search icon
என் மலர்tooltip icon

  துலாம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

  துலாம்

  ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்8.10.2023 முதல் 25.4.2025 வரை

  துலாம் ராசி நேயர்களே!

  இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், அக்டோபர் 8-ந் தேதி முதல் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அதே நேரம் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ம் இடத்திற்கு கேது வருகிறார். 6-ல் ராகு இருந்து, குரு கேந்திரத்தில் இருப்பதால் 'அஷ்டலட்சுமி யோகம்' உருவாகின்றது.

  ஆறாம் இடத்திற்கு வரும் ராகுவால், தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு இயங்குவீர்கள். கடன்சுமை குறையும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். நினைத்த தொழிலை தொடங்கும் வாய்ப்பு உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவை வந்துசேரும். வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. கொடுக்கல்- வாங்கல்கள் ஒழுங்காகும்.

  உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். பிறருக்காக எடுத்த முயற்சியில் உங்களுக் கும் ஆதாயம் கிடைக்கும். வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். வீண் விரயம் ஏற்படாமல் தடுக்க சுபவிரயங்களை மேற்கொள்ளுங்கள்.

  குரு மற்றும் சனி வக்ர காலம்

  8.10.2023 முதல் 20.12.2023 வரை மேஷ ராசியிலும், 25.9.2024 முதல் 22.1.2025 வரை ரிஷப ராசியிலும் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகைக் கிரகம் என்பதால், இந்த வக்ர காலத்தில் திருமணத் தடை அகலும். கட்டிடம் கட்டும் பணியில் இருந்த தொய்வு நீங்கும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் இழந்த பதவியை மீண்டும் பெறுவர். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாகி, தேவையான சலுகைகளைப் பெறுவீர்கள்.

  8.10.2023 முதல் 24.10.2023 வரை மகர ராசியிலும், 10.7.2024 முதல் 5.11.2024 வரை கும்ப ராசியிலும் சனி வக்ரம் பெறுகிறார். இந்த சனியின் வக்ர காலத்தில் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கலில் குறுக்கீடுகள் ஏற்படலாம். எதையும் துணிந்து செய்ய இயலாது.

  சனிப்பெயர்ச்சி காலம்

  20.12.2023 அன்று கும்ப ராசிக்கு சனிபகவான் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 5-ம் இடத்திற்கு சனி பகவான் செல்வதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறுகின்றது. எனவே செய்தொழில் எதுவாக இருந்தாலும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். தடைபட்டு வந்த காரியங்கள் சிறப்பாக நடைபெறும். எண்ணங்கள் எளிதில் நிறைவேற பிறர் ஒத்துழைப்பு நல்குவர். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

  குருப்பெயர்ச்சி காலம்

  1.5.2024 அன்று ரிஷப ராசிக்கு குரு செல்கிறார். அவர் அங்கிருந்து உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார். எனவே தனவரவு திருப்தி தரும். தடைகள் அகலும். விரய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சுபவிரயங்கள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களை விற்று, புதிய சொத்து வாங்க முன்வருவீர்கள். ஆன்மிக பயணம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

  பெண்களுக்கான பலன்கள்

  இந்த ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு நன்மை தரும் பெயர்ச்சியாகவே அமைகிறது. உடல்நலம் சீராகி, உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கணவன் - மனைவி ஒற்றுமை பலப்படும். குடும்ப விஷயங்களை மூன்றாம் நபரிடம் சொல்ல வேண்டாம். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.

  வளர்ச்சி தரும் வழிபாடு

  ஆறாம் இடத்து ராகுவால் யோகங்கள் அனைத்தும் வந்து சேரவும், பன்னிரண்டாம் இடத்து கேதுவால், பயணங்களில் அதிக நற்பலன் கிடைக்கவும், இல்லத்தில் ஆஞ்ச நேயர் படம் வைத்து அனுமன் கவசம் பாடி வழிபாடு செய்யுங்கள்.

  துலாம்

  ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - 2022

  12.4.2022 முதல் 30.10.2023 வரை

  ஏழில் ராகு/ ஜென்ம கேது

  சுக்ரனின் ஆசி பெற்ற துலாம் ராசியினரே ராசியில் கேதுவும், ஏழாமிடத்தில் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். குரு பகவான் 6ம் இடத்திலும் சனி பகவான் 4, 5ம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார்கள்.

  ஏழாமிட ராகுவின் பொதுபலன்கள்:ஏழாமிடம் என்பது களத்திர ஸ்தானம். கடுமையான தோஷத்தால் திருமணம் தடைபட்டவர்களுக்கு கூட ராகு ஏதாவது கோல்மால் பண்ணி திருமணத்தை நடத்தி விடுவார். சில தம்பதிகளுக்குள் ஈகோ பிரச்சனை ஆரம்பமாகும். அதனால் கருத்து வேறுபாடு சற்று மிகைப்படுத்தலாக உருவெடுக்கும்.

