search icon
என் மலர்tooltip icon

  மீனம் - குருப்பெயர்ச்சி பலன்கள்

  மீனம்

  குருபெயர்ச்சி பலன்-2024

  மீனம்-சகாய குரு 70%

  குருவின் ஆசி பெற்ற மீன ராசியினரே!

  இதுவரை தன ஸ்தானத்தில் நின்று பல்வேறு பொருளாதார மாற்றங்களை வழங்கிய குரு பகவான் தொடர்ந்து 3ம்மிடமான சகாய , முயற்சி ஸ்தானத்திற்குச் சென்று சுப பல்வேறு பலன்களை ஏற்படுத்தவுள்ளார். சனி பகவான் விரய ஸ்தானத்திலும் ராசியில் ராகுவும் ஏழாமிடத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள்.

  சகாய குருவின் பொதுபலன்கள்

  மீன ராசிக்கு குருபகவான் 1, 10ம் அதிபதி ராசி அதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதியான குரு பகவான் மூன்றாமிடம் செல்கிறார். மூன்றாமிடம் என்பது முயற்சி ஸ்தானம். தைரியம், தன் நம்பிக்கை, சகோதர ஸ்தானம். 3ம்மிடம் என்பது உப ஜெய ஸ்தானம். லக்ன பாவத்தின் பாவத் பாவமான 3ம்மிடம் ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு உதவும் பாவகமாகும். வெற்றிக்கு வலு கூட்டுவது மற்றும் வெற்றி மேல் வெற்றியைத்தருவது.

  இந்த இடத்திற்கு ஒருவரின் வாழ்க்கையில் ஒளி விளக்கை ஏற்றும் குருபகவான் செல்வதால் அனைத்து இன்பங்களும் அதிகமாகும்.

  தைரியம், தன் நம்பிக்கை முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தடைக் கற்கள் படிக்கற்களாகும். இடப்பெயர்ச்சி செய்ய நேரும். வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் என உங்களின் நல்வாழ்விற்கான தேவையான அனைத்து மாற்றங்களும் நடக்கும். சகோதரத்தால் ஆதாயம் உண்டு.

  உங்கள் இன,மத அமைப்புகளில் முதன்மைப் பதவியும் கெளரவமும் கிடைக்கும். உயில் எழுத அல்லது எழுதப்பட்ட உயிலைப் பெற, டாக்குமெண்டுகளை திருத்த, புதிய பத்திரம் எழுத உகந்த நேரம். காணாமல் போன பொருள், கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும். ஞாபக சக்தி. சிந்திக்கும் திறன் கூடும். 3ம்மிடம் ஒப்பந்தம் பற்றிக் கூறுமிடம் என்பதால் புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

  குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்

  குருவின் ஐந்தாம் பார்வை ராசிக்கு 7ம்மிடத்தில் உள்ள கேதுவின் மேல் பதிகிறது. ஏழாமிடம் என்பது திருமண வாழ்க்கை,தொழில் கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள் பற்றிக் கூறுமிடம். தன் பார்வை பலத்தால் ஒரு பாவகத்தின் பலனை விருத்தி அடையச் செய்யும் சக்தி படைத்தவர் குருபகவான். கேது பகவான் தான் நின்ற பாவக பலனை சுருக்கும் தன்மை கொண்டவர். அதே நேரத்தில் அவர் வலை கிரகம். தூண்டில் என்றும் கூறலாம்.

  குரு பகவான் ஏழாமிடத்தில் உள்ள கேதுவை பார்ப்பதால் இதுவரை திருமணம் பற்றிய ஆர்வம் இல்லாதவர்களுக்கு திருமணம் செய்து கொள்ளும் விருப்பம் உருவாகும்.சிலருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும். உபத்திரத்தைக் கொடுத்து வந்த பழைய தொழில் கூட்டாளியின் விலகல் நிம்மதி தரும்.புதிய திறமையான பங்குதாரரின் வருகை மகிழ்ச்சியைத் தரும். பெரிய மனிதர்களின் நட்பும் உதவியும் உண்டு. புதிய நண்பர்களின் அறிமுகம் வெற்றிப் பாதையைக் காட்டும்.

  குருவின் ஏழாம் பார்வை பலன்கள்

  குருவின் 7ம் பார்வை ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் பதிகிறது. அந்த இடத்திற்கு சனி பார்வையும் உள்ளது. மத்திம வயதினர் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நடத்தி பாக்கிய பலத்தால் தாத்தா, பாட்டி ஆவார்கள். திருமணம் முடிந்து பல வருடங்களாக குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு முன்னோர்கள் மற்றும் குல தெய்வ அருளால் குலம் தழைக்க ஆண் வாரிசு பிறக்கும். வீடு, வாகன யோகம் என தடைபட்ட அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும்.

  தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தந்தை,மகன் உறவு மேலோங்கும்.அறியாமையால் குடும்ப பெரியவர்களிடம் சாபம் வாங்கியவர்கள் குருவின் பார்வை ஒன்பதாமிடத்திற்கு இருக்கும் இந்த காலத்தில் இயன்ற ஆடை தானம் தந்து ஆசி பெற பாக்கிய பலம் கூடும்.

  வீட்டுப் பெரியவர்கள் உயிரோடு இருக்கும் போது முறையாக பராமரிக்காமல் துன்புறுத்தி விட்டு இறந்த பிறகு அவர்களை வழிபடுவதால் எந்த பயனும் கிடையாது.வாழும் காலத்தில் ஒருவரின் ஆசியைப் பெறுபவர்களின் ஏழு தலைமுறையினர் எந்த குறையுமின்றி வாழ முடியும்.

  குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்

  குருவின் ஒன்பதாம் பார்வை பதினொன்றாமிடமான லாப ஸ்தானத்தில் பதிகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாள் எண்ணங்களை ஆசைகளை நிறைவேற்றுமிடம் பதினொன்றாமிடம். பூர்வீக சொத்து தொடர்பான பாகப் பிரிவினை நடந்து உங்கள் பங்கு முழுமையாக கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். தகவல், தொடர்பு ஊடகங்களில் உங்களின் பெயர் பிரபலமாக பேசப்படும்.

  தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணத்தட்டுப்பாடு நீங்கும்.ஏதாவது வழியில் பணம் வந்து கொண்டே இருக்கும். கடன் சுமை குறையும். எதிர் கால வாழ்க்கையை நினைத்து பயந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம்.வராக் கடன்கள் வசூலாகும்.

  அடமானத்தில் இருக்கும் நகைகள் மீண்டு வரும். மறுதிருமண முயற்சி வெற்றி தரும். சிலர் முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவது குடும்பம் அமைக்கலாம். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் ஒருங்கே உங்களை வழி நடத்தும்.

  குருவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் (1.5.2024 - 13.6.2024 வரை)

  மீன ராசிக்கு 6ம் அதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் சுய ஜாதகத்தில் 6ம்மிடம் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசை நடப்பவர்களுக்கு ஆரோக்கிய கேடு உண்டாகும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். யாருக்கேனும் ஜாமீன் போட்டு தேவையில்லாத கடன் மற்றும் வம்பு, வழக்கில் மாட்டலாம். சம்பந்த மில்லாத புதிய எதிரிகள் தோன்றுவார்கள். ஜனன கால ஜாதகத்தில் சுப வலிமை பெற்ற கிரகங்களின் தசா புக்தி நடப்பவர்களுக்கு ஆரோக்கிய குறைபாடு அகலும். வராக்கடன் வசூலாகும்.

  கடன் பாதிப்பு குறையும். வீண் வம்பு, வழக்கிலிருந்து விடுபடுவார்கள். எதிரிகள் நட்பு கரம் நீட்டுவார்கள். வழக்குகள் சாதகமாகும்.

  குருவின் ரோகிணி நட்சத்திர சஞ்சார பலன்கள் (14.6.2024 முதல் 20.8.2024 வரை)

  மீன ராசிக்கு 5ம் அதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் அனைத்து எண்ணங்களும் பலிதமாகும். சிந்தனை, செயல்திறன் அதிகரிக்கும். எடுக்கும் தீர்மானங்கள் சரியாக இருக்கும். பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.குழந்தை பாக்கியமும், குழந்தைகளால் மன நிம்மதியும் ஏற்படும். எதிர்பாராத அதிர்ஷ்டம், பங்குச் சந்தை ஆதாயம் தருவார். குல தெய்வ அனுகிரகம் உண்டு. புகழ், அந்தஸ்து, கெளவரம் தரும் பதவிகளைப் பெற்றுத் தருவார். சாஸ்திர ஞானம் மிகுதியாகும் வேற்று மொழி நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். சிலருக்கு புதிய எதிர் பாலின நட்பு, காதல் ஏற்படும்.

  குருவின் மிருகசீரிஷ நட்சத்திர சஞ்சார பலன்கள்(21.8.2024 முதல் 8.10.2024 வரை, 5.2.2025 முதல் 15. 5. 2025 வரை)

  மீன ராசிக்கு 2,9ம் அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் பேச்சை மூலதனமாக கொண்டவர்கள். குலத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். தாராள தன வரவால் குடும்பத்தில் நிம்மதி கூடும்.

