என் மலர்

  சிம்மம் - ஆண்டு பலன் - 2022

  கடகம்

  ஆங்கில ஆண்டு பலன் - 2022

  சூரியனை ராசி நாதனாகக் கொண்ட சிம்ம ராசி வாசகர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் உங்களுக்கு ராஜயோக வாழ்க்கையைத் தர உள்ளது. வருட கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. இது வரை பொது நலமுடன் ஊருக்காக உழைத்த உங்களுக்கு மனைவி, மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அதற்கான வாய்ப்பும், திட்டங்களும், சந்தர்பங்களும் தானே அமையும். வருங்காலம் பற்றிய நம்பிக்கையும் தைரியமும் பெருகும். செல்வாக்கும், சொல்வாக்கும் உண்டாகும். ஓடி ஓளிந்த நிலையில் இருந்து மாறி பூர்வ புண்ணிய பலத்தால் நிச்சயமாக அனைத்து விதமான நற்பலன்களும் இந்த புத்தாண்டில் காண முடியும். இனி புத்தாண்டிற்கான விரிவான பலன்களை காணலாம்.

  குரு சஞ்சார பலன்: ஆண்டின் தொடக்கத்தில் 13, ஏப்ரல் 2022 வரை குருபகவான் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடந்த காலத்தில் உங்களை பணவசதியின்மையால் ஏளனப்படுத்தியவர்கள், தேவைக்கு பயன்படுத்தியவர்கள் உங்களின் அருமை பெருமையை உணர்வார்கள். 7ல் உள்ள குருவால் திருமண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும். நின்று போன திருமணங்கள் இனி சுபமாக நடைபெறும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். சிலருக்கு காதல் மலரும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்.

  தம்பதியினர் தொழில் நிமித்தமாகவோ வேறு ஏதேனும் காரணமாகவோ வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் இப்பொழுது ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்துவார்கள். மனக்கசப்பு மாறும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைக்கலாம். பழைய கூட்டாளிகள் விலகலாம். நண்பர்களுடன் விருந்து உபசாரங்களில் கலந்து கொள் ளும் வாய்ப்பு ஏற்படும். இன்பச் சுற்றுலா சென்று வர வாய்ப்பு ஏற்படும்.

  ஏப்ரல் 13, 2022ல் குரு பெயர்ச்சியாகி அஷ்டம் ஸ்தானமாகிய மீனத்திற்கு செல்லும் போது சில பழைய பிரச்சனைகள் தலை தூக்கும். சிலருக்கு தொழில் விருத்தியால் அளவிற்கு அதிகமான கடன் உருவாகலாம். வெகு சிலர் கடனுக்காக வம்பு வழக்கை சந்திக்க நேரும். சிலரின் குழந்தை களுக்கு ஆரோக்கிய குறைபாடு உண்டாகும். சிலருக்கு குழந்தைகளால் மன வேதனை உண்டாகும். சிலர் தொழில் உத்தியோக நிமித்தமாக வெளியூர், வெளிநாடு செல்லலாம். சிலருக்கு பங்காளிகளால் பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்கு உருவாகலாம்.

  அனைத்து செயல்களும் இழுபறியாக இருக்கும். ஒரு கடன் வாங்கி மற்றொரு கடனை அடைப்பீர்கள். சிம்ம ராசியினர் நம்பிக்கை தளராமல் தேவையற்ற பேச்சை தவிர்த்தால் இந்த குருப்பெயர்ச்சியை எளிதாக கடக்க முடியும். இந்த காலகட்டத்தில் ஆறுதலான விசயம் என்னவென்றால் உறவுகளின் ஆதரவு குறைந்தாலும் அறியாத அந்நிய புதிய உறவுகளால், புதிய நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

  சனியின் சஞ்சார பலன்கள்: ஆண்டு முழுவதும் 6ம் அதிபதி சனி 6ல் ஆட்சி பலம் பெறுகிறார். மறைவு ஸ்தான அதிபதிகள் வலுப்பெறக்கூடாது. கெட்டவன் கெட்டால் தான் ராஜ யோகம். ருண, ரோக, சத்ரு ஸ்தானதிபதி சனி வலுப்பெறுவதால் ருணம், ரோகம், சத்ரு இந்த மூன்றும் உங்களை ஆட்சி செய்யப் போகிறது.

  அதனால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கேட்ட இடத்திலும் கேட்காத இடத்திலும் கூட கடன் கிடைக்கும். வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்க உங்கள் வீட்டு வாசலில் காத்து இருப்பார்கள். இயன்றவரை கடன் வாங்காமல் இருந்தால் அடுத்த சனிப்பெயர்ச்சிக்கு முன் கடன் இல்லாத வாழ்வு உறுதி. அதே நேரத்தில் நோய் தாக்கமும் மிகுதியாக இருக்கும். பரம்பரை வியாதிகள் உங்களை ஆட்சி செய்ய ஆரம்பமாகும். வாயுத் தொல்லை, வாதம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய், இருதயம், வயிறு தொடர்பான நோய்கள் மிகும். சிலருக்கு நோயின் தன்மை புரியாது. பலருக்கு நோய் முற்றிய பிறகு நோயின் தன்மை புரியும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும்.

