என் மலர்tooltip icon

    தனுசு

    2025 சித்திரை மாத ராசிபலன்

    எதையும் திட்டமிட்டு செயலாற்றி வெற்றி காணும் தனுசு ராசி நேயர்களே!

    விசுவாவசு வருட புத்தாண்டின் சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு 6-ம் இடத்தில் பரிவர்த்தனை யோகம் பெற்று சஞ்சரிக்கிறார். உச்சம் பெற்ற சுக்ரனோடு புதன் இணைந்திருக்கிறார்.

    'புத சுக்ர யோகம்', பரிவர்த்தனை யோகம் போன்றவை அமைந்து இம்மாதம் பிறப்பதால் நினைத்தது நடக்கும். நிதி பற்றாக்குறை அகலும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். ஆதாயம் தரும் தகவல்கள் அதிகம் கிடைக்கும்.

    குரு - சுக்ர பரிவர்த்தனை

    சித்திரை 1-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை, குரு - சுக்ர பரிவர்த்தனை இருக்கிறது. உங்கள் ராசிநாதன் குரு பகவான். 6-ம் இடத்திற்கு அதிபதியானவர் சுக்ரன். இந்த இரண்டு கிரகங்களின் பரிவர்த்தனை அவ்வளவு நல்லதல்ல. நீங்கள் எவ்வளவு தான் உழைத்தாலும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காது.

    திடீர் திடீரென வரும் மாற்றங்கள் மனக்கலக்கத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் உள்ள கூட்டாளிகள் விலகுவதாக சொல்லி அச்சுறுத்துவர். புதிய வழக்குகள் வந்த வண்ணமாகவே இருக்கும். எதிரிகளின் பலம் கூடும் இந்த நேரத்தில், எதைச் செய்தாலும் யோசித்து செய்வது நல்லது.

    கும்ப - ராகு, சிம்ம - கேது

    சித்திரை 13-ந் தேதி கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்கும் ராகுவால் முன்னேற்றப் பாதையில் சில இடையூறுகள் வரலாம். இருப்பினும் தைரியமும், தன்னம்பிக்கையும் மிக்க நீங்கள், அதை முறியடித்து வெற்றி காண்பீர்கள். உத்தியோக மாற்றம் உறுதியாகி மனக்குழப்பத்தை அகற்றும். அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும்.

    பூர்வீக சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் இருந்த தகராறுகள் அகலும். தொழில் மாற்ற சிந்தனைகளும் அதிகரிக்கும். பழைய வாகனங்களை கொடுத்து விட்டு, புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். பொருளாதாரத்தில் இருந்த தேக்க நிலை மாறும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது, சகல பாக்கியங்களையும் வழங்க சர்ப்ப பரிகாரங்களை செய்வது நல்லது.

    மேஷ - புதன் சஞ்சாரம்

    சித்திரை 17-ந் தேதி மேஷ ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் புதன். அவர் 9-ம் இடத்திற்கு அதிபதியான சூரியனுடன் சேரும் பொழுது 'புத ஆதித்ய யோகம்' உருவாகிறது. பெற்றோர் வழி ஆதரவு திருப்தி தரும். பிரபலஸ்தர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து சில நல்ல காரியங்களை முடித்து கொடுப்பர். பிள்ளைகளின் கல்யாண முயற்சி கைகூடும். மணவிழா மட்டுமின்றி பெற்றோரின் மணிவிழா, கிரகப் பிரவேசம் போன்றவை நடைபெறும் சூழ்நிலை உருவாகும்.

    மிதுன - குரு சஞ்சாரம்

    சித்திரை 28-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு செல்கிறார். அப்பொழுது குருவின் பார்வை முழுமையாக உங்கள் ராசியில் பதிகிறது. எனவே எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். சகோதர ஒற்றுமை பலப்படும். லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். ஆரோக்கியம் சீராகி உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு நட்பால் நன்மை கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு நினைவாற்றல் பளிச்சிடும். பெண்களுக்கு அருகில் இருப்பவர்களின் ஆதரவு திருப்தி தரும். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஏப்ரல்: 14, 15, 22, 23, 25, 26, மே: 6, 7, 12, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    ×