  புண்ணிய பலத்தை அதிகரிக்கும் தர்ம காரியங்களில் ஈடுபாடுவார்கள்.சிலருக்கு கோவில் கட்டும் பாக்கியம் கிடைக்கும். தடைபட்ட கோவில் கட்டும் பணிகள் குடமுழுக்கும் நடைபெறும். பலருக்கு ஆன்மீக ஸ்தலங்களுக்கு புனித யாத்திரை செல்லும் வாய்ப்பு கிடைக்கும். முன்னோர்களின் நல்லாசிகள் பெற உகந்த காலம். பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சமூக அந்தஸ்து, மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

  குருவின் வக்ர காலம் (மீன ராசிக்கு 2, 9ம் அதிபதியான. செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 9.10.2024 முதல் 28.11.2024 வரை)

  வக்ரமடையும் காலத்தில் சிலர் எதையாவது யோசித்து துக்க மிகுதியால் நிம்மதியான தூக்கத்தை தொலைப்பார்கள்.குறுக்கு வழியை கடைபிடித்தவர்கள் தர்மம், நேர்மை நியாயம் பற்றிப் யோசிப்பார்கள். மன மாற்றத்திற்கு குறுகிய காலத்திற்கு வெளிநாடு,வெளி மாநிலத்திலுள்ள மகன் அல்லது மகள் வீட்டிற்கு சென்று வரலாம்.பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகுதியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும்.

  மீன ராசிக்கு 5ம் அதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் (29.11.2024 முதல் 4.2.2025 வரை) குருபகவான் வக்ர மடையும் காலத்தில் அதிர்ஷ்டம் தொடர்பான செயல்கள், பங்குச் சந்தை ஆகியவற்றில் ஆர்வம் குறைக்க வேண்டும். செயற்கை கருத்தரிப்பு முறைக்கு உகந்த காலம் அல்ல. பிள்ளைகளை சொந்த பொறுப்பில் பாதுகாக்க வேண்டும். பூர்வீக சொத்து தொடர்பான பேச்சு வார்த்தைகளை ஒத்தி வைக்க வேண்டும்.

  திருமணம்

  ஒரு ஜாதகத்தில் எத்தகைய தோஷம் இருந்தாலும் ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் நடந்துவிடும். குருவின் பார்வை 7ம் மிடத்தில் பதிந்தாலும் 7ம் மிடத்தில் கேது இருப்பது சர்ப்ப தோஷ அமைப்பாகும். ராகு, கேது மற்றும் சனியின சஞ்சாரம் சற்று சாதகமற்று இருப்பதால் சிலருக்கு கோட்சார ரீதியாக திருமணத் தடை ஏற்படலாம். சுய ஜாதக பரிசோதனை மிக அவசியம்.

  பெண்கள்

  வைராக்கியத்தாலும், விடாமுயற்சியாலும் சிரமமான கடுமையான காரியங்களைக் கூட எளிதாக நடத்தி முடிப்பீர்கள். சிறு தொழில், சுய தொழில் செய்யும் ஆர்வம் உண்டாகும். நன்மையின் அளவை அளவிட முடியாத பிரமாண்ட வளர்ச்சி உண்டு. எதிர்காலத்தில் உங்கள் பெயர் பிரகாசிக்குமளவு புகழ், பெருமை, கவுரவம் சேரும். தாய் வழி உறவுகளுடன் ஏற்பட்ட மனக் கசப்பு மறையும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.

  மாணவர்கள்

  3ம்மிடத்திற்கு குரு செல்வதால் சில குழந்தைகள் பள்ளியை மாற்ற நேரும்.எதிர்கால கல்வியைத் திட்டமிடுதலில் இருந்த குழப்பங்கள் விலகும்.டிவி, மொபைல் போன்ற வற்றிலிருந்து விடுபடுவார்கள். விளையாட்டு போட்டிகளில் கலந்து வெற்றி பெறுவீர்கள். சாதிக்க களம் தேடும் இளைஞர்களுக்கு சாதகமான காலம்.உயர் கல்வியில் இருந்து வந்த தடைகள் அகலும்.சிலர் உயர் கல்லூரி படிப்பிற்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும்.

