என் மலர்tooltip icon

    மீனம் - தமிழ் மாத ஜோதிடம்

    மீனம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    18.9.22 முதல் 17.10.22 வரை

    உணர்வுகளை மதிக்கும் உன்னதமான குணம்பெற்ற மீன ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். வக்ரச் சனியின் பார்வையும், உங்கள் ராசியில் பதிகிறது. எனவே தடை, தாமதம் அதிகரிக்கும்.

    கன்னி - சுக்ரன் சஞ்சாரம்

    புரட்டாசி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், நீச்சம் பெறுவது ஒருவழிக்கு நன்மைதான். உங்கள் ராசிநாதன் குருவிற்கு பகை கிரகமானவர் சுக்ரன். எனவே எதிர்பாராத சில காரியங்கள் துரிதமாக நடைபெறும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள்.

    கன்னி - புதன் சஞ்சாரம்

    புரட்டாசி 16-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் உச்சம் பெறுவதால், இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். வெளிநாட்டுப் பயணத்தில் இருந்த தடை அகலும். ஒரு சிலருக்கு வீடு மாற்றங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும்.

    மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

    புரட்டாசி 22-ந் தேதி, மிதுன ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், 4-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பத்தில் நல்ல சம்பவங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். தந்தை வழி உறவில் இருந்த விரிசல் மாறும்.

    மிதுனத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பார்ப்பதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இடம், பூமி விற்பனையால் சில பிரச்சினைகள் ஏற்படும். உடன்பிறப்புகளைச் சார்ந்து இருப்பவர்கள் அவர்கள் மனதைப் புரிந்து கொண்டு நடப்பது நல்லது. குடும்பத்தில் முடிந்துபோன பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கலாம்.

    சனி வக்ர நிவர்த்தி

    புரட்டாசி 23-ந் தேதி, சனி வக்ர நிவர்த்தியாகிறார். இதனால் உங்கள் ராசிக்கு லாபாதிபதியும், விரயாதிபதியுமான சனி பலம் பெறுகிறார். எனவே லாபம் திருப்திகரமாக இருந்தாலும், விரயங்கள் பலமடங்கு உயரும். வெளிநாட்டில் உள்ளவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமலும், இங்கிருப்பவர்கள் வெளிநாடு செல்ல முடியாமலும் பிரச்சினைகள் உருவாகும். நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. நீண்ட நாளாக இருந்த உடல்நலப் பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். இளைய சகோதரத்தோடு இருந்த உறவில் விரிசல் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் அதிக வேலைப்பளு உண்டு.

    இம்மாதம் தட்சிணாமூர்த்தி வழிபாடு திருப்தியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 18, 19, 30, அக்டோபர்: 1, 2, 5, 6, 11, 12.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் உங்கள் ராசிநாதனான குருவும், லாப ஸ்தானத்தில் உள்ள சனியும் வக்ரம் பெற்றுள்ளனர். எனவே எதையும் யோசித்துச் செய்வது நல்லது. திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். பணநெருக்கடி அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு கூடும். என்றாலும் அதற்கேற்ற விதத்தில் சம்பளமும் கிடைக்கும்.

    மீனம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    17.8.2022 முதல் 17.9.2022 வரை

    சுறுசுறுப்பாகச் செயல்பட்டு சொல்லை செயலாக்கிக் காட்டும் மீன ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு வக்ர இயக்கத்தில் இருப்பதால் ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

    சிம்ம - சூரியன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அதிபதியான சூரியன், மாதம் முழுவதும் 6-ம் இடத்திலேயே சஞ்சரிக்கிறார். எனவே மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். மனக்கவலை ஏற்படும். ஆரோக்கியத் தொல்லையால் அவதிப்படுவீர்கள். ஒருகடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழல் உருவாகும். பணிபுரியும் இடத்தில் பக்குவமாக நடந்துகொள்ளுங்கள்.

    கன்னி - புதன் சஞ்சாரம்

    ஆவணி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 7-க்கு அதிபதி உச்சம் பெறுவது யோகம்தான். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடிவரும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.

    வக்ர புதன் சஞ்சாரம்

    ஆவணி 12-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் புதன் என்பதால், இந்த காலகட்டத்தில் நற்பலன்கள் கிடைக்கும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும். பயணங்களால் பலன் கிடைக்கும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்தித்தவர்களுக்கு, நல்ல தகவல் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. வீடு மாற்றம், ஊர் மாற்றம் ஏற்படலாம்.

    சிம்ம - சுக்ரன் சஞ்சாரம்

    ஆவணி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், 6-ம் இடத்திற்கு வருவது யோகமான நேரம்தான். தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் நடைபெறும். இழப்புகளை ஈடுகட்ட, புதிய வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரமாக வாய்ப்புண்டு.

