என் மலர்tooltip icon

    தனுசு

    சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026

    கருணை உள்ளம் கொண்ட தனுசு ராசியினரே

    தனுசு ராசிக்கு 2,3ம் அதிபதியான சனி பகவான் தற்போது கோட்ச்சாரத்தில் ராசிக்கு நான்காமிடமான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனது மூன்றாம் பார்வையால் ஆறாம் இடமான ருண ரோக , சத்ரு ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தையும் பத்தாம் பார்வையால் ராசியையும் பார்ப்பார்.

    உங்களின் ராசி அதிபதி குருவும் சனியும் நட்பு கிரகங்கள் என்பதால் பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவு .முன் யோசனையுடன் முறையான திட்டமிடுதல் உங்களை சரியான பாதையில் அழைத்துச் செல்லும். அஷ்டம சனியின் காலத்தில் நடக்கும் கெடுதலில் பாதியை அர்த்தாஷ்டம காலத்தில் கொடுப்பார் என்பதால் அஷ்டம சனி காலத்தில் ஏற்படும் துன்பத்திற்கு இணையான பாதிப்புகள் வரலாம். எனினும் ஜன கால தசா புக்தி சாதகமாக இருந்தால் சொத்து சுகம் போன்ற நல்ல பலன்களை தந்து விடும்.

    புண்ணிய பலன்கள் நடக்கும்.மன வலிமை அதிகரிக்கும். இந்த வருடம் திருமணத்திற்கு நாள் குறிக்கலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். சிலர் வீட்டு கிரக பிரவேசத்திற்கு தயாராகுவார்கள். தனியார், அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, சிறப்பு சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு சமூகத் தொண்டு செய்யும் ஆர்வம் உண்டாகும்.சிலர் ஆன்மீகத்தை பயன்படுத்தி பொருள் சம்பாதிக்க முயலலாம். வெளிநாட்டில் வேலை பார்த்த சிலர் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் விருப்பத்திற்காக வேலையை விட்டு தாயகம் திரும்புவார்கள். பலவீன மனத்தினர் மாந்தரீகம், அருள் வாக்கு கூறும் இடம் என அலைந்து மன நிம்மதிக்கான மார்க்கத்தை தேடுவார்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும். குல தெய்வ அருள் கிடைக்கும். பேச்சில் நிதானமும் பொறுமையும் அவசியம். எதையும் பல முறை சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.தாய் வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். தாய் வழி நெருங்கிய உறவினரால் உங்களுக்கு மிகப் பெரிய தொழில் உதவி கிடைக்கும்.வெகு நாளாக தீராத தாய் வழி சொத்து பிரச்சனை சுமூக பேச்சுவார்த்தையில் முடியும். சொத்து சேர்க்கை அதிகமாகும்.சேமிப்பு உயரும் . வங்கிக் கடனுக்கு முயற்சி செய்தால் கடன் கிடைக்கும்.

    தேவைக்கு அதிகமாக வாங்கும் கடன் நிம்மதி குறைவை தரும் என்பதால் இயன்றவரை கடன் வாங்குவதை தவிர்க்கவும்.சேமிப்பு முதிர்வு தொகை இன்சூரன்ஸ் பாலிசி முதிர்வு பணம் கிடைக்கும்.மன சஞ்சலம் மிகும். முறையான திட்டமிடல் மன சஞ்சலத்தை குறைக்கும். ஆரோக்கிய குறைபாடு அதிகரிக்கும்.அலைச்சலும் மந்த தன்மையும் இருக்கும். லாட்டரி, ரேஸ், பங்குச் சந்தையில் எதிர்பாராத திடீர் மாற்றம் உங்களை நிலை தடுமாற வைக்கும். திருப்பு முனையான சம்பவங்கள் நடக்கும். தொழில் முயற்சிகள் பலிதமாகும். வருமானத் தடை அகன்று நிலையான முன்னேற்றம் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியம் முன்னேற்றமடையும். ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வேலை மாற்றம் செய்வதை தவிர்ப்பது நல்லது.குடும்ப முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்து மகிழ்வீர்கள்.சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள்.