   பரிகாரம்

  குரு பலம் சிறப்பாக இருந்தாலும் ராசியில் ராகு 7ல் கேது இருப்பது சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஸ்ரீ சரபேஸ்வரர் மந்திரங்களை தினமும் முடிந்தளவு பாராயணம் செய்தால் நற்பலன்கள் தேடி வரும் சரபேஸ்வரரை வணங்க ஞாயிற்று கிழமை உகந்த நாளகும் அன்று, அசைவ உணவுகள் உண்ணாமல், உடல், மன சுத்தி செய்து கொண்டு ராகு காலத்தில் மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் சரபேஸ்வரர் சந்நிதி முன்பு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் எத்தகைய பிரச்சனைகளாக இருந்தாலும் நீங்கி வெற்றி கிடைக்கும்.

  மீனம்

  குருப்பெயர்ச்சி பலன்கள் 2023

  உழைப்பை நம்பி வாழும் மீன ராசியினரே இதுவரை ஜென்ம குருவாக இருந்த உங்கள் ராசி அதிபதி குரு தன ஸ்தானம் நோக்கிச் செல்கிறார். அக்டோடர் 30, 2023 வரை மேஷ ராசியில் உள்ள ராகுவுடன் இணைகிறார். இந்த குருப்பெயர்ச்சி முழுவதும் சனியின் மூன்றாம் பார்வை பெற்று பலன் தரப்போகிறார்.

  தன குருவின் பொதுபலன்கள்:

  மீன ராசிக்கு குருபகவான் 1,10ம் அதிபதி. ராசி அதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதி குரு தன ஸ்தானம் செல்வது மிகச் சிறப்பான கிரக அமைப்பு. 2ம்மிடம் என்பது தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்.தனகாரகன், வாக்கு ஸ்தான அதிபதி குருவே வாக்கு ஸ்தானம் செல்வது யோகமான காலம்.பொன்னவன் குரு 2ல் வந்ததால் பொசுங்கி விடும் துன்பம். பொன்னும், பொருளும் சேரும். ஜென்ம குருவின் காலத்தில் நடைபெற்ற சுப பலன்களை விட பல மடங்கு மாற்றங்கள், திடீர் திருப்பங்கள் ஏற்படும். இழந்த அனைத்தையும் திரும்பப் பெறப் போகிறீர்கள்.

  நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும். தொட்டது எல்லாம் பணமாக காய்க்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பணத்திற்காக உங்களை உதாசீனம் செய்த உறவுகள் தவறை உணர்ந்து மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். வாக்குப் பலிதம் உண்டாகும். கொடுத்த வாக்கை, நாணயத்தை காப்பாற்றுவீர்கள். செய்யும் தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு என்று தனி முத்திரை பதிப்பீர்கள். குறிப்பாக பேசுவதை தொழிலாக கொண்டவர்கள், உணவுத் தொழில், வக்கீல்கள், ஜோதிடர்கள், மார்கெட்டிங், அரசாங்க ஒப்பந்ததாரர்கள் போன்றோரின் தொழில்களின் வளர்ச்சியை அளவிட முடியாது. வராக்கடன் வசூலாகும்.வெளியே சொல்லமுடியாமல் தவித்த கடன் பிரச்சனையிலிருந்து மீள்வீர்கள். ஜாமீன் வழக்கு சாதகமாகும். கொடுக்கல், வாங்கல் சீராகும். கண் கோளாறுகள் சீராகும்.

  குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்:

  ராசிக்கு ஆறாமிடமான ருணம், ரோக, சத்ரு ஸ்தானத்தில் குருவின் ஆறாம் பார்வை பதிகிறது. எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை இருந்து வந்த மனக் கவலைகள், குழப்பங்கள், உடல்நலக்குறைவு, கடன் தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணம், அதிர்ஷ்ட குறைவு, தடை, தாமதம் போன்ற அனைத்தும் விலகி மேன்மையான பலன் உண்டாகும் அற்புத காலமாகும். நோய் குணமாகாது என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள் பூரண நலம் பெறுவார்கள். நல்ல ஆரோக்கியம் பெற்று ஆனந்தம் அடைவீர்கள். சரளமான பணப்புழக்கம் இருப்பதால் கொடுக்க வேண்டிய பணத்தை திரும்ப கொடுப்பீர்கள்.அச்சுறுத்திய எதிரிகள் விலகிச் செல்வார்கள். விண்ணப்பித்த தொழில் விரிவாக்கம், வீடு வாகனக் கடன் கிடைக்கும். சொத்துக்கள் மீதான முதலீடுகள் அதிகரிக்கும். வேலைக்காக குடும்பத்தை பிரிந்து இருப்பவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் சேருவீர்கள்.

