என் மலர்

  தனுசு - சுபகிருது வருட பலன்

  தனுசு

  சுபகிருது வருட பலன் - 2022

  வில்லை போல் வளைந்து கொடுக்கும் தன்மை மிகுந்த தனுசு ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டில் அனைத்து விதமான பாக்கியங்களும் கிடைக்க நல் வாழ்த்துக்கள்.

  உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் ராகுவும், 11ம் இடத்தில் கேதுவும் நிற்கிறார்கள். குருபகவான் 4ம் இடத்திலும், சனி பகவான் 2, 3ம் இடங்களிலும் சஞ்சரிக்கிறார்கள். 5ம்மிட ராகுவால் மன முதிர்ச்சியுடன் விவேகமாக நடந்துகொள்வீர்கள். மனம் பற்றற்ற நிலையை விரும்பும். உங்களின் அனுசரணையான அணுகுமுறை எல்லாரின் நன்மதிப்பைப் பெற்றுத் தரும்.

  பொதுக் காரியங்களில் ஈடுபடுபவர்களின் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, கவுரவம் உயரும். உங்கள் இன, மத இயக்கங்களில் முதன்மைப் பதவியும், கௌரவமும் தேடிவரும். 11ம்மிட கேதுவால் சிலருக்கு கலப்பு திருமணம் நடக்கும். சிலரின் மறுமண முயற்சி கைகூடும். வாழ்க்கை துணையால் செலவுகள் அதிகமாகும். சிலருக்க எதிர் பாலினத்தினரால் மனச்சுமை அதிகரிக்கும். 4ம்மிட குருபகவானால் ஆடம்பர பொருட்கள் வாங்குவதிலும், சேர்ப்பதிலும் ஆர்வம் அதிகரிக்கும். வீடு கட்டும் எண்ணமும் நிலபுலன் வாங்கும் எண்ணமும் பலிதமாகும். தாய் வழிச் சொத்தில் நிலவிய குழப்பங்கள் தாய் மாமன் ஆதரவால் தீரும். இரண்டாமிட சனி பகவானால் வேலைப் பளுவினால் நேரத்திற்கு சாப்பிட முடியாது. திட்டங்கள் பலிதமாகாமல் நினைப்பது ஒன்று- நடப்பது வேறு மாக ஏமாற்றத்தை சந்தித்த நிலை மாறும்.

  குடும்பம்:லாபகரமான நேர்மறையான பலன்கள் அடுக்கடுக்கான அதிர்ஷ்டங்கள் உண்டாகும். சமுதாயத்தில், உற்றார், உறவினர்களிடம் நல்ல வரவேற்பு, உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவுகள் நண்பர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள்.குலதெய்வம், பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வம் மிகும். அரசுவழி ஆதாயம் மிகும். குழந்தை பாக்கியம் தொடர்பான உங்களின் எண்ணம் ஈடேறும்.தாயின் நல்லாசியும் ஆஸ்தியும் கிடைக்கும். இதுவரை பாராமுகம் காட்டிய உங்களின் மூத்த சகோதரர் உங்கள் வீட்டின் சுப நிகழ்விற்கு முன் வந்து நின்று உங்களை கவுரவிக்கலாம். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம், ஆரோக்கியம் மனநிறைவு தரும். வெளிநாட்டுப் படிப்பு அல்லது வேலைக்கு முயற்ச்சிப்பவர்களுக்கு வாய்ப்பு கிட்டும்.

  ஆரோக்கியம்: ஆயுள்,ஆரோக்கியம் சிறப்படையும். உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை பெறுபவர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாகஎன்னவென்றே தெரியாத நோய் தாக்கம் இருப்பவர்களுக்கு எந்த வைத்தியம் செய்தால் நோய் பூரணமாக குணமாகும் என்ற புரிதல் ஏற்படும். நீண்ட நாள் நோய்க்கு அல்லது பரம்பரை நோய்க்கு சிகிச்சை செய்பவர்களுக்கு சிகிச்சை நல்ல பலன் தரும்.

  திருமணம்:குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் சனி நின்று 7ம் பார்வையாக 8ம் இடமான மாங்கல்ய ஸ்தானத்தைப் பார்ப்பதால் கோட்சார ரீதியாக திருமணம் தடைபட்டது. குரு மீனத்திற்கு பெயர்ச்சி ஆகுவதால் 8ம் இடத்திற்கு குருப் பார்வை கிடைக்கும். திருமணத் தடை அகலும்.

  பெண்கள்: தங்க நகைகள், சொத்துக்களை அடமானம் வைத்து பிழைப்பு நடத்திய நிலை முற்றிலும் மாறும். நீண்ட காலமாக தடைபட்ட காரியங்கள் ஒவ்வொன்றாக நடக்கும். தாய் வழி உறவுகளால் அதிக நன்மையும், ஆதாயமும் உண்டாகும். மகளிர் சுய உதவிக் குழு, மாதர் சங்கம் போன்ற முக்கியமான அமைப்புகளில் உயர் பதவிகள் கிடைக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.

  மாணவர்கள்:பொழுதுபோக்கில் நாட்டத்தைக் குறைத்து கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 5ல் ராகு இருப்பதால் கெட்ட சகவாசங்களை தவிர்க்க வேண்டும். தகவல் தொடர்பு சாதனங்களை முக்கியத் தேவைக்கு மட்டும் பயன்படுத்தவும்.