  26. 2. 2022 முதல் 6. 4. 2022 வரை சனி பகவானுடன் 4,9ம் அதிபதியான செவ்வாய் 6ம் அதிபதி சனியுடன் 6ம் இடத்தில் இணைகிறார்கள்.அதீத கடனும் மிகைப்படுத்தலான விரையமும் உண்டாகும். விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடன் பட்டு சொந்த வீடு, வாகன கனவை நிறைவேற்றுவீர்கள். வீடு கட்டும் பணியில் பட்ஜெட் எகிறும். சிலருக்கு வீடு, வாகனம் பழுதாகி அதிக செலவு வைக்கும் அல்லது மின்சார உபகரணங்களான பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி புதியதாக வாங்க நேரும்.

  அசையாச் சொத்தில் உள்ள குடியிருப்பு தாரர்களால் தொந்தரவு வரும் அல்லது குடியிருப்புதாரர்கள் மாறலாம். பூர்வீகச் சொத்தால் உடன் பிறந்தவர்களுடன் வம்பு, வழக்கு, பகை உருவாகும். சிலருக்கு பூர்வகச் சொத்து கை விட்டுப் போகும். ரியல் எஸ்டேட் துறையினருக்கு வாடிக்கையாளர்களால் வம்பு, வழக்கு உருவாகும். தாய், தந்தையின் ஆரோக்யம் சீராகும். கூட்டுக் குடும்பமாக இருந்தவர்கள் பிரிந்து தனிக்குடித்தனம் செல்ல நேரும். சிலர் பூர்வீகத்தை விட்டு பிழைப்புக்காக வெளியூர் செல்லநேரும்.

  ராகு/கேது சஞ்சார பலன்: பத்தில் ராகு நான்கில் கேது இருப்பதால் தாய்க்கு ஆரோக்கிய குறைபாடு நீங்கும். தாய், தந்தை கருத்து வேறுபாடு அகலும்.ராசி அதிபதி சூரியனின் நட்சத்திரத்தில் ராசிக்கு10ல் கோட்சார ராகு சஞ்சாரம் செய்கிறார். தொழில் தொடர்பான மன உளைச்சல் நீங்கும். தொழிலில் வளர்ச்சியும் பெரும் ஏற்றத்தையும் லாபத்தை கொடுத்து திணறச் செய்வார். சூரியனும் ராகுவும் கடும் பகை கிரகம் என்பதால் இதுவரை நியாயம் தர்மத்திற்கு கட்டுப்பட்டு தொழில் நடத்தியவர்களை கூட தொழில் தர்மத்தை கடைபிடிக்க விடமாட்டார். பண வாசனையின் இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆவல் மிகுதியாகும். தனவரவு மன மகிழ்வை தரும். பல்வேறு தொழில் தந்திரங்களை கற்பீர்கள்.

  ஆயுள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உடல் உபாதைகள் கட்டுப்படும். தனிமையில் காலம் தள்ளியவர்களுக்கு பொழுதை கழிக்க நல்ல நட்பு கிடைக்கும். பய உணர்வு நீங்கும். தைரியம், தெம்பு ஏற்படும். தன்னை அழகு படுத்துவதில் ஆர்வம் அதிகரிக்கும். தடைபட்ட காரியங்கள் தாமாகவே நடக்கும். உங்களை ஏளனம் செய்தவர்கள் மதிப்பு மரியாதை தருவார்கள். உங்களை துரத்திய அசிங்கம், அவமானம், அதிர்ஷ்டக் குறைபாடு இருந்த இடம் தெரியாது. அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும்.மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும்.

  குடும்ப உறுப்பினர்களிடையே இணக்கமான சூழ்நிலை நிலவும் ஏப்ரல் 12, 2022ல் ராகு/கேது பெயர்ச்சிக்குப் பிறகு 3ல் கேதுவும் 9ல் ராகுவும் சஞ்சாரம் செய்கிறார்கள். ஆன்ம பலம் பெருகும். சூரியனே ஆத்மகாரகன். தந்தைக்கும் காரகனாவார். எண்ணங்கள் மற்றும் முன்ஜென்ம பூர்வ புண்ணியத்துக்கு காரகன் சூரியனே என்பதால் முன்னோர்களில் நல் ஆசிகள் உங்களை சிறப்பாக வழி நடத்தும். விபரீத ராஜ யோகம் உண்டாகும்.