  குருவின் ஏழாம் பார்வை பலன்கள்:

  ராசிக்கு எட்டாமிடத்தில் குருவின் ஏழாம் பார்வை பதிகிறது. எட்டாமிடம் என்பது துன்பம், வேதனை, அவமானம், விபத்து, கண்டம், சர்ஜரி, ஆயுள், திடீர் அதிர்ஷ்டம் போன்றவற்றைப் பற்றிக் கூறுமிடம். ஆயுள், ஆரோக்கியம், தீராத நோய் தொடர்பான பய உணர்வு நீங்கும். வேதனைப் படுத்திய வம்பு, வழக்கு, அவமானம் இவற்றிலிருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும். யார் வம்புக்கு இழுத்தாலும் கண்டும் காணமலும் இருப்பது நல்லது. நல்ல நேரம் வரும் பொழுது எதிரிகளை ஒரு கை பார்த்துக் கொள்ளலாம். விலையுயர்ந்த பொருட்களை கவனமாக பாதுகாப்பது மிக அவசியம். வெகு சிலருக்கு விபரீத ராஜ யோகமாக உயில் சொத்து புதையல், லாட்டரி, ரேஸ், அதிர்ஷ்ட பணம் போன்றவை கிடைக்கலாம்.

  குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்:

  ராசிக்கு பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் குருவின் பத்தாம் பார்வை பதிகிறது. சொந்த தொழில் செய்பவர்களுக்கு, தொழில் அதிபர்களுக்கு தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். தடைகள் விலகுவதால் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். தொழிலால் கவுரவம், அந்தஸ்து . கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். அதிருப்தி மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும் கூட்டாளிகளும் தொழில் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். பல புதிய தொழில் முதலீட்டாளர்கள் உருவாகுவார்கள். முன்னோர்களின் பரம்பரை தொழிலை நடத்துபவர்களுக்கு அபாரமான தொழில் வளர்ச்சி உண்டு. தொழிலை விரிவு படுத்த தேவையான நிதி உதவி கிடைக்கும். புத்திர பிராப்தம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும்.

  அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.4.2023 முதல் 21.6.2023 வரை

  கோட்சாரத்தில் ராசிக்கு எட்டில் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் உங்களை பாதித்த செய்வினை மற்றும் திருஷ்டி தோஷம் விலகும்.

  வெற்றுப்பத்திரம், எழுதாத காசோலை போன்றவற்றில் கையெழுத்துப் போடுதல், ஜாமீன் போன்றவற்றைப் தவிர்க்க வேண்டும்.வெளிநாட்டில், வெளிநாட்டு கம்பெனியில் வேலை பார்ப்பவர்களுக்கு மேன்மை உண்டு.வெளிநாடு செல்ல விசா போன்ற ஆவணங்களில் இருந்த வில்லங்கம் விலகும். முன் அனுபவம், பரிட்சயம் இல்லாத தொழிலை தவிர்க்க வேண்டும்.

  பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.6.2023 முதல் 17.4.2024 வரை

  மீன ராசிக்கு 3,8ம் அதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் இடப்பெயர்ச்சி உண்டாகும். ஞாபக மறதிஅதிகரிக்கும். ஆபரணங்களை கழட்டி அங்கே வைத்தேன், இங்கே வைத்தேன் என்று தேடிக் கொண்டே இருப்பீர்கள். முக்கியமான ஆவணங்கள் ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு அல்லது சொத்து தொடர்பான ஆவணங்கள் அல்லது வைத்த இடம் மறந்து போகும் அல்லது ஆவணங்களில் திருத்தம் செய்ய நேரும். உடன் பிறந்தவர்களுடன் தேவையில்லாத வம்பு, வழக்கு, சொத்து தொடர்பான பாகப்பிரிவினை பிரச்சனை உருவாகும்.

  கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் 18.4.2024 முதல் 30.4.2024 வரை

  மீன ராசிக்கு ஆறாம் அதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் பங்காளிச் சண்டை, வாய்க்கால் வரப்புச் சண்டை எல்லைத் தகராறுகள் சுமூகமாகும். உறவுகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகி சுமூகமான நட்பை உருவாக்கி கொடுக்கும். பகைவர்களாக இருந்தவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். கடன் தொல்லையிலிருந்து நிரந்தரமான தீர்வு கிடைக்கும். அசதி, மந்தம், சோர்வு உண்டாகும். வேலைப் பளு அதிகரிக்கும்.

  குருவின் வக்ர பலன்கள்:

  4.9.2023 முதல் 26.11.2023 வரை பரணி நட்சத்திரத்திலும் 27.11.2023 முதல் 31.12.2023 வரை அசுவினி நட்சத்திரத்திலும் குரு பகவான் வக்ரம் அடையும் காலத்தில் பெரிய பணப் பரிவர்த்தனையில் கவனம் தேவை. வரவை விட செலவு அதிகரிக்கலாம். நண்பர்கள் எதிரிகளாவார்கள். வேலைமாறும் அல்லது வேலை பறிபோகும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பேச்சால் பிரச்சனை வளரும். சொத்துக்கள், நகைகள் அடமானத்திற்கு செல்லும்.

