என் மலர்
மீனம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்
மீனம்
சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2023
ஏழரைச் சனி ஆரம்பம்
குருவின் ஆசி பெற்ற மீன ராசி அன்பர்களே இதுவரை உங்கள் ராசிக்கு 11ல் நின்ற சனி பகவான் 12 ம் இடமான அயன, சயன விரய ஸ்தானத்திற்கு சென்று ஆட்சி பலம் பெறப் போகிறார். தன் 3ம் பார்வையால் 2ம் மிடமான தன ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தையும் 10ம் பார்வையால் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தையும் பார்வை செய்ய இருக்கிறார்.
விரயச் சனியின் பலன்கள்: தற்போது கும்பத்திற்குச் செல்லும் சனி பகவான் கும்பம், மீனம், மேஷத்தை கடக்கும் வரை உங்களுக்கு ஏழரை சனி உள்ளது. பள்ளிப் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு, மிகுந்த வைத்திய செலவு படிப்பில் ஆர்வமின்மை இருக்கும் . மத்திம வயதினருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, தொழில் முன்னேற்றம் வீடு வாகன யோகம்போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். வயோதிகராக இருந்தால் தோற்றப் பொழிவு குறைந்து உடல் பலவீனம் , கை, கால் வலி இருக்கும்.சோர்வும், தளர்ச்சியும் மிகுதியாக இருக்கும்.
12ம்மிடம் என்பது விரயம், பிரிவினை, அயன சயனம், முதலீடு செய்தல் கால்கள் போன்ற காரகத் துவங்களை குறிக்கும். அதிக முதலீட்டில் தொழில் செய்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். புதிய தொழில் முதலீடு, புதிய தொழில் ஒப்பந்தம் செய்பவர்கள் நம்பிக்கையான வாடிக்கையாளர்களை பயன்படுத்தினால் முதலீட்டை காப்பாற்றலாம். இந்த சனிப்பெயர்ச்சியில் மீன ராசியினர் பெரும்பான்மையாக அனுபவிக்கப் போகும் பிரச்சனை விரயம். கடுமையான விரயமாக இருக்கும்.
வருமானத்திற்கு மீறிய செலவு ஏற்படும். அத்தியாவசிய தேவைக்கு கடன் பெற்றே ஆக வேண்டிய சூழல் உருவாகலாம். நாளைய வருமானத்திற்குரிய செலவு இன்றே முடிவு செய்யப்படும். எனவே விரயத்தை வீடு, வாகனம், நகை போன்ற சொத்தாக ஏற்படுத்திக் கொள்ளலாம். பலர் பிழைப்பிற்காக வெளியூர் , வெளி மாநிலம் அல்லது வெளிநாடு செல்ல நேரும். பலருக்கு இந்த வாய்ப்பு திருப்பு முனையாகவும் இருக்கும். சிலர் மனதில் தேவையற்ற எண்ணங்களை அசை போட்டு தூக்கமே இல்லாமல் இருக்க செய்யும். சிலர் துக்கம் தாளாமல் திருவண்ணாமலைக்கு சென்று முக்திக்கு முயல்வார்கள். சனி நின்ற பார்வை பெற்ற இடங்கள் சுமாரான பலன்களை வழங்கினாலும் சனி பயணிக்கும் நட்சத்திரங்கள் மூலம் சாதகமான பலன்கள் உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
3ம் பார்வை பலன்: சனி பகவான் தனது 3 ம் பார்வையில் 2ம்மிடமான தன ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதர வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வு மிகுதியாக இருக்கும். வாக்கு ஸ்தானத்திற்கு சனி பார்வை என்பதால் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். பேச்சை குறைக்க வேண்டும். வாக்கில் நிதானம் தேவை. நீங்கள் எதார்த்தமாக பேசும் வார்த்தைகள் கூட சொல் அம்பாக மாறும். முன் யோசனை இல்லாத அவசரத்தனமான பேச்சு மற்றவர்களுக்கு மன வருத்தத்தை தரும் விதமாக இருக்கும். பொறுமையாக நிதானமாக இருக்க வேண்டிய காலம் . பங்காளிகளால் ஏற்பட்ட பாகப் பிரிவினை வருத்தங்கள் நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த அளவு பங்கு கிடைக்காவிட்டாலும் சுமூகமாக நல்ல முறையில் சொத்து கிடைக்கும். இதுவரை குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கிய மீன ராசி பெண்களுக்கு ஆண் வாரிசு கிடைக்கும்.