  சில குழந்தைகள் தந்தையை பிரிந்து தாத்தா வீட்டிற்கு செல்ல நேரும் அல்லது தந்தை குறுகிய காலத்திற்கு தொழில் நிமித்தம் அல்லது ஏதேனும் காரணத்திற்காக தந்தை குழந்தையை பிரிந்து வாழ நேரும். கற்பனையில், கனவில் வாழும் நிலை ஏற்படும். உடன் பிறந்தவர்களின் மனஸ்தாபம் நீதி மன்றம் வரைச்செல்லும். உறவுகளுக்காகசூழ்நிலைக் கைதியாக வாழும் நிலை இருக்கும். இன்னல்களை தவிர்க்க முன்னோர்களின் முறையான வழிபாடு அவசியம்.

  திருமணம்: ஏழாம் அதிபதி சனி கோட்சாரத்தில் 6ல் ஆட்சி பெற்று இருப்பதால் வெகு சிலருக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தடை இருக்கலாம். தற்போதைய கோட்சார குரு கும்பத்தில் இருப்பதால் ஏப்ரல் 2022க்குள் திருமணம் நிச்சயமாகிவிடும். பலருக்கு விருப்ப விவகாகமாகவோ, நெருங்கிய உறவுகளிலோ திருமணம் நடக்கும்.

  பெண்கள்: பெண்களுக்கு சுமாரான நேரம். பெண்களுக்கு மாமனார், மாமியார் நாத்தனார் வகையில் அதிக தொந்தரவு உண்டாகும். வயது முதிர்ந்த பெண்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படும்.முக்கிய ஆவணங்கள், நகைகள் கை மறதியாகவைத்துவிடுவீர்கள்.காது கேளாமை அல்லது ஞாபக சக்தி குறைவு உண்டாகும்.தந்தையின் ஆரோக்கிய பாதிப்பு மன வருத்தத்தை தரும்.

  விவசாயிகள்: வட்டிக்கு வட்டி கட்டி சமாளிக்க முடியாத கடன் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு கடன் தொகை தள்ளுபடியாகும். சிறிய விளை நிலத்தையும் அடமானம் வைத்து விட்டு வாழ வழி தெரியாமல் தடுமாறிய விவசாயிகள் கடன் பிரச்சனையிலிருந்தும் மீண்டு வருவீர்கள்.

  உத்தியோகஸ்தர்கள்:தற்காலிக பணியில் இருப்பவர்களுக்கு நிரந்தர பணி கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வு கிட்டும். அரசுப் பணிக்கு தேர்வு எழுதும் சிம்ம ராசியினருக்கு பெற்றி கிடைக்கும். அலுவலகமே வியக்கும் வகையில் உங்கள் திறமைகள் வெளிப்படும்.

  முதலீட்டாளர்கள் / வியாபாரிகள்: சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அபாரமான வளர்ச்சி இருக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். தொழிலுக்கு தேவையான பணப்புழக்கம் சரளமாக இருக்கும். கடனில் தத்தளித்துக் கொண்டு இருந்த தொழில் நிறுவனங்கள் கடனில் இருந்து மீளும் வழி புலப்படும்.

  அரசியல்வாதிகள்: அரசியல் பிரமுகர்கள் பதவியை தக்க வைப்பதில் சிரமம் இருக்கும். சிலர் அரசியலில் கட்சிவிட்டு கட்சி மாறி தன் எதிர்காலத்தை அதிர்ஷ்டமாக்கி தக்க வைத்துக் கொள்ளலாம். கௌரவம், அந்தஸ்தை நிலை நிறுத்த போரட நேரும். எந்தப் பிரச்சனையையும் நேருக்கு நேர் நின்று போரிட்டு சமாளிப்பீர்கள். தன்னை நம்பி வருபவர்களுக்கு யாரும் சொல்ல முடியாதபடி நியாய தீர்ப்பு கிடைக்க பாடுபடுவீர்கள்.

  மாணவர்கள்: உயர் கல்விக்காக மாணவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பள்ளி, கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ, மாணவிகள் மீண்டும் படிப்பைத் தொடரும் வாய்ப்பு உண்டாகும். தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாணவ, மாணவிகள் அதிகம் சிரமம் எடுக்க வேண்டும்.

  மகம்: சுறுசுறுப்போடு செயல்பட்டு பெயர், புகழ், பெருமை அடைய முடியும். பெயர் புகழ் உண்டாகும். கோவில் பிரார்த்தனைகளை செய்து முடிப்பீர்கள். சிலர் வீடு மாற்றம் செய்ய நேரும். நிம்மதியை அதி தரிக்க கால பைரவரை வணங்குவது சிறப்பு.

  பூரம்: திட்டமிட்ட காரியம் கைகூடும். பிரிந்த உறவுகள் இணைவார்கள் விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன் செய்வார்கள். மறைமுக எதிர்ப்புகள் குறைந்து தங்கு தடையில்லாத காரிய அனுகூலம் உண்டாகும். ஆண்டாள் வழிபாடு செய்வதால் சுப பலன்கள் மிகுதியாகும்.

  உத்திரம் 1ம் பாதம்: அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகி கடன் குறையும். ஞாயிற்று கிழமை ஜேஷ்டா தேவியை வழிபட இன்னல்கள் நீங்கும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×