என் மலர்
மிதுனம்
2026 புத்தாண்டு ராசிபலன்
எதிலும் வெற்றி வாகை சூடும் மிதுன ராசியினரே துவங்கப் போகும் 2026 ஆம் ஆண்டு துக்கம், துயரம், சங்கடங்கள் விலகும் ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள். உழைப்பிற்கான உன்னத பலனை அடையக் கூடிய அற்புதமான வருடம்.எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் கூடும். உங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய சிறப்பான சந்தர்ப்பங்கள் கிடைக்கும். உங்களுக்குள் மறைந்து கிடந்த திறமைகளை உணரப்போகிறீர்கள். பெயர், புகழுடன் வாழும் அமைப்பு உண்டாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். புத்திக் கூர்மை அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய பய உணர்வு நீங்கும். திட்டமிட்டு செயல்பட பணம், புகழ், அந்தஸ்து, கவுரவ பதவி, பதவி உயர்வு போன்ற நியாயமான ஆசைகள் அனைத்தும் ஈடேறும்.
குருவின் சஞ்சார பலன்கள்
ஆண்டின் துவக்கத்தில் ராசியில் இருக்கும் குரு பகவான் 2.6.2026 முதல் தனம் வாக்கு குடும்பஸ்தானத்திற்கு செல்கிறார். 2026 ஆம் ஆண்டில் பொருளாதார மேன்மை அடையக்கூடிய ராசிகளில் மிதுன ராசியும் ஒன்றாகும். முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெறுவீர்கள். ஆண்டு முழுவதும் பொருளாதாரத்தில் மேன்மையான பலன்கள் இருக்கும்.கமிஷன் அடிப்படையான தொழில்கள் பேச்சை மூலமாகக் கொண்ட தொழில்கள் துவங்குவதற்கு இது நல்ல காலமாக இருக்கும். பணவரவு சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கடன் நெருக்கடிகள் சற்று குறையும். வாக்கு வன்மையால், பண பலத்தால் விரும்பியதை சாதித்துக் கொள்வீர்கள். பங்கு வர்த்தகர்களுக்கு மிகச் சாதகமான காலம். அரசாங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய பணிமாற்றம் கிடைக்கும்.
சிலருக்கு பணிக் காலம் முடிந்தப் பிறகும் பதவி நீடிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும். பகைமை பாராட்டிய உறவுகள் தற்போது பக்க பலமாக இருப்பார்கள். கணவன் மனைவி ஊடல் கூடலாக மாறும். இறைவழிபாட்டால் மகிழ்ச்சி உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் நிலவிய மனக்கசப்பு மாறும். பழைய வீட்டைப் புதுப்பிப்பீர்கள். பொழுது போக்கான விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.பிள்ளைகளின் திருமணம், கல்வி போன்ற சுப நிகழ்விற்கு எதிர்பார்த்திருந்த தொகை கிடைத்து பணவரவு சரளமாகும்.
சனியின் சஞ்சார பலன்கள்
மிதுன ராசிக்கு 8,9-ம் அதிபதியான சனி பகவான் கோட்சாரத்தில் ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இந்த ஆண்டு முழுவதும் அவர் தொழில் ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பார். தொழில், உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து படிப்படியான முன்னேற்றம் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு விண்ணப்பித்த கடன், பண உதவிகள் கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். சிலர் புதிய வேலை வாய்ப்பிற்காக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். அரசு உத்தியோக முயற்சி கைகூடும்.எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு சமூக அந்தஸ்து உயரும் அற்புதமான நேரம்.
பிறருக்கு உதவுவதில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகன யோகம், சொத்து மதிப்பு உயர்தல், தொழில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்பு என்று எல்லாவிதமான நன்மைகளையும் அடைவீர்கள். குடும்ப உறவுகளின் அனுசரனையால் அனைத்து பிரச்சனைகளும் கானல் நீராக மறையும்.சிலரது காதல் பிரிவினையில் முடியும். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட இடையூறுகள் குறையும்.தாத்தா பாட்டியை சந்தித்து நல்லாசி பெறுவீர்கள்.
ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்
2026-ம் ஆண்டில் கேது பகவான் 3-ம் மிடமான வெற்றி ஸ்தானத்திலும் ராகு பகவான் 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார்கள். ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதம் 5ம் நாள் கேது பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கும் ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கும் பெயற்சியாகிறார்கள்.ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும். எனவே தகுந்த ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவுகளை எடுப்பது நல்லது. பூர்வீகச் சொத்தில் சித்தப்பா மற்றும் மூத்த சகோதரத்தால் ஏற்பட்ட குழப்பங்கள் முடிவிற்கு வரும். தந்தையுடன் சுமாரான உறவே இருக்கும். பணம் சம்பாதிக்கும் சிந்தனையுடனே இருப்பீர்கள். குழந்தை பாக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் வைத்தியத்தில் சீராகும்.
