என் மலர்
மீனம்
2025 பங்குனி மாத ராசிபலன்
எவரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லும் மீன ராசி நேயர்களே!
பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் சகாய ஸ்தானத்தில் சுக்ரன் வீட்டில் உங்கள் ராசிநாதன் குரு பரிவர்த்தனை யோகம் பெற்று சஞ்சரிக்கிறார். யோகங்களில் சிறப்பான யோகம் 'பரிவர்த்தனை யோகம்' என்றாலும், உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியாக சுக்ரன் விளங்குவதால், ஏற்றமும், இறக்கமும் கலந்த சூழ்நிலை உருவாகும். சில நேரங்களில் இழப்புகளை உருவாக்கும். உடன்பிறப்புகள் வழியே பிரச்சினைகள் ஏற்படலாம். காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடும். என்றாலும் போராடி வெற்றிபெறும் சூழ்நிலையே உண்டு. சுக ஸ்தானத்தில் தனாதிபதி செவ்வாய் இருப்பதால் தனவரவு திருப்தி தரும். என்றாலும் வந்தவுடன் செலவாகும் சூழ்நிலை அதிகம் உண்டு.
மீன - புதன் சஞ்சாரம்
மாதத் தொடக்கத்தில் மீன ராசியில் புதன் நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் நீச்சம் பெறுவது நன்மைதான். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் நீச்சம் பெறும்பொழுது, மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும் என்பது நியதி. அந்த அடிப்படையில் பொருளாதார பிரச்சினை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தாய்வழி ஆதரவு உண்டு. தக்க விதத்தில் திருமண முயற்சி வெற்றிபெறும். உறவினர்களோடு இருந்த பகைமாறும். வீடு, இடம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. பயணங்கள் பலன் தருவதாக அமையும்.
கும்ப - புதன் சஞ்சாரம்
பங்குனி 4-ந் தேதி புதன், கும்ப ராசிக்கு வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு சுக ஸ்தானாதிபதியாக விளங்குபவர் புதன். 'மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் கிடைக்கும்' என்பது பழமொழி. அந்த அடிப்படையில் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய பாதை புலப்படும். அனுபவஸ்தர்களின் ஆலோசனை அவ்வப்போது கைகொடுக்கும். வரன்கள் வாசல் தேடி வந்துசேரும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம், இலாகா மாற்றம் உண்டு. நூதனப் பொருள் சேர்க்கை ஏற்படும்.
மீன - சுக்ரன் வக்ரம்
மீனத்தில் உள்ள சுக்ரன், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். அசுர குருவான சுக்ரன், உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியாகவும் விளங்குவதால், அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. தொழில் வளம் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் - வாங்கல்களில் இருந்த பிரச்சினை அகலும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்து இணைவர்.
கடக - செவ்வாய்
பங்குனி 24-ந் தேதி கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். எனவே இக்காலத்தில் மிக கவனமாக இருப்பது நல்லது. துளி வருமானம் இல்லாவிட்டாலும், செலவு அதிகரிக்கும். குடும்பச்சுமை கூடும். நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கலாம். வாங்கிய இடத்தால் பிரச்சினையும், வளர்ச்சியில் தளர்ச்சியும் வரும் நேரம் இது. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு உயரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவ- மாணவிகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபச்செய்திகள் வந்து சேரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
மார்ச்: 19, 20, 25, 26, 31, ஏப்ரல்: 1, 4, 5, 6.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.