  சில தம்பதிகளுக்கு மூன்றாம் நபரின் குறுக்கீட்டால் பிரிவினை உண்டாகும். சில தம்பதிகள் தொழில் நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் வசிக்கலாம். வாழ்க்கைத் துணை மூலம் அதிகப்படியான பொருள் வரவு உண்டாகும். சில வியாபாரிகள் தந்திரமாக இலவச ஆபர் கொடுத்து வாடிக்கையாளர்களை வசப்படுத்துவார்கள்.

  ராகு மேஷ ராசியில் உள்ள நட்சத்திரப் பாதங்களான கிருத்திகை, பரணி, அசுவினி நட்சத்திரங்களில் மூலம் ராசியை கடக்கிறார்.

  12.4.2022 முதல்14.6.2022 வரை ராகுவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்:சூரியனின் நட்சத்திரமான கிருத்திகை துலாத்திற்கு லாபாதிபதி. வரா கடன்கள் வசூலாகும். பாலிசி முதிர்வுத் தொகை, பங்குச் சந்தை முதலீடு என பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். அடமானத்தில் இருந்த நகைகள் மீண்டு வரும்.

  தொழிலில் இருந்த மந்தநிலை மாறி சூடுபிடிக்கும்.நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாத வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். மூத்த சகோதரருடன் இருந்த பிணக்குகள் மாறும். தொழிலில் நல்ல முன்னேற்றமும் அபரிமிதமான வருமானமும் வரும்.தன வரவு மகிழ்வை தரும். லாபம் ஒன்றுக்கு இரண்டாகும். லாபத்தை மறுமுதலீடாக மாற்றுவீர்கள்.

  பொன், பொருள், ஆபரணச் சேர்க்கையுண்டு. ஆனால் நியமான முறையில் லாபம் வருகிறதா? என்று மட்டும் கேட்கக் கூடாது. ராகுவிற்கு பிடிக்காத இரண்டு வார்த்தைகள் நியாயம், தர்மம். பிடித்த ஒரே வார்த்தை அதர்மம். உத்தியோகத்தில் நிலவிய தடை, தாமதங்கள் சீராகும். என்றோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு பல மடங்காக உயரும். இப்படி ராகுவின் செயல்பாடுகள் வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கும்.

  15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:பரணி சுக்ரனின் நட்சத்திரம். சுக்ரன் துலாத்திற்கு ராசி அதிபதி மற்றும் எட்டாம் அதிபதி என்பதனால் உங்களுக்கு ஏற்படும் நல்லது கெட்டது இரண்டிற்கும் நீங்களே காரணமாக இருப்பீர்கள். நீங்கள் பிறரின் நலத்திற்காக செய்த செயல் கூட உங்களை பதம் பார்க்கும். ஆயுள், ஆரோக்கியம் சிறப்படையும். உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை பெறுபவர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக என்னவென்றே தெரியாத நோய் தாக்கம் இருப்பவர்களுக்கு எந்த வைத்தியம் செய்தால் நோய் பூரணமாக குணமாகும் என்ற புரிதல் ஏற்படும். சட்டம் தொடர்பான பிரச்சனைகளுக்கும் நீதிமன்றத்தால் அலைக்கழிகப்பட்டு மன வேதனை அடைந்தவர்களுக்கும் வழக்கு உங்களுக்கு சாதகமான தீர்ப்பு ஏற்படும்.

  21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்:அசுவினி கேதுவின் நட்சத்திரம். ராசியில் பயணிக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் ராகு சஞ்சரிக்கும் காலம். ஆத்மஞானத்தை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். மன முதிர்ச்சியுடன் விவேகமாக நடந்துகொள்வீர்கள். உங்களின் அனுசரணையான அணுகுமுறை எல்லாரிடமும் நன்மதிப்பைப் பெற்றுத் தரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுபவர்களின் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, கவுரவம் உயரும்.

  ஜனனகால ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் பலமிழந்தவர்களுக்கு தவறான எண்ண அலைகள் மிகுதியாகி இறையுடன் மனம் ஒன்றாது. சாமியை கும்பிட்டு பெரிதாக என்ன சாதித்தோம்; சாமியே கிடையாது' என்ற விரக்தி ஏற்படும்.

  ஜென்ம கேதுவின் பொது பலன்கள்:கேது ஒரு ஆன்மீக கிரகம்.பல ஞானிகள், யோகிகள், தவசீலர்கள் உருவாகக் காரணமாக இருக்கும் கிரகமாகும். ஆழ் மனதில் ஏதாவது ஒரு எண்ணம் ஓடிக் கொண்டே இருக்கும். உங்ளின் செயல்பாடுகள், எண்ணங்களைச் சுத்தப்படுத்தி கேது பகவான் உங்களை பரிசுத்தமானவராக மாற்றுவார். சிலர் மதப்பற்று அதிகமாகும். சிலர் தாடி வளர்த்துக் கொண்டு சந்நியாசி போல் வாழ்வார்கள். சில பெண்கள் உத்திராட்சம் அணிந்து கொண்டு இல்லற சந்தியாசியாக ஆச்சாரத்தை கடைபிடிப்பார்கள்.