7ம் பார்வை பலன்: சனியின் 7ம் பார்வை ராசிக்கு 6ம் இடத்திற்கு இருப்பதால் உங்களின் நண்பன் யார்? நண்பராக நடித்து ஏமாற்றுபவர் யார்? என இனம் காணமுடியும். உற்றார் உறவினர்களிடம் இணக்கமற்ற சூழல் ஏற்படும். வயதானவர்கள் உரிய மருத்துவ பரிசோதனை செய்து ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சுகர், பிபி போன்ற நீண்ட நாள் மருத்து சாப்பிடும் நோயின் அறிகுறி தென்படும்.
பழைய கடனை அடைக்க புதுக்கடன் வாங்க நேரும். அல்லது தொழில் விரிவாக்கம், வீடு கட்டும் பணி, குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற தேவைக்கும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஏழரை சனியின் காலம் என்பதால் மீட்டர் வட்டி, கந்து வட்டி வாங்கி வீண் ஆபத்தை வரவழைக்காமல் உண்மையான தேவைக்கு அரசு வங்கிகளின் உதவியை நாட வேண்டும். கடன் வாங்கும் முன் பத்திரத்தில் கையெழுத்திடும் முன் பல முறை வாசித்து,யோசித்து கையெழுத்து போடவும். பண ஏமாற்றம், இழப்பு ஏற்படும் காலம் என்பதால் சாட்சி கையெழுத்து, ஜாமீன் கையெழுத்து, கேரண்டி கையெழுத்து போடுவது போன்ற எதையும் செய்யாமல் இருப்பது நல்லது.
10ம் பார்வை பலன்: சனியின் 10ம் பார்வை ராசிக்கு 9ம் இடத்திற்கு இருப்பதால் தந்தை வழி முன்னோர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு அதிகரிக்கும். பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகள் மன வருத்தத்தை தரும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத அலைக்கழித்த சட்டம் தொடர்பான பிரச்சனைகள் தொடர்கதையாக இருக்கும். ஆராய்ச்சி உயர் கல்வி படிப்பவர்கள் மேற்படிப்பை தொடரலாம். சிலருக்கு வெளிநாடு சென்று ஆராய்ச்சி படிப்பை தொடர வாய்ப்பு ஏற்படும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மருத்துவச் செலவில் சீராகும். குல தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். ஒரு சிலருக்கு ஜோதிடம், மாந்தரீகம் கற்க ஆர்வம் மிகும். தியானம் பழகி மனதை கட்டுப்படுத்த முயல்வீர்கள். மூட நம்பிக்கையில் குறி கேட்பது, மந்திர தந்திர தாயத்து வாங்குவது உங்களை வீண் வம்பில் மாட்டிவிடும் என்பதால் விழிப்புடன் இருக்க வேண்டும்.
சனியின் அவிட்டம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 17.1.2023 முதல் 14.3.2023 வரை
மீன ராசிக்கு 2 , 9ம் அதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் விரும்பிய கல்லூரியில் உயர் கல்வி வாய்ப்புகள் கிடைக்கும். வங்கிப் பணியாளர்கள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனம் நடத்துபவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.நீங்கள் எந்த துறையில் பணி புரிகிறீர்களோ அந்த துறையில் சாதனை செய்து புகழ் அடைவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தந்தை மகன் உறவு சிறக்கும். தந்தை வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு குறையும். பித்ருக்கள் தொடர்பான வழிபாட்டின் மூலம் காரிய சித்தி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை பிரிப்பதில் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால் இப்பொழுது சரியாகிவிடும்.பொதுக் காரியங்களில் ஈடுபட்டு உங்களின் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். சிலருக்கு வெளி நாட்டு குடியுரிமை கிடைக்கும்.