    குரு வக்ரமும், சனி வக்ரமும்

    மாதம் முழுவதும் குருவும், சனியும் வக்ரத்தில் இருக்கிறார்கள். உங்கள் ராசிநாதன் குரு வக்ர இயக்கத்தில் இருக்கும் இந்த நேரத்தில் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அடுத்தவர்களுக்கு நீங்கள் நன்மை செய்தாலும் அது தீமையாகவே தெரியும். குடும்பப் பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சனியின் வக்ர காலம் நன்மையைத் தரும், என்றாலும் விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

    இந்த மாதம் வியாழக்கிழமை தோறும் அல்லது சுவாதி நட்சத்திரம் அன்று நரசிம்மரை வழிபடுவது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஆகஸ்டு: 17, 18, 23, 24, செப்டம்பர்: 2, 3, 4, 8, 9, 14, 15 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் உங்கள் ராசிநாதன் வக்ரம் பெற்றிருப்பதால், எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் திருப்பங்கள் வந்து சேரும். கொடுக்கல்- வாங்கல்களில் கவனம் தேவை. ஆரோக்கியத் தொல்லை வந்துபோகும். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துச் செல்வதன் மூலமே குடும்பம் அமைதி காணும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    மீனம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    17-07-2022 முதல் 16-08-2022 வரை

    மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லும் மீன ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் வியாழன் பலம்பெற்று உங்கள் ராசியிலேயே சஞ்சரிப் பதால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

    ஆடி 13-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகமான அவர், 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது நற்பலன்களையே வழங்குவார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும். புதிய திருப்பங்கள் ஏற்படும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் நெருக்கம் ஏற்படும். உற்சாகத்தோடு பணிபுரியும் நேரம் இது.

    ஆடி 22-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. பிள்ளைகளால் பிரச்சினை ஏற்படும். பூர்வீக சொத்துத் தகராறு மீண்டும் தலைதூக்கும். பாகப்பிரிவினை இழுபறி நிலையில் இருக்கும். பிறருக்கு பொறுப்பு சொல்வதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படும்.

    ஆடி 23-ந் தேதி, மீன ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் குரு. அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. உடல்நலப் பாதிப்புகளும், மனக்கசப்புகளும் அதிகரிக்கும். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் தான் பூர்த்தியாகும். உத்தியோகம் மற்றும் தொழிலில் இடமாற்றம், ஊர்மாற்றம் வந்து சேரும். 10-ம் இடத்திற்கும் அதிபதியாக குரு விளங்குவதால், தொழில் பங்குதாரர்களால் தொல்லைகள் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் திசை மாறிச் செல்லும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. மனக்குழப்பம் அதிகரிக்கும் நேரம் இது.

    ஆடி 25-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 3-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது முன்னேற்றங்கள் திருப்திகரமாக இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நேரம் இது.

    இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் விரதமிருந்து வராகரை வழிபடுவதன் மூலம் வளர்ச்சி கூடும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 22, 23, 26, 27, ஆகஸ்டு: 6, 7, 8, 11, 12மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் உங்கள் ராசியைப் பார்க்கும் சனி வக்ரம் பெற்றிருப்பதால் மாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கும். உடல் நலம் சீராகும். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். கணவன் - மனைவிக்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம் அமைதி காண இயலும். பிள்ளைகள் வழியில் சுபச் செலவுகள் உண்டு. பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்கேற்ப வருமானமும் வந்துசேரும்.

    மீனம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    ஆனி மாத ராசி பலன்கள் 15-06-2022 முதல் 16-07-2022 வரை

    வசீகரத் தோற்றமே வாழ்க்கையின் வெற்றி என்று சொல்லும் மீன ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, செவ்வாயோடு இணைந்து சனியால் பார்க்கப்படுகிறார். எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். வீண் விரயங்களும் உண்டு.

    ஆனி 4-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். உங்கள் ராசிநாதன் குருவிற்கு சுக்ரன் பகை கிரகம். எனவே அவர் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது, பிரச்சினைகள் அதிகரிக்கலாம். மன அமைதி குறையும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. தொழிலில் சில இழப்புகளைச் சந்திக்க நேரிடும். விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டிய நேரம் இது.

    ஆனி 11-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். இக்காலம் ஒரு இனிய காலமாக அமையும். 4-ம் இடத்தில் புதன் பலம் பெறும் பொழுது கல்வியில் இருந்த தடை அகலும். பயணங்கள் அதிகரிக்கும். பக்குவமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். சொத்துக்களால் ஆதாயம் உண்டு. ஆரோக்கியத் தொல்லை அகலும். நண்பர்களின் ஆதரவோடு முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.

    ஆனி 12-ந் தேதி, மேஷ ராசிக்கு செவ்வாய் செல்கிறார். சனியின் பார்வையில் இருந்து செவ்வாய் விடுபடுவதாலும் தனாதிபதி செவ்வாய் தன ஸ்தானத்திற்கு வருவதாலும் பொருளாதார நிலை உயரும். கடன்களை அடைத்து மகிழ்வீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரலாம்.