  வெகு சிலர் போலிச் சாமியாராக உருவெடுப்பார்கள். சிலர் தொண்டு நிறுவனங்களில் இணைந்து ஆன்மீகப் பணியாற்றுவார்ர்கள். பணம் செல்வாக்கை விரும்பாத கிரகம் கேது என்பதால் பணம், செல்வாக்கு இருந்தாலும் ஆடம்பரத்தை விரும்பாதவராக மாறிவிடுவார்கள்.

  பேராசைபடுவர்களை தீராப் பகை, மீளாக் கடன், தீராத வியதி, மாளாத பிரச்சனைகளில் ஜென்ம கோட்சார கேது சிக்க வைப்பார்.சட்டத்தை மதித்து நியாயமான எண்ணத்துடன் இருப்பவர்களுக்கு பெயர், புகழ், அங்கீகாரம், பணம், அந்தஸ்து அனைத்தையும் கொடுத்து கௌவரவிப்பார். கேது துலாம் ராசியில் உள்ள விசாகம், சுவாதி, சித்திரை நட்சத்திரங்கள் மூலம் தன் பயணத்தை செலுத்துகிறார்.

  12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்: விசாகம் குருவின் நட்சத்திரம். குரு துலாத்திற்கு 3,6ம் அதிபதி. கோட்சாரத்தில் 3 , 6ம் அதிபதி குரு 6ல் ஆட்சி பலம் பெறுவதால் உடன்பிறந்தவர்களின் வெறுப்பை சம்பாதிக்க நேரும். வீடு மாற்றம் செய்ய நேரும். அடிக்கடி அலைச்சல் மிகுந்த பயணம் செய்யக் கூடும். அரசு சார்ந்த ஒப்பந்தங்கள் கை நழுவிப்போகலாம். செவித்திறன் குறைதல், சீழ்வடிதல் போன்ற காது தொடர்பான நோய் பாதிப்பு தோன்றி மறையும். நரம்பு, வாதம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்.புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள். ஒரு கடன் அடைவதற்குள் மறுகடன் உருவாகும் என்பதால் கவனம் தேவை.

  18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்: சுவாதி ராகுவின் நட்சத்திரம். ராசிக்கு 7ல் சஞ்சரிக்கும் ராகுவின் நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கும் காலத்தில் மந்தத்தன்மை, தயக்கம் இருக்கும். சோம்பல், மறதி உருவாகும். உழைக்காமல் உண்ணும் எண்ணம், தேவையற்ற கோபம் வரும். பூர்வீக சொத்து தொடர்பான வம்பு வழக்கு உருவாகும். லக்னத்தில் நிற்கும் கேது பலவிதமான தொழில் ஞானத்தை வழங்குவார். ஏழாமிட ராகு மிகுதியான பொருளாசையைக் கொடுப்பார். அதிர்ஷ்டத்தின்மீது நம்பிக்கை வைத்து வருமானத்தை அதிகரிக்கும் எண்ணம் தோன்றும். அதிர்ஷ்டத்தைத் தேடி லாபத்தை இழக்கநேரும். சிலரின் பூர்வீகச் சொத்து கை நழுவிப் போகும்.

  27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்: சித்திரை செவ்வாயின் நட்சத்திரம் செவ்வாய் துலாத்திற்கு 2,7ம் அதிபதி.சந்தோசமாக வாழும் தம்பதிகளுக்கு பிறரின் குறுக்கீட்டால் சங்கடங்கள் அதிகரிக்கும். ஏற்கனவே பிரிந்து வாழும் தம்பதியினர் மூன்றாம் நபரின் அறிவுரையால் சேர்ந்து வாழத்துவங்குவார்கள். பார்த்தீர்களா கேதுவின் செயல்கள் எப்படி விந்தையாக இருக்கிறது. தொழில் ஞானம், உழைக்கும் ஆர்வம் நிறைந்த பழைய கூட்டாளியை கழட்டி விடுவார்.

  குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதில் கில்லாடியான ஒரு புதிய தொழில் கூட்டாளியை உங்களுடன் கோர்த்து விடுவார். என்ன ஒரு வில்லத்தனம் ? ஒரு சிலருக்கு வேற்று மொழி கற்பதில் ஆர்வம் பிறக்கும். வலது கண் தொடர்பான சிகிச்சைக்கு ஏற்ற காலம்.

  ஆக இந்த ராகு, கேது பெயர்ச்சியில் சில மன சங்கடங்கள் இருந்தாலும் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது என்பதை உறுதியாக கூறலாம். ஆட்சி பலம் பெறும் சனியும், குருவும் உங்களுக்கு பக்க பலமாக இருக்கிறார் என்பதால் இறைவழிபாடு உங்களை கவசமாக காக்கும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×