என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விருச்சகம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்
விருச்சகம்
சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2023
இதுவரை உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் நின்ற சனி பகவான் 4ம் இடமான சுக ஸ்தானத்திற்கு சென்று ஆட்சி பலம் பெறப் போகிறார். தன் 3ம் பார்வையால் 6ம்மிடமான ருண , ரோக, சத்ரு ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 10ம் இடமான தொழில் ஸ்தானத்தையும், 10ம் பார்வையால் ராசியையும் பார்க்கிறார்.
அர்தாஷ்டமச் சனியின் பலன்கள்: விருச்சிக ராசிக்கு 3, 4ம் அதிபதியான சனி பகவான் 4ம் இடத்தில் ஆட்சி பலம் பெறப் போகிறார். உங்களின் ராசி அதிபதி செவ்வாயும் சனியும் பகை கிரகங்கள் என்பதால் ராசிக்கு சனியின் பத்தாம் பார்வை இருப்பதல் முன் யோசனையும் முறையான திட்டமிடுதலும் மட்டுமே உங்களை சரியான பாதையில் அழைத்துச் செல்லும். அஷ்டம சனியின் காலத்தில் நடக்கும் கெடுதலில் பாதியை அர்தாஷ்டம காலத்தில் கொடுப்பார் என்பதால் சுபமும் அசுபமும் இணைந்தே நடக்கும்.வாழ்க்கையை நகர்த்துவதில் இருந்த சிரமங்களை சீராக்கி நிம்மதி அடைவீர்கள்.
எந்தப் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று தெரிந்து அதன்படி செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளால் பூர்வீகச் சொத்தில் நிலவிய மன உளைச்சல் குறையும். உயில் எழுத, திருத்தம் செய்ய உகந்த நேரம்.ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் அகலும். பாகப்பிரிவினை சுமூகமாகும். அண்டை அயலாருடன் இருந்த சொத்துக்கள் தொடர்பான எல்லைத் தகராறு அகலும். வீடு மாற்றம், வேலை மாற்றம், குழந்தைகளுக்கு பள்ளி, கல்லூரி மாற்றம் என அவரவர் வயதிற்கேற்ற மாற்றம் நிகழும்.
அரசு ஊழியர்களுக்கு விரும்பிய ஊருக்கு வேலை மாற்றம், பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வும் கிடைக்கும். செய்தி, தகவல் தொடர்பு, ஊடகங்களில் வேலை செய்பவர்களுக்கு ஏற்றம் உண்டாகும். முதலீடு இல்லாத, ஆலோசனை வழங்கி புத்தியைத் தீட்டி சம்பாதிப்பவர்களின் வருமானம் இரட்டிப்பாகும்.
விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு தொட்டது துலங்கும். விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். புதிய வீடு, வாகனம், தோட்டம் வாங்கும் யோகம் உள்ளது. வீடு, வாகனம், தொழில் போன்றவற்றிற்கு விண்ணப்பித்த கடன் கிடைக்கும். தொலைந்த கைவிட்டுப் போன பொருட்கள் கிடைக்கும். சிலருக்கு தாயார் மூலம் திரண்ட சொத்து அல்லது பெரிய அதிர்ஷ்ட தொகை கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல், டென்சன் குறையும்.
3ம் பார்வை பலன்:சனியின் 3ம் பார்வை 6ம் இடமான ருண , ரோக சத்ரு ஸ்தானத்திற்கு இருப்பதால் உங்களை சாதாரணமாக நினைத்தவர்கள் உங்களது திறமைகளை உணர்வார்கள். சவாலான செயல்களைக் கூட நேர்த்தியாக செய்து முடித்து வெற்றி வாகை சூடுவீர்கள். பட்டம், பதவி, போட்டி, பந்தயம் போன்ற அதிகார அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகொடுக்கும்.அரசு வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். அடிப்படை தொழிலாளிகளுக்கு வரவும் செலவும் சமமாக இருக்கும்.