சதயம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 14.3.2023 முதல் 6.4.2024 வரை
கோட்சாரத்தில் அக்டோபர்30,2023 வரை 2ம் இடத்திலும் அதன் பிறகு ராசியிலும் சஞ்சரிக்கும் ராகுவின் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் மன நிறைவும், நிம்மதியும் உண்டாகும். குடும்ப உறவுகளின் ஆசைகளை, தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிரில் பார்த்தாலும் பார்க்காமல் விலகிச் சென்ற சகோதரர் போனில் நலம் விசாரிப்பார். வருமானம் இல்லாமல் கொடுக்கல் வாங்கல், வரவு செலவில் நாணயத்தை காப்பாற்ற முடியாமல் சங்கடத்தை அனுபவித்தவர்கள் சரளமான பொருள் வரவால்தொழில், வாழ்க்கை இரண்டிலும் திருப்தியான பலனை அடைய முடியும். பொருளாதார நெருக்கடி குறையும். சிலர் தொழில் துறையில் புதிய முதலீடு செய்வீர்கள். நடக்குமா? நடக்காதா என கேள்விக்குறியாக இருந்த அனைத்து நிகழ்வுகளும் மனதிற்கு இனிய முறையில் திருப்பு முனையாக மாறும்.
17.6.2023 முதல் 4.11.2023 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலங்களில் எதிர்கால திட்டங்களும் கனவுகளும் வெற்றி பெறும். விரயமும், துயரமுமான நிலை மாறும். கொள்கை, கோட்பாடுடன் செயல்படுவீர்கள். தொழிலில் வெற்றியும், முன்னேற்றமும், லாபமும் உண்டாகும். சொத்துக்களை மீட்க தேவையான நிதி உதவி கிடைக்கும். தவறுதலாக வாங்கிய வில்லங்க சொத்தில் இருந்த சிக்கல்கள் தீரும்.சிலர் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். அல்லது தொழில், தொழில் உத்தியோகக்திற்காக பிறந்த ஊரை விட்டு பிரிந்து வெளியூர், வெளிநாடு போகலாம்.
பூரட்டாதி நட்சத்திர சஞ்சார பலன்கள் 6.4.2024 முதல் 29.3.2025 வரை
மீன ராசிக்கு ராசி அதிபதி மற்றும் பத்தாம் அதிபதியின் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் எண்ணங்களும் திட்டங்களும் வெற்றியடையும். உங்களை உதாசீனம் செய்தவர்கள் நயந்து பேசுவார்கள். உங்களின் முக்கியத்துவம் மற்றும் அவசியம் பற்றி உணருவார்கள். வேலையின்மையால் பிறரின் வெறுப்பிற்கு ஆளாகியவர்களுக்கு கவுரமான வேலை கிடைக்கும். சிலருக்கு மைத்துனருடன் இணைந்து புதிய தொழில் தொடங்கும் ஆர்வம் உண்டாகும். சிலருக்கு புதிய தொழில் ஆரம்பிக்க மனைவி மூலம் பொருள் உதவி கிடைக்கும். சிலர் வயது மூப்பு மற்றும் சோர்வால் வாரிசுகளிடம் தொழில் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுக்க விரும்பலாம்.
30.6.2024 முதல் 15.11.2024 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலத்தில்வேலை பார்த்த இடத்தில் ஏற்பட்ட வீண் பழிகள் அகலும். உங்களை தவறாக வழி நடத்திய கெட்ட நண்பர்கள் விட்டு விலகுவார்கள். ஆரோக்கிய குறைபாடுகள் சீராகும். உழைக்கும் எண்ணம் அதிகரிக்கும். கோட்ச்சாரம் உங்களுக்கு சாதகமாக இல்லாத காரணத்தால் எந்த விசயத்திற்கும் கோர்ட், கேஸ், போலீஸ் ஸ்டேசன் செல்லாமல் பேசி சமரசமாக பிரச்சனையை முடிப்பது புத்திசாலித்தனம்.
