவர்களுக்கு சுமாரான நேரம். தொழில் தொடர்பான அனைத்து முயற்சிகளும் பலிதமாகும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வரலாம். பழைய பங்குதாரர்கள் வெளியேறலாம். நண்பர்களும் பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள். தடைப்பட்ட திருமணங்கள் மனச் சங்கடத்துடன் நடக்கும். வேதனைப்படுத்தும் காதல்- கலப்புத் திருமணங்கள் அதிகமாக நடக்கும். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும். திருமணமான தம்பதிகள் மகிழ்சியாக இருந்தாலும், சம்பந்திகளின் சண்டையால் மன வருத்தம் ஏற்படும். இரண்டாவது குழந்தைக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படும்.

  தொழில் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் தொழில் சட்டத்தின் பிடியில் சிக்கவைக்கும். சிலருக்கு வருமான வரி, சொத்து வரி போன்றவற்றால் மன சஞ்சலம் ஏற்படும்.

  திருமணம்: ராசியில் கேதுவும் ஏழில் ராகுவும் உள்ளதால் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் புதன், கேது தசை நடப்பவர்களுக்கு மிகைப்படுத்தலாக இருக்கும். கோட்சார சனி, குருவால் திருமணத் தடை இருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. மேலும் 2022 ஏப்ரலில் ராகு/கேதுக்கள் விருச்சிகம், ரிஷபத்தைக் கடக்கும் வரை விருச்சிக ராசியினருக்கு நடக்கும் திருமணம் கலப்பு திருமணமாகவோ அல்லது மன நிறைவற்றதாகவோ இருக்கும். திருமண வாழ்வில் நிம்மதி இருக்காது. மன கசப்பான சம்பவங்கள் நடைபெறும். ஏப்ரல் 2022-க்குப் பிறகு நடைபெறும் திருமணம் நீடித்த நிலைத்த இன்பம் தரும்.

  பெண்கள்:பணப்புழக்கம் சரளமாக இருக்கும். வீட்டிலும் பணிபுரியும் இடத்திலும் சாதகமான சூழல் நிலவும். தாய் வழி உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தாய் வழிச் சொத்தில் மூத்த சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து ,பணம் வரும். அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள் ,அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவி உறவில் அன்பு மிளிரும்.

  விவசாயிகள்: கடந்த ஆண்டு இழப்புகளால் ஏற்பட்ட எதிர்மறை எண்ணங்கள் மறையும் நேரம் வந்து விட்டது. இந்த ஆண்டு விளைச்சல் பணத்தை வீடு கொண்டு வந்து சேர்க்கும். பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும். கடன் பிரச்சனை சிறிது சிறிதாக குறையும்.வாய்க்கால் வரப்பு தகராறு பேச்சு வார்த்தை சமரசமாகும்.

  உத்தியோகஸ்தர்கள்: அரசு மற்றும் தனியார் துறை ஊழி யர்களுக்கும் ஓவர் டைம் வருமானம் மகிழ்ச்சியைத் தரும். பதவி உயர்வு, ஊதிய உயர்வுடன் கூடிய இடமாற் றம் உண்டாகும்.தொழிலா ளர்களுக்கு குறைந்த உழைப்பும் நிறைந்த வருமானமும் கிடைக்கும். ஆனால் உயர் அதிகாரிகளால் சில சங்கடங்கள் நிலவும். அதனால் வேலை மாற்றம் செய்யும் சிந்தனை மேலோங்கும்.

  வேலை இல்லாமல் திணறிக் கொண்டு இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்ய ஏற்ற நேரம். சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிட்டும்.

  முதலீட்டாளர்கள் / வியாபாரிகள்: தொழிலில் நிலவிவந்த மந்தநிலை மாறி, தொழிலை விரிவுபடுத்த வாய்ப்பு உருவாகும். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும்.தொழில் ஆரம்பித்து காலூன்ற முடியாமல் தவித்தவர்களுக்கு தொழில் முன்னேற்றம் திருப்தி தரும்.கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த மாற்றுக் கருத்து மறையும். பொருளாதாரத்தில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் சமாளிக்கும் சூழ்நிலை உண்டாகும்.

  அரசியல்வாதிகள்: உங்களின் மூன்றாம் அதிபதி சனி மூன்றில் ஆட்சி பலம் பெற்று ஐந்தாமிடமான பதவி ஸ்தானத்தை பார்ப்பதால் விரும்பிய பதவி தேடி வரும். சனி பகவான் பதவி கொடுத்தால் யார் தடுக்க முடியும். மேலும் ஏப்ரலில் குரு 5ம் இடமான மீனத்தில் ஆட்சி பலம் பெற்றவுடன் உங்களுக்கு பல்வேறு விதமான சாதகமான பலன்கள் நடைபெறும்.ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்பதை மூன்றாமிட சனி புரிய வைப்பார்.

  மாணவர்கள்: ராசியில் உள்ள கேதுவால் ஞானம் பெருகும். சுமாராக படித்தவர்கள் கூட நல்ல மதிப்பெண் பெறுவார்கள். கல்வியில் தடை ஏற்பட்டு இருந்தால் மீண்டும் தொடர வாய்ப்பு ஏற்படும். ஆசிரியர் , மாணவர்களுக்குள் நல்லுறவு ஏற்படும். 10ம் வகுப்பு 12ம் வகுப்பு படிக்கும் விருச்சகராசியின்ர் விளையாட்டில் அதிக கவனம் செலுத்துவீர்கள். மாநில, மாவட்ட அளவிளான போட்டி பந்தயங்களில் கலந்து வெற்றி பெற்று பரிசுகளும் பதக்கங்களும் வாங்கி குவிப்பார்கள்.

  விசாகம் 4-ம் பாதம்: புத்திர பாக்கியம் சித்திக்கும். சாஸ்த்திர ஈடுபாடு ஆன்மீக நாட்டம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். நிலுவையில் உள்ள தொழில் தொடர்பான வழக்குகள் சாதமாகும். வியாழக் கிழமை ஸ்ரீ சாய் பாபாவை வழிபட நன்மைகள் அதிகமாகும்.

  அனுஷம்: ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறிய உடல் உபாதைகளை கண்டு கொள்ளாமல் இருந் தால் பின் நாளில் அதுவே பெரிய பிரச்சனை யாக உருவாகும். முன்னோர் வழி நோய் தாக்கம் உருவாகலாம். சனிக்கிழமை ஸ்ரீ ஆஞ்ச நேயரை வழிபட ஏற்றமான பலன் உண்டாகும்.

  கேட்டை: பல வருடங்களாக தீராத பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாதத்தவணையில் பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். தினமும் சிவபுராணம் படித்து வர நிம்மதி உண்டாகும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×