போட்டி, பொறாமை, கண் திருஷ்டி காரணமாக சிறு சிறு உடல் பாதிப்பு உண்டாகும். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஏதாவது நோய் தாக்கம் ஏற்பட்டால் தக்க மருத்துவரை உடனே அணுக வேண்டும். 6ம் இடத்திற்கு சனி பார்வை இருப்பதால் பலர் கடன் கொடுக்க முன்வார்வர்கள். அளவுக்கு மீறிய கடன் ஆபத்து என்பதால் தேவையற்ற கடன் வாங்குவதை தவிர்த்து சிக்கனமாக, சிறப்பாக வாழ்வது புத்திசாலித்தனம்.
7ம் பார்வை பலன்: சனி பகவான் தன்னுடைய 7ம் பார்வையால் 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழில் போட்டிகளை சமாளிக்க அதிக சிரமங்களை சந்திக்க நேரும். இது வரை எதிரி, போட்டி என்றால் என்னவென்றே தெரியாது இருந்த உங்களுக்கு நண்பர்களே எதிரி என்ற உண்மை புரியும்.சிலர் பெரிய தொகையை கடனாக பெற்று அதன் மூலம் தொழிலை விரிவு படுத்துவார்கள். தொழில் சிறப்பாக நடைபெறும்.தொழில் ரீதியான வருமானம் வந்து கொண்டே இருக்கும். ஆனால் பெரிய லாபம் எதுவும் தங்காது. கூட்டம் கூடும் கல்லா களை கட்டாது. அதிக பணப் புழக்கம் இருக்கும். கையில் பணம் தங்காது. சுய தொழில் செய்பவர்களுக்கு பொருளாதார நிலையில் அவ்வப்போது சிறு சிறு இடைஞ்சல்களை சந்தித்து கொண்டே இருப்பீர்கள். எனினும் ஆன்மிக சிந்தனை, இறை நம்பிக்கையால் எதிர்ப்புகளை சமாளித்து வெற்றியை நோக்கி செல்வீர்கள்.
10ம் பார்வை பலன்: சனியின் 10ம் பார்வை உங்களின் ராசிக்கு இருப்பதால் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு. சூழ்நிலைக்கு ஏற்ப உங்கள் செயல்பாட்டினை மாற்றி அகலக் கால் வைக்காமல் இருப்பதை வைத்து நிம்மதி அடைய முயற்சி செய்ய வேண்டும்.குழப்பமான மனநிலை நிலவும் என்பதால் சிலருக்கு மன நிம்மதிக்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறி வாழும் எண்ணம் தோன்றும். சிலருக்கு சனியின் ஆதிக்கத்தினால் உடல் மெலியும். சனியின் தானியமான எள்ளை சாப்பிட்டால் உடலில் சதைப்பிடிப்பு கூடும். உற்றார் உறவினர்களால் மதிப்பு, மரியாதை குறையும். நெருங்கிய உறவுகளின் கர்ம காரியங்களில் கலந்து கொள்வதில் தடை உண்டாகும். வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் பணியின் தன்மை, ஊதியம், பணி நியமன ஆணை, பணிக்கான ஒப்பந்தம் போன்றவற்றை சரி பார்த்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும்.
சனியின் அவிட்டம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 17.1.2023 முதல் 14.3.2023 வரை
ராசி அதிபதி மற்றும் எட்டாம் அதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் இயன்றவரை வம்பு வழக்குகளை தவிர்த்து சண்டை, சச்சரவுகளை விட்டு ஒதுங்க வேண்டும். அரசியலில் இருப்பவர்கள் கட்சி மாறும் எண்ணத்தை விட்டு முழு நேர அரசியல்வாதியாக தன்னை ஈடுபடுத்தி அதிக செலவு செய்து சமூக தொண்டாற்றி மக்கள் மனதில் இடம் பிடிக்க உழைக்க வேண்டும். வராமல் தடைபட்டு இருந்த ஊதியம் மொத்தமாக வந்து விடும். மெமோ வாங்கி வேலைக்கு செல்லாமல் இருந்தவர்களுக்கு வேலையில் சேர உத்தரவு வந்து விடும். வரா கடன் என்று முடிவு செய்த பணத்தின் சிறு பகுதி உங்களைத் தேடி வரும். பாலிசி முதிர்வு தொகை, பிள்ளை இல்லாதவர்கள் சொத்து, என எதிர்பாராத பணம் உங்களை மகிழ்விக்கும். மூத்த சகோதர வழி ஆதாயம் ஏற்படும்.