பிள்ளைகளின் திருமணம், குழந்தை பாக்கியம், உத்தியோக, தொழில் அனுக்கிரகம் மன நிம்மதியைத் தரும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். சிலருக்கு நிலம், வீடு போன்ற சொத்துச் சேர்க்கை உண்டாகும். கை,கால், மூட்டு வலியால் ஏற்பட்ட அவதியிலிருந்து விடுதலை உண்டாகும்.சிலர் குறுக்கு வழியில் அதிர்ஷ்டத்தை தேடி அலைவார்கள். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு சமூக அந்தஸ்த்தை நிலைப்படுத்தும் கவுரவப் பதவிகள் கிடைக்கும். தியாக மனப்பான்மை மிகுதியாகும்.
மிருகசீரிஷம் 3, 4
அனைத்து விதமான செயல்களிலும் அனுகூலமான பலன் உண்டாகும் வருடம். மகிச்ழ்சியான நிம்மதியான மன நிலையில் இருப்பீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும்.கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.நெருக்கடியாக இருந்த பிரச்சனைகள் நீங்கும். உங்கள் வாக்கிற்கு மதிப்பும், மரியாதையும் உண்டாகும். ஆசிரியர் பணி மற்றும் பேச்சை மூலதனமாக கொண்டவர்களுக்கு மேன்மை உண்டாகும். பல வழிகளில் வருமானம் வந்து மனதை மகிழ்விக்கும். பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும். தாய் வழி உறவுகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை செலுத்துவீர்கள். நிதி நெருக்கடிகள் நீங்கும். அதே வேளையில் சுபச்செலவுகளும் அதிகமாகும். தடைபட்ட சுப காரியங்களும் முக்கிய பணிகளும் சுலபமாக நடந்து முடியும். விருப்ப திருமணத்திற்கு தந்தையின் ஆதரவு கிடைக்கும். வீடு, வாகன யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். மறு திருமணத்தால் ஏற்பட்ட மனச் சங்கடம் நீங்கும். சொந்த வாழ்க்கையை விட பொது வாழ்வில் நாட்டம் அதிகரிக்கும்.விஷ்ணு காயத்திரி படிப்பது நல்லது.
திருவாதிரை
விரும்பிய மாற்றம் தேடி வரும் வருடம். மனதும் உடலும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கும். திடீர் ஜாக்பாட் மூலம் பண வருவாய் அதிகரிக்கும். பணவரத்து திருப்தி தரும். தடைபட்ட பணவரவு சீராகும். வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்தவர்கள் வீடு தேடி வந்து பணத்தை கொடுப்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் இணையும் வாய்ப்பு உள்ளது.உடன் பிறந்தவர்கள், பங்காளிகளிடம் அனுசரித்துச் சென்றால் பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
ஒரு பெரிய பணம் சொத்து விற்பனையில் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வுகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு உள்ளது.பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் நிலவிய அசவுகரியங்கள் நீங்கும்.தொழில் வேலையில் சில இடர்கள் வந்தாலும் அதை பொருட்டாக மதிக்காமல் முன்னேறுவீர்கள். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். நன்மையும் தீமையும் கலந்த வருடமாகவே இருக்கும் என்பதால் ஒரு செயலில் இறங்கும் முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். தினமும் நடராஜரை வழிபடுவதால் நன்மைகள் கூடும்.
புனர்பூசம் 1,2,3
மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இது மிக மிக யோகமான காலம் என்றால் அது மிகைப்படுத்தலாகாது. எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். குலத் தொழில் செய்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி பல மடங்காகும்.தொழிலில் பிறர் ஆச்சரியப்படும் வகையில் கணிசமான லாபம் கிடைக்கும்.
சட்ட ரீதியான நெருக்கடிகள் நீங்கும். கடனாக கொடுத்திருந்த பணம் திரும்ப கிடைக்கும். சிலருக்கு அத்தை அல்லது சித்தியின் மூலம் அதிர்ஷ்ட சொத்து அல்லது பணம் கிடைக்கும்.
வேலையின்மையால் அவதிப்பட்டவர்களுக்கு அரசு, தனியார் துறையில் நல்ல வேலை கிடைக்கும். நோய் தொல்லை குறையும். இளைய சகோதர, சகோதரி மூலம் நிலவிய குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்து கிடைப்பதில் நிலவிய சட்டச் சிக்கல் மறையும். அரசின் உதவித் தொகை கிடைக்கும். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி சாதகமாகும். உயர் கல்வி முயற்சி கைகூடும். குழந்தைகளின் மந்த தன்மை நீங்கும். தடைபட்ட குல தெய்வ வேண்டுதல்கள் நிறைவேறும். பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வம் மிகும். ஸ்ரீ ராமர் வழிபாட்டால் மேன்மை பெற முடியும்.
பரிகாரம்: மிதுன ராசியினர் மதுரை மீனாட்சி அம்மனை வழிபடுவதால் ஏற்றம் உண்டாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