    ஆனி 28-ந் தேதி, கடக ராசிக்குப் புதன் செல்கிறார். கல்வி ஸ்தானாதிபதி பஞ்சம ஸ்தானம் செல்லும் பொழுது பிள்ளைகளின் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். அண்ணன் - தம்பிகளுக்குள் பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து வருமானம் வரலாம்.

    ஆனி 29-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அஷ்டமாதிபதி சுக்ரன் சுக ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவு வரலாம். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடு ஏற்படும். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரக்கூடும். பொதுவாழ்வில் வீண்பழிகள் வரலாம். இக்காலத்தில் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செய்வதே நல்லது.

    இம்மாதம் நடராஜர் வழிபாட்டை நம்பிக்கையோடு செய்வது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஜூன்: 15, 16, 20, 21, 26, 27, ஜூலை: 1, 2, 12, 13, 14மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் உங்கள் ராசியை சனி பார்ப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பொறுமையும், நிதானமும் தேவைப்படும் மாதம் இது. கணவன் - மனைவிக்குள் அன்பும், அரவணைப்பும் அதிகரிக்கும். செவ்வாய் பெயர்ச்சிக்குப் பிறகு பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. பணிபுரியும் இடத்தில் சில பிரச்சினைகள் வரலாம். திறமைக்குரிய அங்கீகாரம் கிடைப்பது அரிது.

    மீனம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை

    பம்பரம் போல் சுழன்று பணிபுரியும் ஆற்றல் படைத்த மீன ராசி நேயர்களே!

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு தன் சொந்த வீடான உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். ஜென்ம குரு என்றாலும் பலம்பெற்று சஞ்சரிப்பதால் ஆரோக்கியம் சீராகும்.

    மீன - செவ்வாய் சஞ்சாரம்

    வைகாசி 3-ந் தேதி மீன ராசியான உங்கள் ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங் களுக்கு அதிபதியான செவ்வாய், உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் பொழுது, நினைத்த காரியம் நினைத்த நேரத்தில் முடியும். தைரியம், தன்னம்பிக்கை கூடும். பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும்.

    சனி - செவ்வாய் பார்வைக் காலம்

    வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப் போகிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவரை லாப ஸ்தானத்தில் உள்ள சனி பார்க்கும் பொழுது, பகை கிரகமாக இருந்தாலும் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். விற்பனை செய்த பூமியால் சில பிரச்சினை வரலாம்.

    புதனின் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்

    வைகாசி 7-ந் தேதி, மேஷ ராசியில் புதன் வக்ர நிவர்த்தியாகிறார். இதனால் குடும்ப ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் -வாங்கல் ஒழுங்காகும். பிள்ளை களுக்கு வரன்கள் வாசல் தேடி வரும். வெளிநாட்டு முயற்சியில் அனுகூலம் உண்டு. வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். இக்காலத்தில் உடன்பிறப்புகளின் இல்லங்களில் சுபகாரியங்கள் நடைபெறலாம். வழக்குகள் சாதகமாகும். தொழிலில் சில மாற்றங்களை செய்வீர்கள்.

    மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

    இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு வருகிறார். சகாய ஸ்தானாதிபதி தன ஸ்தானத்திற்கு வரும் போது, தனவரவு திருப்தி தரும். கடமையில் இருந்த தொய்வு அகலும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.

    மகரச் சனி வக்ர காலம்

    வைகாசி 11-ந் தேதி, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் உள்ள சனி வக்ரம் பெறுவதால், பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலை உருவாகும். எதிர்பார்த்த தகவல் தாமதப்படலாம். லாபத்தைக் கொடுத்து வந்த பங்குதாரர்கள் திடீரென விலகிக் கொள்வதாகச் சொல்வர். வீடு, மனை வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும். பணிபுரியுமிடத்தில் பணத்தைக் கையாளும் பொழுது கவனம் தேவை. திடீரென இடமாற்றம், ஊர் மாற்றம் வரலாம்.

    இம்மாதம் லட்சுமி சமேத விஷ்ணுவை இல்லத்தில் வைத்து வழிபடுவது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 17, 18, 21, 22, 27, 28, ஜூன்: 2, 3, 12, 13, 14மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொடர்ந்து வந்த கடன் சுமை குறையும். கணவன் - மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்களின் ஒத்துழைப்புடன் ஒரு சில நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். வீடு வாங்கும் யோகம் உண்டு. வெளிநாடு செல்ல எடுத்த முயற்சி கைகூடும். பிள்ளைகளின் முன்னேற்றம் ஆச்சரியப்பட வைக்கும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    ×