சதயம் நட்சத்திர சஞ்சார பலன்கள்.14.3.2023 முதல் 6.4.2024 வரை
கோட்சாரத்தில் அக்டோபர் 30, 2023 வரை 6ம் இடத்திலும் அதன் பிறகு 5ம் இடத்திற்கும் செல்லும் ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் புத்திர பிராப்தம் உண்டாகும்.குல, இஷ்ட தெய்வம் உங்கள் வீட்டில் குடியிருந்து அருளாசி வழங்கும். தடைபட்ட குலதெய்வ நிவர்த்திக் கடனை நிறைவேற்ற முடியும். தந்தையால் ஆதாயம் உண்டு. முன்னோர்களின் பூர்வீகச் சொத்துக்களில் இருந்த தொல்லைகள் படிப்படியாக குறையும். பிறர் ஆக்கிரமித்த சொத்துக்களை காவல் துறையினரின் உதவியால் மீட்டு விடுவீர்கள். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு சொத்தை பிரிப்பதில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சொத்துக்கள் உங்களுக்கு சாதமாக பிரிக்கப்படும்.
17.6.2023 முதல் 4.11.2023 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலங்களில் சிலருக்கு குடும்ப சூழல் காரணமாக வேலையை மாற்ற முடியாமல் தக்க வைத்துக் கொள்ள நேரும். பிள்ளைகளை உங்களின் நேரடி கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலதிகாரி, முதலாளிகள், சக ஊழியர்களால் ஏற்பட்ட தொந்தரவு அகலும். ரேஸ் சூதாட்டம் லாட்டரி போன்றவைகள் மீள முடியாத இழப்பில் கொண்டு நிறுத்தும்.
பூரட்டாதி நட்சத்திர சஞ்சார பலன்கள் 6.4.2024 முதல் 29.3.2025 வரை
ராசிக்கு 2,5ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கால, நேரத்தை வீணடிக்காமல் உழைப்பீர்கள். அதிர்ஷ்டம் உங்களை அரவணைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகி அனைத்து தேவைகளும் நிறைவேறும்.இது வரை ஒரு தொழில் செய்து கொண்டு இருப்பவர்கள் இன்னொரு தொழில் செய்யும். எண்ணம் வரும்.சில்லரை வணிபம் செய்தவர்கள் மொத்த வியாபாரம் செய்வார்கள். வேற்று மொழி பேசுபவர்களால் நன்மைகள் தேடி வரும். வாக்கு வாதத்தினால் பிரிந்த உறவுகள் கூடி மகிழ்வார்கள்.
30.6.2024 முதல் 15.11.2024 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலத்தில்நிலையற்ற வருமானமே இருக்கும்.சிலர் உண்ண , உறங்க நேரமில்லாமல் அலைய நேரும். தொழில் போட்டி அதிகமாகும். போட்டியை சமாளிக்க உலகத்தில் எத்தனை குறுக்கு வழி உண்டோ அத்தனையையும் பின்பற்றும் சூழல் ஏற்படும்.
குறுக்கு வழி சிந்தனையை அகற்றினால் நிலையான நிரந்தரமான முன்னேற்றம் கிடைக்கும். மூளையை மூலதனமாக்கி தொழில் செய்பவர்களுக்கு வெற்றி மேல் உண்டாகும். அரசின் வரிச் சுமைகாரணமாக குலத் தொழிலைச் செய்து வருபவர்கள் அதிலிருந்து விடுபட்டு வேறு தொழிலுக்கு செல்வார்கள். வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் குலத் தொழிலை செய்வதற்காக சொந்த ஊருக்கு திரும்புவார்கள். கலைத்துறையினர் பல முறை யோசித்து படத்தை தேர்வு செய்ய வேண்டும்.
