என் மலர்tooltip icon

    விருச்சகம்

    2026 தை மாத ராசிபலன்

    விருச்சிக ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் சகாய ஸ்தானத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரோடு லாபாதிபதி புதனும், தொழில் ஸ்தானாதிபதி சூரியனும் இணைந்திருக்கின்றனர். இதனால் செல்வ நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். முன்னேற்றத்தின் முதல்படிக்கு செல்ல கிரக நிலைகள் சாதகமாக விளங்குகின்றன. தொழில் வெற்றிநடை போடும். இதயம் மகிழும் செய்தி வந்துகொண்டே இருக்கும். தன ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். எல்லா வழிகளிலும் ஏற்றமும், நல்ல மாற்றமும் கிடைக்கும் நேரம் இது.

    வக்ர குரு

    மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதால், அந்த இடங்களெல்லாம் புனிதமடைந்து அற்புதமான பலன்களை அள்ளி வழங்கப்போகிறது. உங்கள் ராசியைப் பொறுத்தவரை தன - பஞ்சமாதிபதியானவர் குரு. 'அவர் வக்ரம் பெற்றிருக்கிறாரே' என்று நினைக்க வேண்டாம். அவரது பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் கணிசமான தொகை கைகளில் புரளும். மதிப்பு, மரியாதை உயரும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். இல்லத்தில் இனிய நிகழ்வுகள் நடைபெற வழிபிறக்கும். நல்லவர்களின் சந்திப்பால் நலம் காண்பீர்கள். சமுதாயப் பணிகளில் ஈடுபடுவோருக்கு விருதுகளும், பாராட்டுக்களும் கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், புதிய பதவிகளும் கிடைக்கும்.

    கும்ப - புதன்

    உங்கள் ராசிக்கும் 8, 11-க்கும் அதிபதியான புதன் 29.1.2026 அன்று அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது, துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். குடும்ப ஒற்றுமை பலப்படும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்க எடுத்த முயற்சி வெற்றிபெறும். 'புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வரவேண்டும்' என்ற எண்ணம் நிறைவேறும். 'புதிய வாகனம் வாங்க வேண்டும்' என்று நினைத்தவர்களுக்கு, அந்த வாய்ப்பு அமையும். நவீனமான வாகனத்தை வாங்கி மகிழ்வீர்கள். 'வெளிநாட்டில் பணிபுரிய வேண்டும்' என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு, நல்ல நிறுவனங்களில் இருந்து ஊதிய உயர்வுடன் கூடிய வேலை கிடைக்கும்.

    கும்ப - சுக்ரன்

    உங்கள் ராசிக்கு 7, 12-க்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 4-ம் இடத்தில் சஞ்சரிப்பது நல்ல நேரம்தான். வீடு கட்டிக் குடியேற வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இல்லத்திற்கு தேவையான அத்தியாவசிய மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கும் முயற்சியும் கைகூடும். பிள்ளைகளின் கல்யாணத்தை சிறப்பாகச் செய்து முடிக்கும் எண்ணம் நிறைவேறும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானம் வரும் வாய்ப்பும் உண்டு. வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு போதுமான வருமானம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 17, 18, 19, 22, 23, பிப்ரவரி: 1, 2, 6, 7, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    ×