    பெண்கள் புதிய தங்க நகைகள் வாங்கி அணிவார்கள். பெண்களுக்கு மண வாழ்க்கை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். குடும்பத்தில் ஏதாவது செலவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். மேற்படிப்பிற்கான முயற்சி கை கூடும். பெண்களுக்கு தாய்வழி ஆதரவும், சீதனமும் கிடைக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு தியாக மனப்பான்மை மிகுதியாகும். உற்றார் உறவினரிடம் பகையை வளர்க்க கூடாது. சில குழந்தைகள் மாற்றாந்தாயிடம் வளரும் நிலை ஏற்படலாம். குழந்தைகளின் போக்கில் மந்த தன்மை ஏற்படும்.நரம்பு தொடர்பான சிறு பாதிப்பு இருக்கும். பிரயாண அலைச்சல் மிகும். சிலர் நண்பர்கள், உறவினர் களின் விசயத்தில் மாட்டி உங்கள் பெயருக்கு நீங்களே களங்கம் ஏற்படுத்துவீர்கள். யாருக்கும் ஜாமீன், கியாரண்டி போடக் கூடாது.சட்ட சிக்கலில் மாட்ட நேரும். தேவையில்லாத வீண் விவகாரகங்களில் தலையிடுவதும், அடுத்தவர்களுக்கு பரிந்து பேசியும் நீங்களே விரோதத்தை விலை கொடுத்து வாங்கும் வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை. வாகனங்களை இயக்கும் போது அதிக கவனம் தேவை. சனி, செவ்வாய் தசை நடப்பவர்கள் கண்டிப்பாக உரிய பாதுகாப்பு கவசம் இல்லாமல் வாகனத்தை இயக்க கூடாது.

    சனியின் 3ம் பார்வை பலன்கள்

    சனியின் 3ம் பார்வை 6ம்மிடமான ருண , ரோக சத்ரு ஸ்தானத்திற்கு இருப்பதால் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கால், இடுப்பு வலி எலும்பு தொடர்பான பிரச்சனை , நரம்பு மண்டலம் தொடர்பான நோய் வரும் வாய்ப்பு இருக்கும்.வயது முதிர்ந்தவர்களுக்கு மூட்டு கை கால் வலி ஏற்படும்.ஏதாவது நோய் தாக்கம் ஏற்பட்டால் தக்க மருத்துவரை உடனே அணுக வேண்டும். பணவரவில் மிகப் பெரிய வீழ்ச்சியோ, முன்னேற்றமோ ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆறாம் இடத்திற்கு சனி பார்வை இருப்பதால் பலர் கடன் கொடுக்க முன்வருவார்கள். குடும்ப செலவு, மருத்துவ செலவு என்று செலவை சமாளித்தே மனம் விரக்தி அடையும். சிக்னம், சேமிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் பெற நேரும். . பெரிய தொகையை கடனாக பெற்று அதன் மூலம் தொழிலை விரிவு படுத்துவீர்கள்.தொழில் சிறப்பாக நடைபெறும். தொழில் ரீதியான வருமானம் வந்து கொண்டே இருக்கும். ஆனால் பெரிய லாபம் எதுவும் தங்காது. கூட்டம் கூடும் கல்லா கலை கட்டாது. அதிக பணப் புழக்கம் இருக்கும். கையில் பணம் தங்காது.பக்கத்து வீட்டுக்காரர்கள், தெருவாசிகளுடன் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும். நட்பு பாராட்டும் மனம் இல்லாவிட்டாலும் பகையை வளர்க்காமல் இருந்தாலே போதும்.

    சனியின் 7ம் பார்வை பலன்கள்

    சனி பகவான் தன்னுடைய 7ம் பார்வையால் 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழில் போட்டிகளை சமாளிக்க அதிக சிரமங்களை சந்திக்க நேரும். இது வரை எதிரி, போட்டி என்றால் என்னவென்றே தெரியாது இருந்த உங்களுக்கு நண்பர்களே உங்களுடைய எதிரி என்ற உண்மை புரியும். சுய தொழிலில் பொருளாதார நிலையில் அவ்வப்போது சிறு சிறு இடைஞ்சல்களை சந்தித்து கொண்டே இருப்பீர்கள். எனினும் ஆன்மிக சிந்தனை, இறை நம்பிக்கையால் எதிர்ப்புகளை சமாளித்து வெற்றியை நோக்கி செல்வீர்கள்.கூப்பிட்ட குரலுக்கு ஒடி வந்த விசுவாசமான வேலையாட்கள் ஒதுங்குவார்கள். வேலைக்கு முயற்சி செய்பவர்கள் குடும்ப சூழல் காரணமாக படித்த படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத வேலைக்கு செல்வார்கள். வேலை பார்க்கும் இடத்தில் உங்களின் உயர் அதிகாரிகள் பணிச்சுமையை அதிகரித்து தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவார்கள். அரசு, தனியார் ஊழியர்கள் வசதி குறைவான ஊருக்கு மாற்றம் செய்யப்படுவீர்கள். வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் பணியின் தன்மை, ஊதியம், பணி நியமன ஆணை, பணிக் கான ஒப்பந்தம் போன்றவற்றை சரி பார்த்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு தடைபடும்.ஒரு சிலருக்கு அடிப்படை வசதி கூட இல்லாத சிறிய ஊருக்கு இடமாற்றம் கிடைக்கும்.தொழில் , வேலை தொடர்பான மன சஞ்சலம் உங்களை வாட்டும். விவசாயிகள் அதிக கவனத்துடன் பணிகளில் ஈடுபட வேண்டும். விளைச்சல் அதிகம் இல்லாவிட்டாலும் நஷ்டம் ஏற்படாமல் காப்பாற்ற முடியும்.

