என் மலர்
சிம்மம்
2026 தை மாத ராசிபலன்
சிம்ம ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ஜென்மத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். 6-ம் இடத்தில் சூரியன், செவ்வாய், சுக்ரன், புதன் ஆகிய கிரகங்கள் இருப்பதால் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வாழ்க்கை அமையும். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். வீடு, இடம் வாங்குவதன் மூலமாகவோ, மணவிழா, மணிவிழா போன்றவை நடத்துவதன் மூலமாகவோ, சுப விரயங்களை மேற்கொண்டால் வீண் விரயங்களில் இருந்து தப்பிக்க இயலும். சனியின் பார்வை இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெற்றிருக்கும் இந்த நேரம், பிள்ளைகளால் பிரச்சனைகள் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கும். காரியத்திலும் தாமதம் ஏற்படும். உறவினர்களுக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் முடியலாம். பிள்ளைகளாலும் பிரச்சனைகள் வந்து அலைமோதும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத மாற்றங்கள் வந்து மனக்கிலேசத்தை உருவாக்கும். வியாபாரத்தில் நண்பர்களால் இழப்புகள் ஏற்படலாம். குருவின் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகிறது. பஞ்சம ஸ்தானம் குரு வீடு. குரு வீட்டை குருவே பார்ப்பது யோகம்தான். பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் பயனாக கிடைக்க வேண்டிய பலன்கள் இப்பொழுது கிடைக்கும். இருந்தாலும் மனக்கசப்பு தரும் தகவல்களும் வந்துசேரும். நண்பர்களை நம்பிப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். சில காரியங்கள் தாமதமாக வந்தாலும் முடிவில் நல்லவிதமாக முடிவடையும். இக்காலத்தில் சுபச்செலவுகள் செய்வதன் மூலம் தேவையற்ற விரயங்களை தவிர்க்க இயலும். பஞ்சாயத்துக்களில் இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். 'வியாபாரத்தில் பழைய கூட்டாளிகளை விலக்கிவிட்டு, புதிய கூட்டாளிகளைச் சேர்க்கலாமா?' என்று சிந்திப்பீர்கள்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். அவர் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, `வாழ்க்கைத் துணைக்கு வேலை இல்லையே' என்ற கவலை அகலும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டினால் நல்லபடி அமையும். பொதுவாக நினைத்தது நிறைவேறும் நேரம் இது. மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு திருப்தி தரும். அவர்களது இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்வுகளை முன்னின்று நடத்துவீர்கள். முக்கியப் புள்ளிகளின் வரிசையில் உங்கள் பெயர் இடம்பெறும் வண்ணம் நல்ல காரியமொன்றை செய்து முடிப்பீர்கள்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன் 7.2.2026 அன்று கும்ப ராசிக்கு செல்கிறார். இக்காலத்தில் உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். அவர்கள் மூலமாக ஒருசில நல்ல காரியங்கள் நடைபெறும். 'பழைய தொழிலை பைசல் செய்துவிட்டு புதிய தொழில் தொடங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே என்று, வேறு இடத்திற்கு மாறும் எண்ணத்தை உறுதிப்படுத்திக்கொள்வர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். கலைஞர்களுக்கு பெருமை சேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை. பெண்களுக்கு ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சுபச்செலவுகள் அதிகரிக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 15, 26, 27, 30, 31, பிப்ரவரி: 5, 6, 10, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.