திருமணம்: அர்தாஷ்டமச் சனியின் காலத்தில் அஷ்டமச் சனியினால் ஏற்படும் பாதிப்பில் அரைப்பங்கு நடக்கும் என்பதால் சுய ஜாதக தசா புத்திக்கு ஏற்ப திருமணத்தை நடத்துவது நல்லது. இந்த காலகட்டத்தில் முதல் திருமணத்தில் பாதிப்பை சந்தித்தவர்களுக்கு மறு திருமணம் நடக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
பெண்கள்: பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் தீரும் என்பதால் கவலையின்றி இருக்கவும்.பெண்கள் வேலை பார்க்கும் இடத்தை மாற்றலாம். குடும்பத்திற்கு பொன், பொருள் வாங்குவீர்கள். எதிர்காலம் குறித்த சிந்தனை அதிகரிக்கும்.கணவன் மனைவி ஒற்றுமை வலுப்பெறும். இதுவரை புரிந்து கொள்ளாத உங்களின் கணவர் உங்களை புரிந்து கொண்டு உங்கள் மனதிற்கேற்ற மணாளனாக மாறுவார்.
பரிகாரம்: கர்ம வினைப் படி ஒரு மனிதன் அனுபவிக்க இருக்கும் சுப / அசுப சம்பவங்களை கண கச்சிதமாக நிகழ்த்துபவர் சனி பகவான் என்பதால் தீர்க்க யோசிக்காமல் எடுத்த முடிவுகள் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும். ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.பராமரிப்பு இல்லாத கோவில்களுக்கு பரமார்ப்பு பணிக்கு உதவ வேண்டும். சிவன் கோவில்களுக்கு தீபம் ஏற்ற எண்ணெய் வாங்கி தர வேண்டும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
சனிப்பெயர்ச்சி பலன்கள்
ஜனவரி 24-ம் தேதி 2020 முதல் 2023 ஆண்டு வரை
ஏழரைச்சனி விலகியது, இனிய வாழ்க்கை மலர்கிறது!
விருச்சிக ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான், 26.12.2020 அன்று முன்னேற்றத்தைக் கொடுக்கும் மூன்றாமிடத்திற்கு செல்கின்றார். இப்பொழுது ஏழரைச்சனி விலகி விட்டது. எனவே இனி, தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். துணையாக இருக்கும் நண்பர்களும், உறவினர்களும் தோள்கொடுத்து உதவுவர். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. வெற்றிகள் ஸ்தானம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான சனிபகவான், இப்பொழுது வெற்றிகள் ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். உங்களின் நீண்டநாள் எண்ணங்கள் நிறைவேறும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு பகவான் சஞ்சரிக்கின்றார். குரு உங்கள் ராசிக்கு, தன -பஞ்சமாதிபதியாக விளங்குபவர். அவரோடு இப்பொழுது சனி பகவான் இணைந்து 'நீச்சபங்க ராஜயோக'த்தை உருவாக்குகின்றார். எனவே மனம்போல மங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். செல்வச் செழிப்போடு கூடிய வாழ்க்கை மலரப்போகிறது.
