என் மலர்
மீனம்
2025 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
ராகு வரும் இடம் விரயம்! வாங்கிய சொத்துக்களோ கிரயம்!
மீன ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசியிலேயே சஞ்சரித்து வந்த ராகு பகவான், 26.4.2025 அன்று உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அதே நேரத்தில் 6-ம் இடத்திற்கு கேது வரப்போகிறார். சுமார் 1 ½ ஆண்டு காலம் அதே இடத்தில் ராகுவும்
கேதுவும் சஞ்சரித்து பாத சாரங்களில் பவனி வருவதற்கேற்ப பலன்களை வழங்குவார்கள். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு ராகு வருவதால் வீண் விரயங்கள் அதிகரிக்கும் என்பது பொதுவான நியதி. ஏழரைச் சனி நடைபெறு வதால், வீண் விரயங்களில் இருந்து விடுபட சுப விரயங்களை மேற்கொள்வது நல்லது.
அடிக்கடி பயணங்கள் ஏற்படும். உத்தியோக மாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம் நிகழும். கடன் சுமை அதிகரிக்கலாம். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.
6-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் உத்தியோகம், தொழிலில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. உடல்நலனில் பிரச்சினை அதிகரிக்கும். மூடிக் கிடந்த தொழில் நிலையத்தை திறப்பு விழா நடத்தி பார்க்க, எடுத்த முயற்சிகளில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு தோன்றும். எதிலும் அவசரமாக முடிவெடுக்க வேண்டாம். அலுவலக பணியில் ஆர்வம் இருந்தாலும் அதிகாரிகளின் கெடுபிடியால் மன வருத்தம் ஏற்படும்.
குரு சாரத்தில் ராகு சஞ்சாரம் (26.4.2025 முதல் 31.10.2025 வரை)
பூரட்டாதி நட்சத்திரக் காலில் குருவின் சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். எதிர்பார்த்த பணவரவு கைக்கு வந்து சேரும். குடும்ப முன்னேற்றம் கூடும். தொழிலில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி வெற்றி காண்பீர்கள்.
கூட்டுத்தொழிலில் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகள் உங்கள் கருத்துகளுக்கு செவி சாய்ப்பர். அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு, அது கிடைக்கப்பெறும். ஒரு சிலர் உத்தியோகத்தில் இருந்து ஓய்வுபெற்று, சுய தொழில் தொடங்க முன்வருவர்.
சூரிய சாரத்தில் கேது சஞ்சாரம் (26.4.2025 முதல் 27.6.2025 வரை)
உத்ரம் நட்சத்திரக் காலில் சூரிய சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். தடை, தாமதம் வந்துசேரும். ஆரோக்கிய தொல்லை அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. அதிக பணிச் சுமையால் கோபம் அதிகரிக்கும்.
எதிர்மறை சிந்தனை தோன்றும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரியின் கெடுபிடி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர், அக்கம் பக்கத்தினரால் பிரச்சினை வரலாம். கடன் சுமை அதிகரிக்கும்.
சுக்ர சாரத்தில் கேது சஞ்சாரம் (28.6.2025 முதல் 5.3.2026 வரை)
பூரம் நட்சத்திரக் காலில் சுக்ர சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, விரயங்களை சந்திக்க நேரிடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. முன்னேற்றப் பாதையில் முட்டுகட்டை ஏற்படும். அதிக கடன் சுமையால், விரக்தி மேலோங்கும். ஒரு சில வேலைகளை உடனடியாக செய்யாமல் தள்ளி வைப்பீர்கள்.
தொழில் மந்தமாக நடைபெறும். வரவைக் காட்டிலும் செலவு கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. வீடு மாற்றம் முதல் நாடு மாற்றம் வரை, என்ன செய்யலாம் என்று யோசிப்பீர்கள்.
சனிப்பெயர்ச்சி காலம்
6.3.2026 அன்று சனி பகவான், மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். உங்களுக்கு ஜென்ம சனியின் ஆதிக்கம் நடைபெற உள்ளது. எனவே மனக் கவலை, இனத்தார் பகை அதிகரிக்கும். எதிரிகளின் தொல்லை உண்டு. கனத்த இதயத்தோடு காட்சி அளிப்பீர்கள். விரயங்கள் கூடும்.
உடல் ஆரோக்கிய சீர் கேடுகள் அதிகரிக்கும். ரண சிகிச்சைகளும், ஓய்வு எடுக்கும் சூழ்நிலைகளும் கூட, ஒரு சிலருக்கு உருவாகும். பணிபுரியும் இடத்தில் பிரச்சினை அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களால் உபத்திரவங்கள் கூடும். மனக் குழப்பம் அதிகரிக்கும்.
குருப்பெயர்ச்சி காலம்
ராகு - கேது பெயர்ச்சி காலத்தில் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. 11.5.2025 அன்று குரு பகவான், மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 4-ம் இடத்தில் அர்த்தாஷ்டம குருவாக இருப்பதால், ஆரோக்கிய தொல்லை அதிகரிக்கும். குடும்பச் சுமை கூடும். பெற்றோரின் உடல்நலனில் கவனம் தேவை. உடன்பிறப்புகளால் அமைதி குறையும். பணிபுரியும் இடத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.
அக்டோபர் 8-ந் தேதி குரு பகவான், அதிசாரமாக கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அப்போது குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. உச்சம் பெற்ற குருவின் பார்வையால் உன்னத நிலை வரும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். வரன்கள் முடிவாகும்.






