என் மலர்
சிம்மம்
2025 மாசி மாத ராசிபலன்
எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது முடித்துக் காட்டும் சிம்ம ராசி நேயர்களே!
மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன், தன - லாபாதிபதி புதனோடு இணைந்திருப்பதால், தனவரவு தாராளமாக வந்து கொண்டேயிருக்கும். அதே நேரம் அவர்களோடு சனியும் சேர்ந்திருப்பதால் ஒருசில சமயங்களில் தடுமாற்றமும் ஏற்படலாம். போட்டிகளுக்கு மத்தியில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டாலும் மன அமைதி குறையும்.
கண்டகச் சனியின் ஆதிக்கம் இருப்பதால், எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாமல் போகலாம். 10-ல் இருக்கும் குருவால் பதவி மாற்றம், இடமாற்றம் ஆகியவை திருப்தி தரும் விதம் அமையும். செவ்வாய் வக்ர நிவர்த்திக்குப் பின்னால் உங்கள் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும்.
சூரியன் - சனி சேர்க்கை
இந்த மாதம் முழுவதும் கும்ப ராசியில் சூரியன் - சனி சேர்க்கை ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு அதிபதியான சூரியன், சனியோடு சேர்ந்து சஞ்சரிக்கும் பொழுது மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். பொருளாதாரம் ஸ்தம்பித்து நிற்கலாம். புதிய முயற்சிகளில் தடை, தாமதம் அதிகரிக்கும். உடல்நலத்தில் கை வலி, கால் வலி, கழுத்து வலி என்று, ஏதாவது ஒரு தொல்லை ஏற்பட்டு மருத்துவச் செலவை அதிகரிக்க வைக்கும்.
குடும்பத்தில் மீண்டும், மீண்டும் பிரச்சினைகள் உருவாகும். உச்சரிக்கும் சொற்களில் உஷாராக இருக்க வேண்டிய நேரம் இது. பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சி குறையும். சூரியன் மற்றும் சனிக்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.
செவ்வாய் வக்ர நிவர்த்தி
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மாசி 9-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய். அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவற்றிற்காக எடுத்த முயற்சி கைகூடும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினை அகலும்.
அதிகார வர்க்கத்தினர்களின் ஆதரவோடு, புதிய பாதையில் பயணிப்பீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு இப்பொழுது வரலாம். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சேரலாம். வழக்குகள் சாதகமாக அமையும். இக்காலத்தில் எல்லா வழிகளிலும் நன்மைகள் கிடைக்கும்.
மீன - புதன் சஞ்சாரம்
மாசி 14-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு தன - லாபாதிபதியான புதன் நீச்சம்பெறுவது அவ்வளவு நல்லதல்ல. கொடுக்கல் - வாங்கலில் சிக்கல்களும், சிரமங்களும் வரலாம். ஒரு சாண் ஏறினால், ஒரு முழம் வழுக்கும் என்ற நிலை உருவாகும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் திடீரென விரயங்கள் அதிகரிக்கும்.
வெளிநாடு சென்றவர்கள், தாய்நாடு திரும்புவதில் தாமதம் ஏற்படலாம். மாமன், மைத்துனர் வழியில் மனக்கசப்பு தரும் தகவல் ஏற்படலாம். விஷ்ணுவிற்குரிய சிறப்பு ஆலயங் களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு குறுக்கீடுகள் அகலும்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நெருக்கடி நிலை மாறும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு பணிபுரியும் இடத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். சுபவிரயங்களைச் செய்வதன் மூலம் வீண் விரயங்களில் இருந்து விடுபட இயலும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
பிப்ரவரி: 16, 17, 20, 21, மார்ச்: 4, 5, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.