  பெண்கள்: சுய தொழில் ஆர்வம் அதிகரிக்கும். வேலைக்கு செல்லும் பெண்களின் திறமைக்கு தனி மதிப்பு கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் பெரியவர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் செய்ய வேண்டிய கடமைகளை செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள். அதிகமான நகை, ஆடம்பர பொருட்கள் சேர்ப்பீர்கள் பிள்ளைககள் விசயத்தில் இருந்த கவலைகள் அகலும்.

  மாணவர்கள்: உயர்கல்வி கற்பதில் நிலவிய தடைகள் விலகும். விரும்பிய பள்ளி, கல்லூரியில் படிப்பை தொடர்வீர்கள். பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, போட்டித் தேர்வு களில் உங்கள் தனித்திறமை மிளிரும். அரியர்ஸ் வைத்த பாடங்களை மீண்டும் எழுதி பாஸ் பண்ண முடியும்.

  உத்தியோகஸ்தர்கள்: வேலை தேடுபவர்களுக்கு படிப்பிற்கும் திறமைக்கும் தகுந்த வேலை கிடைக்கும். இதுவரை இல்லாத தெம்பு மனதில் குடிபுகும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். கவுரவம், அந்தஸ்து கூடும்படியான நல்ல சம்பவங்கள் நடக்கும். அரசு தனியார் துறையினருக்கு துறை ரீதியான இடமாற்றம் அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர் மாற்றம் கிடைக்கும்.

  ராகு/கேது பெயர்ச்சி: அக்டோபர் 30, 2023ல் ராகு ஜென்ம ராசியில் அமர்கிறார். கேது ஏழாமிடம் செல்கிறார். உறுதியான கோட்பாடு உடையவர்களாக மாறுவீர்கள். யாருக்காவும் மனதை மாற்றிக் கொள்ள மாட்டீர்கள். அதே நேரத்தில் மற்றவர்களுடைய உணர்வுகளை மதித்து நடந்து கொள்வீர்கள். உங்கள் கருத்தை மற்றவர்கள் மேல் திணிக்கவும் தயங்க மாட்டீர்கள். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

  பரிகாரம்: ஏழரைச் சனியின் காலம் என்பதாலும் இந்த ஓராண்டும் குருபகவான் லாபாதிபதி, விரயாதிபதியாகிய சனியின் பார்வையில் உலாவுவதால் யாரையும் எதையும் நம்பக்கூடாது. தன் கையே தனக்கு உதவி என பொறுப்போடும், விழிப்போடும் இருப்பது நல்லது. பெளர்ணமி நாட்களில் அவல் பாயாசம் படைத்து ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட பொருளாதரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஜென்ம நட்சத்திர நாட்களில் மாற்றுத்திரனாளின் தேவையறிந்து உதவிட ஏழரைச் சனியின் பாதிப்பு குறையும்.

  பிரசன்ன ஜோதிடர்

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  மீனம்

  குருப்பெயர்ச்சி பலன்கள் - 2023

  வெளிநாட்டுமோகம் மிகுந்த மீன ராசியினரே ராசியில் குருபகவான் ஆட்சி பலம் பெறுகிறார்.

  சனிபகவான் 11,12ம் இடத்திலும், ராகு பகவான் 2ம் இடத்திலும், கேது பகவான் 8ம் இடத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இதுவரை ராசிக்கு 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் ராசிக்குள் அடியெடுத்து வைக்கிறார். ராசி அதிபதி குரு ராசியில் ஆட்சி பலம் பெறுவது சிறப்பு அவரே கேந்திராதிபதி என்பதால் கேந்திராதிபத்திய தோஷம் ஏற்படுமோ? என்ற பயமும் மீன ராசியினருக்கு உண்டாகும். குரு உங்களுடைய ராசி அதிபதி என்பதால் எந்த கெடுதலும் செய்ய மாட்டார் என்பதை உறுதியாக நம்பலாம். அத்துடன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்சனியின் பார்வையும் 17.1.2023 வரை ராசிக்கு இருப்பதால் சுப பலன் மிகுதியாகும். ராசி அதிபதி குரு 12ல் மறைந்ததால்அவதிபட்ட மீன ராசியினருக்கு இந்த குருப் பெயர்ச்சி புத்துணர்வு தரும். இழந்த பாக்கிய பலன்கள்களைகிடைக்கப் பெறுவீர்கள். எனவே ராசி, 5 எனும் பூர்வ புண்ணியம் 9 எனும் பாக்கிய ஸ்தானம் குருவின் கருணையால் உங்களை அப்பழுக்கற்ற புது மனிதனாக வலம் வரச் செய்யப் போகிறார்கள்.

