என் மலர்
துலாம்
2025 ஆனி மாத ராசிபலன்
காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கும் துலாம் ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். மேலும் உங்கள் ராசியையும் அவர் பார்க்கின்றார். எனவே இம்மாதம் தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். விவகாரங்கள் நல்ல முடிவிற்கு வரும். வருமானம் உயரும். கொடுக்கல் - வாங்கல்களை இப்பொழுது சரிசெய்து கொள்வீர்கள். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். எடுத்த முயற்சிகளில் இதுவரை இருந்த தடை அகலும். சுபவிரயங்கள் அதிகரிக்கும் நேரமிது.
கடக - புதன்
ஆனி மாதம் 8-ந் தேதி கடக ராசிக்குப் புதன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். போட்டிக்கடை வைத்தோர் விலகுவர். புதிய முதலீடுகள் செய்து தொழிலை விரிவுசெய்ய வேண்டும் என்ற எண்ணம் கைகூடும். இதுவரை வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை இப்பொழுது சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றலாமா என்று சிந்திப்பீர்கள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அதில் உள்ள நுணுக்கங்களை கற்றுக்கொள்வர். சுயமாகத் தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். நட்பால் நன்மை கிடைக்கும் நேரமிது. ஒருசிலருக்கு நீண்டதூரப் பயணங்கள் உருவாகும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.
ரிஷப - சுக்ரன்
ஆனி 15-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் இருப்பவர் சுக்ரன். அவர் அஷ்டம ஸ்தானத்திற்கு வருவதால் பயப்பட வேண்டாம். எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். அசுர குரு மறைவிடத்திற்கு வரும்பொழுது உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்கும் முயற்சி கைகூடும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். அயல்நாடு சென்று பணிபுரிய வேண்டுமென்று நினைத்தவர்களுக்கு அது நிறைவேறும். உற்சாகத்தோடு பணிபுரியும் நேரமிது.
செவ்வாய் - சனி பார்வை
மாதம் முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனியை, சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் பார்க்கின்றார். உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவர் மீது செவ்வாய் பார்வை பதிவது அவ்வளவு நல்லதல்ல. எதிர்மறைச் சிந்தனைகள் அதிகரிக்கும். லாபத்தைக் காட்டிலும் விரயங்கள் கூடும். ஆரோக்கியத் தொல்லைகளும், ரண சிகிச்சைகளும் ஏற்படலாம். மூட்டுவலி, முழங்கால் வலி போன்றவைகள் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வீண் பழிகளுக்கு ஆளாக நேரிடும். இக்காலத்தில் சனி மற்றும் அங்காரக வழிபாடு துயரத்தை போக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு வருமானம் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு தானாக வந்துசேரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவ - மாணவியர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு திருப்தி தரும். பெண்களுக்கு சுபகாரியப் பேச்சு முடிவாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.
இம்மாதம் அபிராமி அம்மன் வழிபாடு அனுகூலம் தரும்.






