என் மலர்
விருச்சகம்
2025 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
சுக ஸ்தானத்திற்கு வருகிறார் ராகு தொட்டதெல்லாம் வெற்றியாகும்!
விருச்சிக ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த ராகுபகவான், 26.4.2025 அன்று 4-ம் இடமான சுக ஸ்தானத்திற்கு வருகிறார். குருப்பெயர்ச்சிக்கு பிறகு குருவின் பார்வை ராகு மீது பதிவதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். அதே நேரம் 10-ம் இடம் எனப்படும் தொழில் ஸ்தானத்திற்கு கேது பகவான் வரப்போகிறார். எனவே தொழில் முன்னேற்றம் உண்டு.
4-ம் இடத்தில் ராகு சஞ்சரித்த சில நாட்களில் குரு பகவான், மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அங்கிருந்து அவரது பார்வையை ராகு பகவான் மீது பதிக்கிறார். எனவே அர்த்தாஷ்டம ராகுவாக இருந்தாலும் அவரால் நற்பலன்கள் கிடைக்கும். புனித பயணங்கள் அதிகரிக்கும்.
புகழ் மிக்கவர்களின் பட்டியலில் உங்கள் பெயரும் இடம்பெறும். மாற்று மருத்துவத்தின் மூலம் உடல்நலம் சீராகும். பாதியில் நின்ற கட்டிடப்பணி மீதியும் தொடரும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். கொடுக்கல் -வாங்கல் வளர்ச்சி பெறும். தொழிலை விரிவு செய்ய எடுத்த முயற்சி கைகூடும். குடும்ப வருமானம் உயரும்.
10-ம் இடம் எனப்படும் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால், தொழில் முன்னேற்றம், கூடுதல் லாபம், தனித்து இயங்கும் ஆற்றல் ஏற்படும். கூட்டாளிகளை விலக்கிவிட்டு, தானே முன்னின்று தொழிலை நடத்த முன்வருவீர்கள். சொந்த கட்டிடத்திற்கு தொழிலை மாற்றுவீர்கள்.
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள், மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவர். வெளிநாட்டு முயற்சி கைகூடும். நல்ல சந்தர்ப்பங்கள் பலவும் நாடிவரும்.
குரு சாரத்தில் ராகு சஞ்சாரம் (26.4.2025 முதல் 31.10.2025 வரை)
பூரட்டாதி நட்சத்திரக் காலில் குரு சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிப்பது, பொன்னான நேரமாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தன - பஞ்சமாதிபதியான குருவின் காலில் ராகு பவனி வரும்பொழுது, தன வரவிற்கு குறைவு ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குணம்அறிந்து நடந்துகொள்வர். வருமானம் உயரும். வாழ்க்கை தேவை அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.
சூரிய சாரத்தில் கேது சஞ்சாரம் (26.4.2025 முதல் 27.6.2025 வரை)
உத்ரம் நட்சத்திரக் காலில் சூரிய சாரத்தில் கேது சஞ்சரிக்கும் போது, அரசு வழியில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். ஒரு சிலர் அதிகாரப் பதவிக்கு உயர்த்தப்படுவர். வங்கி கடனுதவி பெற்று தொழிலை விரிவு செய்து கொள்வீர்கள். பெற்றோரால் பெருமை சேரும்.
பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் சிறப்பாக முடிவடையும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். கடன் சுமை, மருத்துவச் செலவு குறையும். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் வந்த வண்ணம் இருக்கும்.
சுக்ர சாரத்தில் கேது சஞ்சாரம் (28.6.2025 முதல் 5.3.2026 வரை)
பூரம் நட்சத்திரக் காலில் சுக்ர சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, வாகன யோகம் உண்டு. ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தொழில் வெற்றி நடைபோடும். புதிய முதலீடுகள் செய்து வருமானத்தை பெருக்க முன்வருவீர்கள். பிள்ளைகளின் கல்யாண முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் நீங்கள் கேட்ட சலுகைகள் வழங்க மேலதிகாரிகள் முன்வருவர். வெளிநாட்டு வேலை அமையலாம். வீடு மாற்றம், விரும்பத்தக்கதாக அமையும்.
சனிப்பெயர்ச்சி காலம்
6.3.2026 அன்று சனி பகவான், மீன ராசிக்கு பெயர்ச்சியாகி செல்கிறார். அப்பொழுது உங்கள் ராசிக்கு 5-ம் இடத்திற்கு சனி வரும் பொழுது பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுகிறது. இப்பொழுது அர்த்தாஷ்டம சனி விலகிவிட்டது. கவலை மறைந்து, இன்பம் பெருகும்.
உற்சாகத்தோடு செயல்பட்டு உயர்ந்த நிலையை அடையப்போகிறீர்கள். தொழில் முன்னேற்றம், உத்தியோக முன்னேற்றம் ஏற்படும். நல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். படித்து முடித்த பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து மகிழ்வீர்கள்.
குருப்பெயர்ச்சி காலம்
ராகு- கேது பெயர்ச்சி காலத்தில் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. 11.5.2025 அன்று குரு பகவான், மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். அடுத்தடுத்த நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். குடும்பத்தில் மங்கல ஓசையும், மழலையின் ஓசையும் கேட்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
பொருளாதார நிலை உச்சம் பெறும். அக்டோபர் 8-ந் தேதி குரு பகவான், அதிசாரமாக கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அப்போது குருவின் பார்வை, உங்கள் ராசியில் பதிகிறது. இக்காலத்தில் கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு விருதுகள் கிடைக்கும். பயணங்களால் பலன் உண்டு.