  உங்களை ஏளனம் பேசியவர்கள் எல்லாம் புகழ்வார்கள். தன் நம்பிக்கையும் தைரியமும் மிகுதியாகும். இந்த பிறவியில்உங்களின் பாக்கிய ஸ்தானமும், பூர்வ புண்ணிய ஸ்தானமும்ஒருங்கேஇணைந்து பலன் தரும் காலம். இந்த குருப் பெயர்ச்சி மீன ராசியினரைமகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும்.உங்களின் தோற்றம்பொழிவு பெறும். மனதில் அமைதி குடிகொள்ளும். அழகான ஆடம்பரமாகஉங்களை அலங்கரிக்க தனி கவனம் செலுத்துவீர்கள். தன ஸ்தானமாகிய2ம் இடத்தில் ராகு நிற்பதால்பொருளாதார ரீதியாக மிகப் பெரிய முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியும் உருவாகும் . பணவரவு அதிகரிக்கும்.

  உங்கள் வாழ்நாளில் இதுவரை பார்க்காத மிகப் பெரிய தன வரவு கிடைக்கும். குரு, ராகு கொடுக்கும் பணத்தை எப்படி சேர்த்து வைத்து பிற்கால தேவைக்கு பயன்படுத்துவது என்ற ஞானமும் கிடைக்கும். ஜனவரியில் ஏழரைச் சனி ஆரம்பமாகப் போவதால் சிலருக்கு வலது கண், பல், முகம், காது தொடர்பான சிகிச்சை செய்ய நேரும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற அதிக அக்கறை கொள்ள வேண்டும். கடுமையான வார்த்தைகள் பிரயோகம் பண்ணுவதை தவிர்த்தல் நலம். அண்டை அயலாரிடம் மிகவும் எச்சரிக்கையுடன் பழக வேண்டும்.

  5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வைபஞ்சம ஸ்தானம் என்ற புத்திர, பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் கட்டுப்பாடு இல்லாதுஅலைந்த மனம் கட்டுப்படும். எவை நல்லவை, எவை தீயவை என மனதால் பகுக்க முடியும். ஆன்மீக நாட்டம்மிகும். பொருளாதாரத்தில் மிகுதியான ஏற்றம்இருக்கும். அதிர்ஷ்டம் உங்களை வழி நடத்தும். பங்குச் சந்தை முதலீடு பல மடங்கு லாபம் பெற்றுத்தரும். தொழில் நிலை சாதகமாக உள்ளது. புதிய தொழில் முயற்சி பலிதமாகும். வட்டித் தொழில் சீட்டுக் கம்பெனி, ஏலச் சீட்டு, பைனான்ஸ் போன்று பெரிய அளவில் பணம் புரளும்தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு அபரிமிதமான தொழில் வளர்ச்சி உண்டு. தொழிலாளி, முதலாளி கருத்து வேறுபாடு குறையும். வழக்கறிஞர், நீதித்துறை, ஆடிட்டிங், நாட்டு மருந்துக் கடை, மருத்துவமனை சார்ந்த தொழில், ஆன்மீக, பக்தி மார்க்க தொழிலில்கள் சீராக நடக்கும்.

  புத்திர பாக்கியத்திற்கு ஏங்கியவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். செயற்கை கருத்தரிப்பை நாடி மன வேதனை அடைந்தவர்கள் இயற்கையாக பூர்வ புண்ணிய பலத்தால்ஆண் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். மகன், மகளுக்கு திருமணம் ஆகி வம்ச விருத்தியின்மையால் மனம் வருந்திய மீன ராசியினர். பேரன், பேத்தியை கொஞ்சி விளையாடும் காலம் வந்து விட்டது. குழந்தைகள் ஏற்பட்ட மனக் கவலைமறையும்.குழந்தைகளின் நலனில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். குழந்தைகளால் நற்பலன்கள் மிகும். இதுவரை வீடு, வாகனம் இல்லாதவர்களுக்கு வீடு வாகன யோகம் உண்டாகும். ஏற்கனவே சொத்து இருப்பவர்களுக்கும் புதிய சொத்துக்கள் சேரும்.

