என் மலர்tooltip icon

    விருச்சகம்

    2025 மாசி மாத ராசிபலன்

    தன்னம்பிக்கையும், தெய்வ நம்பிக்கையும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் போது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் வக்ர நிவர்த்தியாகி பலம்பெறுவதால் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தொகை வரவும் அதிகரிக்கும். உடல்நலம் சீராகி உற்சாகத்துடன் பணி புரிவீர்கள். மருத்துவச் செலவு குறையும். மனநிம்மதி கிடைக்கும்.

    சென்ற மாதத்தில் உங்கள் மனதில் நினைத்த காரியங்கள் இம்மாதம் படிப்படியாக நடைபெறத் தொடங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் மாதம் இது. 6-க்கு அதிபதியான செவ்வாய், 8-ல் சஞ்சரிப்பதால் எண்ணற்ற மாற்றங்கள் இல்லம் தேடி வரப்போகிறது.

    சூரியன் - சனி சேர்க்கை

    இந்த மாதம் முழுவதும் கும்ப ராசியில் சூரியன் - சனி சேர்க்கை ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதியான சூரியன், லாபாதிபதி புதனோடும், சுக ஸ்தானாதிபதி சனியோடும் இணைந்து சஞ்சரிப்பதால் தொழில் வளம் மிகச்சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்,

    `விருப்ப ஓய்வு பெற்று வெளியில் வந்து சுய தொழில் தொடங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். ஊதிய உயர்வும், உத்தியோக உயர்வும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். கலைத் துறையைச் சார்ந்தவர்களுக்கு விருதுகளும், வெற்றி வாய்ப்புகளும் வந்துசேரும். பிறர் வியக்கும் அளவிற்கு வீடு கட்டிக் குடியேறும் யோகம் உண்டு.

    செவ்வாய் வக்ர நிவர்த்தி

    மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மாசி 9-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிநாதன் செவ்வாய் பலம்பெறுவதால், இதுவரை ஏற்பட்ட தடைகள் யாவும் விலகும். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். துணிந்து சில முடிவுகளை எடுத்து, அருகில் உள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் திறமைக்குரிய அங்கீகாரம் கொடுப்பர்.

    ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு அது கைகூடும். புதிய வாகனம் வாங்க வேண்டுமென்ற ஆசை நிறைவேறும். படித்து முடித்த பிள்ளைகளுக்கு வெளிநாடு சென்று, பட்ட மேற்படிப்பைத் தொடர நினைத்தாலும் அது கைகூடும். பரிவர்த்தனை யோக காலத்தில் கல்யாணம், மணிவிழா, கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்வுகள் நடைபெறும் வாய்ப்பு உண்டு.

    மீன - புதன் சஞ்சாரம்

    மாசி 14-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதி யானவர், புதன். அவர் நீச்சம் பெறுவது நன்மைதான். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் வந்துசேரும். தொடர்கதையாய் வந்த கடன் சுமை குறையும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.

    கடைதிறப்பு விழா, கட்டிடத் திறப்பு விழா போன்றவை நடைபெறும் நேரம் இது. பிரபலஸ்தர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

    உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவி உண்டு. கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ- மாணவிகளுக்கு மதிப்பெண்ணும், மதிப்பும் உயரும். பெண்களுக்கு நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி:- 15, 16, 23, 24, 25, 29, 30, மார்ச்: 10, 11.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

    ×