வாய்ப்புகள் வாசல் தேடி வரும்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகும் சனி, முன்னேற்றத்தின் முதல்படிக்கு செல்ல வைக்கப்போகிறார். இதுவரை ஏற்பட்ட தடைகளும், தாமதங்களும் அகலும். தனவரவு அதிகரிக்கும். வாழ்க்கைத் தேவை ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். எதிரிகள் விலகுவர். சகோதர ஒற்றுமை பலப்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புடன் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பதவி வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைத்து உயர் பதவிகளும், சம்பள உயர்வும் கிடைக்கும்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 5, 9, 12 ஆகிய மூன்று இடங்களில் பதிகின்றது. சகாய ஸ்தானத்தில் வீற்றிருந்து பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், பயண ஸ்தானம் ஆகியவற்றைச் சனி பார்க்கிறார். பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு என்ன என்னவெல்லாம் கிடைக்க வேண்டுமோ, அவை அனைத்தும் கிடைத்து நிறைவான வாழ்க்கை உருவாகப் போகின்றது. குறிப்பாக திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். துள்ளி விளையாடும் பிள்ளைச் செல்வம் கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். புதிய சொத்துக்களின் சேர்க்கையும், வீடுகட்டிக் குடியேறும் அமைப்பும் மனம்போல நடைபெறும்.
சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால், பெற்றோர் வழியில் பிரியம் கூடும்.
சனியின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால், சுப விரயம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் ஒரு பகுதியைக் கொடுத்துவிட்டுப் புதிய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, அற்புதமான பலன்கள் வந்து சேரும். உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதியாக சூரியன் விளங்குவதால் புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். அடுக்கடுக்காக ஒப்பந்தங்கள் வந்து அலைமோதும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள். அதுமட்டுமல்லாமல் புதிதாக வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, செய்யும் தொழில் சீராக இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரப் போட்டிகள் அகலும். வீடு மாற்றங்களும், உத்தியோக மாற்றங்களும் விரும்பிய வண்ணம் வந்து சேரும். நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வுகள் இப்பொழுது கிடைக்கும். குடும்பத்தை விட்டுப்பிரிந்து வேலைபார்த்து வந்தவர்கள், இனி ஒன்றுசேரும் வாய்ப்பு உண்டு. இக்காலத்தில் கும்ப ராசிக்கு சனி செல்கின்றார். அர்த்தாஷ்டமச் சனியாக சனி பகவான் வந்தாலும், கும்ப ராசி அவருக்கு சொந்த வீடு என்பதால் நன்மைகளையே வழங்குவார். சொல்லும் சொற்கள் எல்லாம் வெல்லும் சொற்களாக மாறும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி வருகின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் தொழில் வெற்றி நடைபோடும். வருமானம் திருப்தி தரும். மீனத்தில் குரு வரும்பொழுது, உங்கள் ராசியையே பார்க்கப் போகின்றார். எனவே ஆரோக்கியம் சீராகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, கொஞ்சம் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரிப்பு குறையும். கொடுத்த கடன்களால் பிரச்சினைகள் ஏற்படும்.
ராகு-கேது பெயர்ச்சிக்காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் புதியபாதை புலப்படும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வழக்கமான பணிகளில் ஏற்பட்ட சுணக்கம் அகலும். 12-ல் கேது சஞ்சரிப்பதால் ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாட்டில் இருக்கும் உறவினர் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். ஆன்மிகத்திற்கு என்று அதிக தொகையைச் செலவிடு வீர்கள். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
சதுர்த்தி விரதமிருந்து ஆனைமுகப் பெருமானை வழிபடுவதோடு, சஷ்டி அன்று முருகப்பெருமானையும் வழிபட்டு வாருங்கள். இல்லத்து பூஜை அறையில் வராகி படம் வைத்து, வராகி கவசம் பாடி வழிபட்டால் வசதி வாய்ப்புகள் பெருகும். வளர்ச்சியும் அதிகரிக்கும்.
ரூ.6000 நிவாரணம் - ரேசன் அட்டை இல்லாதவர்களா நீங்கள்?... உங்களுக்கான குட் நியூஸ்..
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அரங்கேறிய கொடுமை...
தீர்ப்பு குறித்து குலாம் நபி ஆசாத், உமர் அப்துல்லா சொல்வது என்ன?
திரிஷாதான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்- நீதிபதி சரமாரி கேள்வி
புதிய அவதாரம் எடுத்த சமந்தா.. சர்ப்ரைஸால் நெகிழ்ந்த ரசிகர்கள்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
