என் மலர்
துலாம்
2025 சித்திரை மாத ராசிபலன்
நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் துலாம் ராசி நேயர்களே!
விசுவாவசு வருட புத்தாண்டின் சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அதுமட்டுமல்லாமல் குரு வீட்டில் சகாய ஸ்தானத்தில் பரிவர்த்தனை யோகமும் பெற்றிருக்கிறார். எனவே இம்மாதம் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆயினும் அஷ்டமத்தில் குரு இருந்து சஞ்சரிப்பதால் அதிக விரயங்கள் உருவாகும். வரவு ஒரு மடங்கு வந்தால் விரயம் இரு மடங்காகும். இதுபோன்ற நேரங்களில் சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது.
குரு - சுக்ர பரிவர்த்தனை
சித்திரை 1-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை குரு - சுக்ர பரிவர்த்தனை இருக்கிறது. உங்கள் ராசிக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பகை கிரகமான குருவின் வீட்டில் பரிவர்த்தனை பெறும் பொழுது, நினைக்க இயலாத நிகழ்ச்சிகள் நடைபெறும். திடீரென பிள்ளைகளின் சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும். வீடு மாற்றம், நாடு மாற்றம் விருப்பம் போல அமையும். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்தி ஆரோக்கியத்தை சீராக்கிக் கொள்வீர்கள்.
கும்ப- ராகு, சிம்ம -கேது
சித்திரை 13-ந் தேதி கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் ராகுவும், லாப ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும். முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்றோ, பணிபுரிய வேண்டும் என்றோ முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும்.
மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள். பொது வாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். ஆயினும் அனுகூல தலங்களுக்குச் சென்று முறையாக சர்ப்பக் கிரக வழிபாடுகளை மேற்கொண்டால் தடைகள் தானாக விலகும்.
மேஷ - புதன் சஞ்சாரம்
சித்திரை 17-ந் தேதி மேஷ ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், சப்தம ஸ்தானத்திற்கு வருவது நன்மைதான். அங்குள்ள சூரியனுடன் இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். கணவனும், மனைவியும் வேறு வேறு இடங்களில் பணிபுரிந்து கொண்டிருந்தால், இப்போது இடமாற்றம் கிடைத்து ஒரே இடத்தில் பணிபுரிய வாய்ப்பு உருவாகும். கல்யாண முயற்சிகள் கைகூடும். கட்டிடம் கட்டி முடித்து கிரக பிரவேசம் வைப்பது போன்ற வாய்ப்புகள் அமையும்.
மிதுன - குரு சஞ்சாரம்
சித்திரை 28-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு செல்கிறார். அவரது பார்வை பலனால் உங்கள் ராசி புனிதமடைகிறது. எனவே தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் மனக்கசப்பு மாறி மகிழ்ச்சியோடு உதவிசெய்வர். கொடுத்த பணம் குறிப்பிட்டபடி வந்து சேரும். உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு இயங்குவீர்கள். வரன்கள் வாசல்தேடி வரும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்களும் வரும். நல்ல சந்தர்ப்பங்களை சந்திக்கும் நேரம் இது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு அதிகாரம், அந்தஸ்து கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புதிய பாதை புலப்படும். பெண்களுக்கு சுபச் செய்திகள் வந்து சேரும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஏப்ரல்: 15, 16, 17, 22, 23, மே: 1, 2, 6, 7, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.






