என் மலர்
மீனம்
2025 ஆனி மாத ராசிபலன்
எளிதில் பழகும் குணம்பெற்ற மீன ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு அர்த்தாஷ்டம குருவாக சஞ்சரிக்கிறார். ஏழரை சனியின் ஆதிக்கமும் நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். வீடு மாற்றங்கள், உத்தியோக மாற்றங்கள் வருவதற்கான அறிகுறிகள் தென்படும். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்வது உங்கள் புத்திசாலிதனமாகும். பணக் கவலை அதிகரிக்கும். குல தெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்.
கடக - புதன்
ஆனி மாதம் 8-ந் தேதி கடக ராசிக்கு புதன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் என்பதால் பஞ்சம ஸ்தானத்தில் அவர் சஞ்சரிக்கும் பொழுது பிள்ளைகளால் சில பிரச்சினைகள் வரலாம். சுபகாரிய பேச்சுக்கள் திடீரென முடிவாகலாம். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் வேலைப் பளு கூடும். இருந்தாலும் அதை ஏற்று சிறப்பாக செயல்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். ஒரு சிலருக்கு அயல் நாட்டிலிருந்து அழைப்புகள் வரலாம். பெற்றோர்களின் ஆதரவு திருப்தி தரும். தொழிலை விரிவுசெய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ரிஷப - சுக்ரன்
ஆனி 15-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். மேலும் உங்கள் ராசிநாதன் குருவிற்கு பகை கிரகமானவர் சுக்ரன் என்பதால் உடன்பிறப்புகள் வழியே ஒருசில பிரச்சினைகள் வந்து அலைமோதும். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும். புதியவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைத்தால் அது நடைபெறாமல் மனக் கலக்கத்தை உருவாக்கும். அதே சமயம் அஷ்டமாதிபதியாகவும் சுக்ரன் விளங்குவதால் இடமாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றங்கள் வரலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது.
செவ்வாய் - சனி பார்வை
மாதம் முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனியை சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் பார்க்கின்றார். அதே நேரத்தில் குருவின் பார்வை சனி மீது பதிகிறது. எனவே சுபச்செலவுகளை ஏற்படுத்திக் கொண்டால் வீண் செலவுகள் குறையும். இல்லத்திற்கு தேவையான மின்சாதனப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கலாம். வீட்டு பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்து இணையலாம். தொழிலை இடமாற்றம் செய்யும் வாய்ப்பு உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு தடைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் மாற்றம் மனக் கலக்கத்தை ஏற்படுத்தும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவிகளுக்கு அதிக முயற்சியின் பேரில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். என்றாலும் விரயங்களும், வீடு மாற்றங்களும் உண்டு.
இம்மாதம் லட்சுமி நரசிம்மர் வழிபாடு நன்மையை வழங்கும்.