திருமணம்: திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடும். இது வரை ஏதாவது காரணம் கூறி திருமணத்தை தள்ளியவர்கள் கூட திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்கள். மனதிற்கு பிடித்த மண வாழ்க்கை அமையும். அக்டோபர் 30, 2023ல் ராசியல் ராகுவும், 7ல் கேதுவும் சஞ்சரிப்பார்கள் . அதனால் சிலருக்கு விருப்ப விவாகமும் ஏற்படும்.
பெண்கள்: பெண்களுக்கு இது மகிழ்ச்சியான காலம். உங்களிடம் விரோதமாக இருந்தவர்கள் கூட அன்பாக பேசுவார்கள். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த அனைத்து சிக்கலும் தீரும். விரும்பிய நகை, ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவர்.
பரிகாரம்: முறையான திட்டமிடுதலும் , நேர்மையும் ,இறைநம்பிக்கையும் இருந்தால் எத்தகைய கிரகப் பெயர்ச்சியாலும் உங்களை அசைக்க முடியாது. எனவே நம்பிக்கை மிக முக்கியம். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரவும்.குழந்தைகள் காப்பகம் முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யவும். சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
சனிப்பெயர்ச்சி பலன்கள்
ஜனவரி 24-ம் தேதி 2020 முதல் 2023 ஆண்டு வரை
பதினோராமிடத்தில் சனி! பண வரவுதான் இனி!
மீன ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சனி. அவர் லாப ஸ்தானத்தில் தனது சொந்த வீடான மகரத்தில் சஞ்சரிக்கும் பொழுது, தொழில் வளம் மிகச் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் வந்து குதூகலத்தை வழங்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். சுபகாரியங்கள் மளமளவென்று நடைபெறும். பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும்.
மகர ராசியில், உங்கள் ராசிநாதன் குரு பகவான் நீச்சம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். அவரோடு இப்பொழுது சனி பகவானும் இணைந்து 'நீச்சபங்க ராஜயோக'த்தை உருவாக்குகிறார்கள். 10-க்கு அதிபதி குரு 11-ல் சஞ்சரிப்பதால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கேட்ட இடத்தில் உதவிகளும் கிடைக்கும். அரசியல் சார்ந்த பிரமுகர்களால் ஆதாயம் உண்டு.
லாப ஸ்தானச் சனியின் ஆதிக்கம்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கப் போகின்றார். அந்த இடம் லாப ஸ்தானம் என்று சொல்லப்படுவதால் இதுவரை எவ்வளவு முயற்சி செய்தும் முடிவடையாத தொழில் தொடர்புகள், இப்பொழுது முடிவடைந்து பெருந்தொகை கையில் புரளும். புதிய ஒப்பந்தங்கள் வந்து கொண்டே இருக்கும்.
சனியின் பார்வைப் பலன்கள்
உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், உங்கள் ராசியையும், 5, 8 ஆகிய இடங்களையும் பார்க்கப் போகின்றார். உடல் நலம், குடும்பம், புகழ், ஆரோக்கியம், பூர்வ புண்ணியம், பிள்ளைகள், பூர்வீகச் சொத்துக்கள், ஆயுள் விருத்தி, ஆரோக்கியம் போன்றவற்றை எல்லாம் அறிந்து கொள்ளும் விதத்தில் சனியின் பார்வை பதிவதால், அதற்கேற்ற பலன்கள் உங்களுக்கு வந்துசேரும். குறிப்பாக சனி ராசியைப் பார்ப்பதால் ஆரோக்கியத் தொல்லை வரத்தான் செய்யும். உங்களுக்கோ, உங்களைச் சார்ந்த குடும்பத்தினருக்கோ உடல்நலப் பாதிப்பும், மருத்துவச் செலவும் உண்டு. செல்வாக்கு அதிகரிக்கும்.