    சனியின் 10ம் பார்வை பலன்கள்

    சனியின் 10ம் பார்வை உங்களின் ராசிக்கு இருப்பதால் எடுத்த காரியத்தில் வெற்றி கண்டு பழக்கப்பட்ட உங்களுக்கு எடுத்த செயல்கள் சவ்வாக இழுத்துக் கொண்டே போகும்.குழப்பமான மனநிலை நிலவும். அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைத்து அசிங்கப் படாமல் பேச்சை குறைத்து இறை வழிபாட்டில் நாட்டம் செலுத்த வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப உங்கள் செயல்பாட்டினை மாற்றி அகலக் கால் வைக்காமல் இருப்பதை வைத்து நிம்மதி அடைய முயற்சி செய்ய வேண்டும். உற்றார் உறவினர்களால் மதிப்பு, மரியாதை குறையும். மன வெறுப்பால் பூர்வீகத்தை விட்டு வெளியேறி வாழும் எண்ணம் தோன்றும்.தீய பழக்கங்களை மனம் நாடும். சனியின் ஆதிக்கத்தினால் உடல் மெலியும். சனியின் தானியமான எள்ளை சாப்பிட்டால் உடலில் சதைப்பிடிப்பு கூடும். கடினமாக உழைத்து வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும். சனியால் பெரிய முன்னேற்றம் இருக்காது. தொழிற்சாலைகள், சுய தொழில் நடத்துபவர்கள் தங்கள் பணியாளர்களின் செயலில் மாறுபாடு கண்டு மன வேதனை ஏற்படும்.

    எவ்வளவு செய்தாலும் தொழிலாளர்களிடையே அதிருப்தி நிலவும் என்பதால் முன்பை விட முழு கவனத்துடன் அனைத்து பணிகளிலும் ஈடுபட வேண்டும். புதிய தொழில் முயற்சிகள் முதலில் சோதனையை கொடுத்து பின் வெற்றியை தரும். தொழிலுக்கு அரசு , அரசுஅதிகாரிகளின் தொல்லை இருந்து கொண்டே இருக்கும். இந்த சனிப்பெயர்ச்சியால் நன்மைகள் அதிகமாக நடக்கும். குடும்பத்திலுள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும் . உங்களின் கௌரவம் அந்தஸ்து உயரும். உங்கள் கணவர் நீங்கள் மனதில் நினைப்பதையும் நினைக்காததையும் நடத்துவார். மாமியார் மாமனாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள் .பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும் உங்கள் அந்தஸ்து கௌரவம் உயரும் வேலைக்கு செல்லும் இடத்தில் மதிப்புடன் நடத்த படுவீர்கள்.

    உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.தாயின் உடலில் சிறு சிறு பிரச்சனைகள் இருந்து வரும். ராசியை சனி பார்ப்பது புனர் பூ தோஷமாகும். கழுத்தில் தாலி ஏறும் வரை திருமணத்திற்கு உத்தரவு கிடையாது. பத்திரிக்கை அடித்து மண்டபம் வரை சென்ற பிறகு கூட சில திருமணங்கள் தடைப்பட வாய்ப்புகள் உள்ளது.திருமணம் நிச்சயமானவர்கள் 10வது கிரகமான செல்போனில் பேசி தேவையற்ற விவகாரங்களை வளர்க்க கூடாது. சரணாகதி அடைந்த இறைவழிபாட்டால் நினைத்ததை அடைய முடியும்.

    பரிகாரம்

    வடைமாலை சாற்றி ஆஞ்சநேயரை வழிபட இனம் புரியாத அனைத்து பிரச்சனைகளிடம் இருந்து விடுபடுவீர்கள். சனிக் கிழமைகளில் சிவபெருமானுக்கு, பால் அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×