  7ம் பார்வை பலன்கள்:ராசிக்கு 7ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் திருமண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும். மேலும் நின்று போன திருமணங்கள் இனி சுபமாக நடைபெறும். கணவன் மனைவி உறவு மகிழ்வை தரும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். தம்பதிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மாறி புரிதல் உண்டாகும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். புதிய நண்பர்கள், தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. நல்ல புதிய வாடிக்கையாளர்கள் உருவாகுவார்கள். தொழில் கூட்டாளிகளிடையே நல்லிணக்கம். நீடிக்கும். தகுதியும் திறமையும் நிறைந்த புதிய தொழில் பங்குதாரர் கிடைப்பார்கள்.

  9ம் பார்வை பலன்கள்:9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் நாத்திகராக இருந்தவர்களுக்கு கூட தெய்வ வழிபாட்டில் ஆர்வம் மிகும். இது வரை கடவுளே இல்லை என்று கூறியவர்கள் கூட ப்ரபஞ்ச சக்தியை உணர்வார்கள். சாஸ்த்திர ஈடுபாடு ஆன்மீகநாட்டம் ஏற்படும். பலருக்கு மத நம்பிக்கை அதிகரிக்கும். ஒரு சிலர் வேற்று மதத்தில் நாட்டம் ஏற்பட்டு மதம்மாறுவார்கள். அந்நிய மதத்தவர் அல்லது அந்திய மொழி பேசுபவரால் ஆதாயம் உண்டு.குல தெய்வ, பித்ருக்கள் வழிபாட்டில்ஆர்வம் மிகும்.பல தலைமுறையாக பித்ரு தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஜாதகத்தைசரிபார்த்து தில ஹோமம் செய்ய ஏற்ற காலம்.புனித நீராடல், புனித தல யாத்திரை சென்று வர வாய்ப்பு கிடைக்கும்.கோவில் திருப்பணிகள் செய்து மகிழ்வீர்கள்.

  சொந்தமாக கோவில் கட்ட விருப்பம் உள்ளவர்கள் கோவில் கட்ட உகந்த காலம். ஏற்கனவே கோவில் வைத்து இருப்பவர்கள் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யமூலவரின் சக்தி கூடும்.

  அரசியலில் முக்கிய பங்கு, பதவி வகிப்பீர்கள். நீங்கள் விரும்பிய பதவி உங்களைத் தேடி வரும். பட்டங்களும், பதக்கங்களும் வந்து குவியும். எதிர் கட்சியினர் உங்களுக்கு அடங்கி போவார்கள். அரசின் உதவியில்லாமல் பராமரிப்பு இல்லாத கோவில்களுக்கு அரசின் நிதியுதவி கிடைக்க பாடுபடுவீர்கள்.துறவு மனப்பான்மை மிகும்.அரசு வழி ஆதாயம் மிகும் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப தந்தையின் கட்டளைக்கு இணங்குவீர்கள். தந்தை மகன் உறவு சிறக்கும். தந்தை வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு குறையும். பணியாளர்கள் ஒய்வெடுக்க நேரமில்லாது உழைக்க வேண்டியது இருக்கும். பொறுப்புகளும், கடமை உணர்வுகளும் அதிகரிக்கும். பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்தபிரச்சனைகள் தீர்வுக்கு வர வாய்ப்புண்டு.

  குருவின் வக்ர பலன்கள்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு வக்ரம் அடையும் காலத்தில் தொழில் கூட்டாளிகளிடம் எச்சரிக்கையுடன்பேச வேண்டும். நண்பர்களுடன் வீண் வாக்கு வாதம் ஏற்படலாம். கணவன் மனைவி உறவில் கருத்து வேறுபாடு வரும அல்லது தொழில் நிமித்தமான பிரிவைத் தரும். காதல் விவகாரங்கள் ஒத்திப்போடுவது நல்லது.

  பெண்கள்:குடும்ப உறுப்பினர்களிடையேஒற்றுமை பெருகி அன்பும், பாசமும் பெருகக் கூடிய அற்புதமான காலம். உடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் தாய் வழி ஆதாயம் உண்டு.உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் நலனில் நீங்கள் அதிக கவனம்செலுத்தினாலும் இளைய சகோதரர் மட்டும் உங்களுக்கு எதிராகவே செயல்படுவார். 1,5,9ம்மிடங்கள் குருவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் எந்த வழியிலாவது பணத்தை, ஆடம்பரத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

  பரிகாரம்: பிரதோஷ காலங்களில் சிவனுக்கு கரும்புச்சாறு அபிசேகம் செய்து வழிபட பாக்கிய பலம் அதிகரிக்கும்.அமாவாசை நாட்களில் முன்னோர்களை வழிபடவும். பௌர்ணமியில் குல தெய்வத்தை வழிபடவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×