என் மலர்tooltip icon

    விருச்சகம்

    2025 ஆடி மாத ராசிபலன்

    விருச்சிக ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். எனவே தொழில் ஸ்தானம் வலுவாகிறது. தொழில் வெற்றி நடைபோடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கேட்ட சலுகைகளை வழங்க உயர் அதிகாரிகள் முன்வருவர். சனியை குரு பார்ப்பதால் மகிழ்ச்சி தரும் வாய்ப்புகளை அதிகம் பெறுவீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். கொடுக்கல் - வாங்கலில் கூடுதல் லாபம் கிடைக்கும். இடம், பூமியால் லாபம் உண்டு. திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள்.

    மிதுன - சுக்ரன்

    ஆடி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 12-க்கு அதிபதியான அவர், 8-ல் சஞ்சரிக்கும் பொழுது 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் கோரிக்கைகள், உயர் அதிகாரிகளால் பரிசீலிக்கப்படும். வீடு கட்டுவது, கட்டிய வீட்டை பராமரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டு. பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்கி பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி தீட்டிய திட்டங்கள் நிறைவேறும்.

    கன்னி - செவ்வாய்

    ஆடி 13-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். எனவே உங்கள் ராசிக்கு 11-ம் இடம் வலுவடைகிறது. உங்கள் ராசிக்கு அதிபதியான செவ்வாய், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் லாபம் இருமடங்காக உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். கொடுக்கல்- வாங்கல் ஒழுங்காகும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அலுவலகப் பணிகளை துரிதமாக முடித்து பாராட்டும், புகழும் பெறுவீர்கள். அதன் விளைவாக உயர் அதிகாரிகள் உங்களுக்கு சம்பள உயர்வு தர முன்வருவார்கள். உடன்பிறப்பு மூலம் சில நல்ல காரியங்கள் நடைபெறும். அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு, மக்கள் செல்வாக்கு மேலோங்கும். எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து வரும் தகவல் ஆதாயம் தருவதாக இருக்கும்.

    கடக - புதன்

    ஆடி 18-ந் தேதி, கடக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பாக்கிய ஸ்தானத்தில் உள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குவதால், புதிய திருப்பங்கள் ஏற்படும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு மேலிடத்து ஆதரவு உண்டு. புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்று வதில் அக்கறை காட்டுவீர்கள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு வெற்றி தரும். கூட்டுத்தொழில் புரிவோர், அதில் இருந்து விடுபட்டு தனித்து இயங்க வேண்டுமென்ற எண்ணத்தை செயல்படுத்தும் நேரம் இது. மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் வந்துசேரும். வீடு கட்டும் யோகம் அல்லது வீடு வாங்கும் யோகம் உண்டு.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நினைத்தது நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தலைமை பதவிகள் தானாக வரலாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு, கல்வியில் நல்ல மதிப்பெண் வரும். பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும்.வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூலை: 17, 25, 26, 29, 30, 31, ஆகஸ்டு: 6, 7, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    ×