சனியின் பார்வை 5-ல் பதிவதால் பிள்ளைகள் வழியில் நல்ல தகவல் வந்து சேரும். பிள்ளைகளின் மேற்படிப்பை முன்னிட்டு நீங்கள் செய்த ஏற்பாடுகள் பலன் தரும். படித்து முடித்த பிள்ளைகள் வேலை வாய்ப்பிற்காகச் செய்த முயற்சியும் கைகூடும். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகளில் மட்டுமல்லாமல் பெற்றோர்களின் முத்துவிழா, பவளவிழா போன்ற விழாக்கள் மற்றும் புதுமனை புகுவிழாக்கள் நடத்தும் யோகம் உண்டு. 'பூர்வீக இடம் கையை விட்டுப் போய்விட்டதே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, புது இடம் சொந்த ஊரிலேயே வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. சனியின் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிவதால் இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் கைகூடிவரும்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை:சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, எதிரிகளின் தொல்லை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். திட்டமிட்ட காரியத்தை திடீர் திடீரென மாற்றுவீர்கள். உங்கள் ராசிக்கு 6-க்கு அதிபதியாக சூரியன் விளங்குவதால் அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகளில் தாமதம் ஏற்படும். ஆதரவுக்கரம் நீட்டுவதாகச் சொன்னவர்கள் விலகிக்கொள்வர். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலை ஒரு சிலருக்கு ஏற்படும். நீங்கள் என்ன செய்தாலும் குடும்பப் பெரியவர்கள் நன்றி காட்ட மாட்டார்கள். உத்தியோகத்தில் சகப் பணியாளர்களால் தொல்லை உண்டு.
28.12.2021 முதல் 26.1.2023 வரை:சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, திட்டமிட்ட பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். திடீர் முன்னேற்றம் வந்து சேரும். கல்யாணச் சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். வர்த்தகம் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிந்து மகிழ்ச்சி காண்பீர்கள். 'வெளிநாட்டிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா?' என்று சிந்திப்பீர்கள்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை:செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, வாழ்க்கைப் பாதையில் நல்ல மாற்றங்கள் வரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் லாபம் உண்டு. வீண் கவலைகள் அகலும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். உறவினர்களின்் மனவருத்தங்கள் மாறும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் நட்பால் அனைத்து வழிகளிலும் நன்மை கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், 'விருப்ப ஓய்வில் வெளிவந்து தொழிலைத் தொடங்கலாமா?' என்று யோசிப்பர். இக்காலத்தில் சனியும் கும்பத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். எனவே வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பதில் இருந்த தடைகள் அகலும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் விரய ஸ்தானத்தில் இருப்பதால் விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்களும், இட மாற்றங்களும் உருவாகும். தொழிலில் கவனம் தேவை. குடும்பச் சுமை கூடும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, ராசிநாதன் ராசியிலேயே சஞ்சரிப்பதால் நல்ல பலன்கள் இல்லம் தேடி வரும். எதிரிகள் விலகுவர்.
மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, குடும்ப ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் வாங்கல்கள் திருப்தி தரும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடு உன்னத நிகழ்வு இல்லத்தில் நடைபெறும். உத்தியோகத்தில் உயர் பதவி உண்டு.
ராகு- கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகின்றனர். மேஷ ராகுவின் ஆதிக்க காலத்தில் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். பற்றாக்குறை மாறும். விலகிச்சென்ற சொந்தங்கள் மீண்டும் வந்திணைவர். அஷ்டமத்தில் கேது இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். விரயங்கள் கூடும்.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியத்தில் அடிக்கடி தொல்லைகள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் கூடலாம். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி செய்ய இயலாது.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து தட்சிணாமூர்த்தியை வழிபடுவதோடு, இல்லத்து பூஜை அறையில் வள்ளி-தெய்வானை உடனாய முருகன் படம் வைத்து முருகப்பெருமானுக்குரிய பதிகங்களை பாடி வழிபடுவதன் மூலம் முன்னேற்றத்தின் முதல்படிக்குச் செல்லலாம்.