என் மலர்tooltip icon

    மீனம்

    2025 ஆடி மாத ராசிபலன்

    மீன ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு 4-ம் இடத்தில் அர்த்தாஷ்டம குருவாக சஞ்சரிக்கிறார். எனவே ஆரோக்கியத்தில் கவனமும், தொழிலில் விழிப்புணர்ச்சியும் தேவை. ஏழரைச் சனியின் ஆதிக்கத்தில் விரயச் சனி நடைபெறுவதால், வரவைக் காட்டிலும் செலவு கூடும். 'இரவும், பகலும் உழைத்தும் எதுவும் மிஞ்சவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் சகப் பணியாளர்களின் ஆதரவு குறையும். சனி எத்தனையாவது சுற்று என்பதைப் பொறுத்தே, எதையும் நிர்ணயிக்க முடியும்.

    மிதுன - சுக்ரன்

    ஆடி 10-ந் தேதி மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும்போது துணிவும், தன்னம்பிக்கையும் குறையும். சகோதர வழி சச்சரவுகள் மீண்டும் தலைதூக்கும். ஒரு சிலருக்கு வாங்கிய இடத்தை விற்க வேண்டிய சூழல் உண்டு. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அடுத்தவர்களுக்காக பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதன் மூலம் வீண் விரயங்களில் இருந்து விடுபட இயலும். தொழில் நிலையத்தில் பணியாளர்களை மாற்றுவது பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள், உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்வதால், பணிச்சுமை அதிகரிக்கும்.

    கன்னி - செவ்வாய்

    ஆடி 13-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும் பொழுது திடீர் வரவு உண்டு. தெய்வ திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்துக்கள் வாங்குவது, விற்பது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான மாற்றங்களை செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, இடையூறு செய்தவர்கள் தானாக விலகிச் செல்வர். பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டு சீர்வரிசை பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பிள்ளைகளாக இருந்தால் இப்பொழுது வேலை கிடைக்கும். அதுமட்டுமல்ல வாழ்க்கை துணைக்கும் வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வந்துசேரும்.

    கடக - புதன்

    ஆடி 18-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு வரும் பொழுது, குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். கல்யாண பேச்சுவார்த்தைகள் முடிவாகி, இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் சூழல் பிறக்கும். 'பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக்களை வாங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளை பெறுவீர்கள். வாடகை கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். வாங்கிய கடனில் ஒரு பகுதியை கொடுத்து மகிழ்வீர்கள். பணியாளர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். பிறருக்காக வாங்கிக் கொடுத்த தொகை, இப்பொழுது உங்கள் கரங்களுக்கு வந்துசேரும். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு மேலிடத்து ஆதரவு உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு கேட்ட பொறுப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு தொடர் கதையாய் வந்த கடன் சுமை குறையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் வெற்றி உண்டு. பெண்களுக்கு சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெறும். செலவுக்கேற்ற வரவு உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூலை: 18, 19, 23, 24, ஆகஸ்டு: 2, 3, 4, 5, 16.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.

    ×