  உத்தியோகஸ்தர்கள்:உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட கணக்கமற்ற சூழல் மாறும். 5ல் ராகு இருப்பதால் அரசு அதிகாரிகள் லஞ்ச விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு வேலையை மாற்றலாம். சிலர் ஒப்பந்த வேலைக்காக குறுகிய காலம் பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். சிலர் அதிக சம்பளத்திற்குஆசைப்பட்டு பார்க்கும் வேலையை நழுவ விடுவார்கள்.புதிய வேலைக்கான பணி நியமன உத்தரவை வாங்கிய பிறகே பழைய வேலையை விட வேண்டும்.

  முதலீட்டாளர்கள்:வியாபாரிகள், முதலீட்டாளர்களுக்கு இது மிகச் சிறப்பான நன்மைகள் நடைபெறும் நல்ல நேரம். சிறுதொழில், சில்லறை வணிகர்கள் மொத்த வியாபாரிகளாக தொழிலை உயர்த்துவீர்கள். சமூக அந்தஸ்து, பொருளாதார நிலை, தொழில் முன்னேற்றம் போன்ற அனைத்தும் மனதிற்கு முழு நிறைவு அளிக்கும். நல்ல நம்பிக்கையான வேலையாட்கள் கிடைப்பார்கள். வேலையாட்களால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். மந்தமான தொழில் சூடு பிடிக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு தேவையான கடன் தொகை தாய்மாமன் மூலம் கிடைக்கும்.

  அரசியல்வாதிகள்:5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப் பெறுவதால் தனுசு ராசி அரசியல் பிரமுகர்கள் வைத்ததுதான் சட்டம். உங்களைச் சுற்றி எப்பொழுது தொண்டர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதால் மக்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுவீர்கள்.

  கலைஞர்கள்:திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் உயரிய பதவி கிடைக்கும். சின்னத்திரை, பெரிய திரை, நாடக துறையினர் மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் என அனைத்துப் பிரிவினருக்கும் இது பொற்காலம் என்றால் அது மிகைப்படுத்தலாகாது.

  விவசாயிகள்:வேளாண் பணிகளில் ஆத்மார்த்தமாக ஈடுபடுவீர்கள் பச்சைபசேல் என்று விளைந்த வயல்களைப் பார்த்து பூரிப்படை வீர்கள். செவ்வாய் உங்களின் 5 ம் அதிபதி என்பதால் மண்ணை நம்பி உழைத்த உழைப்பிற்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும். பூ உற்பத்தியாளர்களுக்கு விளைச்சலும், விற்பனையும் அமோகமாக இருக்கும்.

  கவனமாக செயல்பட வேண்டிய காலம்.

  ராகு/கேது: 21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் 5-11ம் இடத்தில் ராகு/கேதுக்கள் சஞ்சரிப்பதால் குறுக்கு சிந்தனைய பயன்படுத்தி சம்பாதிக்க வைத்து குறுகிய காலத்தில் அதிகமாக சம்பாதிக்க வைப்பார். பணத்தின் சுவையை அனுபவிக்கும்முன்பு அதை பிடுங்குவார். அல்லது சட்டச் சிக்கலில் மாட்ட வைப்பார். ஒரு சிலருக்கு தீடீர் பக்தியை கொடுப்பார். பக்திக்கு பின் பெரிய பதவி ஆசையைபுகுத்துவார். பதவியை கொடுப்பார். பதவி எப்பொழுது பறிபோகுமோ என்ற பயத்துடன் பதவியில் பல தவறுகளை செய்து பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவார்.

  இது போன்ற பின்விளைவுகள் மிகுதியாக இருக்கும்.குரு: 29.7.2022 முதல் 23.11.2022 வரை ராசிக்கு 2ல் சஞ்சரிக்கும் கோட்சார சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் உங்களுக்கு ஏற்படும் நல்லது கெட்டது இரண்டிற்கும் நீங்களே காரணமாக இருப்பீர்கள். நீங்கள் பிறரின் நலத்திற்காகசெய்த செயல் கூட உங்களை பதம் பார்க்கும். மந்தத் தன்மை, தயக்கம்இருக்கும். சோம்பல், மறதி உருவாகும். உழைக்காமல் உண்ணும் எண்ணம், தேவையற்ற கோபம் வரும். சிலர் கடன் பெற்று வீடு, வாகன யோகம் கிடைக்கப் பெறுவர். சிலருக்கு வீடு, வாகன வகையில் ரிப்பேர் செலவு கையை கடிக்கும்.

  பரிகாரம்:வியாழக்கிழமை கோவில் யானைக்குகரும்பு, பழங்கள் இயன்ற உணவு தானம் வழங்க மகத்தான வாழ்வு உண்டு.

  வாழ்க்கைத் தரம் உயரும்

  ஐந்தாமிட ராகு மிகுதியான பொருளாசையைக் கொடுப்பார்.அதிர்ஷ்டத்தின்மீது நம்பிக்கை வைத்து வருமானத்தை அதிகரிக்கும் எண்ணம் தோன்றும். பொன், பொருள் கிடைக்கும். வராக்கடன்கள் வசூலாகும். போட்டி, பந்தயங்களில் அதிர்ஷ்ட பணம் கிடைக்கலாம். பலகாலமாக விற்காமல் கிடந்த சொத்து விற்பனையில் பெரிய பணம் கிடைக்கலாம். முதலீடு இல்லாத கமிஷன் அடிப்படையிலான தொழில் புரிபவர்கள், ஆன்லைன் வர்த்தகர்களுக்கு நல்ல வருமானம் உண்டாகும். பேச்சை மூலதனமாக கொண்ட ஆசிரியர்கள், விற்பனை பிரதிநிதிகள், ஜோதிடர்கள், வக்கீல்கள் போன்றவர்களுக்கு தொழிலால் வருமானம் பெருகும். வாழ்க்கைத் தரம் உயரும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×