என் மலர்

  மிதுனம் - ஆண்டு பலன் - 2022

  மிதுனம்

  ஆங்கில ஆண்டு பலன் - 2022

  மிருகசீரிஷம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3

  புத்திக்கூர்மையான மிதுன ராசியினருக்கு புத்தாண்டு நல்வாழ்துக்கள். இந்த ஆங்கிலப் புத்தாண்டில் குரு மற்றும் ராகு/கேதுவின் சஞ்சாரம் மிகச் சாதகமாக உள்ளது. இந்த புத்தாண்டு உங்கள் மனதிலிருக்கும் இனம் புரியாத பயத்தை அகற்றி தெளிவையும் துணிவையும் வழங்கும்.

  குடும்பத்தில் நிலவிய சங்கடங்கள் அகலும். அஷ்டமச் சனியால் சிறுசிறு இன்னல்கள் சங்கடங்கள் நிலவினாலும் தன்னம்பிக்கையும் பரிபூரண சிந்தனையும் உங்களை வெற்றியாளராக்கிவிடும். கடமைக்காக சமுதாயத்திற்காக வாழ்ந்து வரும் நிலை முற்றிலும் மாறப் போகிறது. உங்களுடைய முயற்சிகளில் சிறு தடை, தாமதங்கள் நிலவினாலும் முடிவில் வெற்றி உங்களுக்கே என்பதால் மனம் தளராது செயல்படுவது அவசியம். உங்கள் திறமையை முழுமையாக பயன்படுத்தினால் இந்தப் புத்தாண்டின் எல்லா நாளும் சுபமாக அமையும். இனி இந்த ஆண்டிற்கான பலன்களை விரிவாகப் பார்க்கலாம்.

  குரு சஞ்சார பலன்: ஆண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் 13, 2022 வரை குருபகவான் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் ராசி மற்றும் 5ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் அதிர்ஷ்ட தேவதை அரவணைப்பு கிடைக்கும். தடைபட்ட அதிர்ஷ்டம் துளிர் விடும்.பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் குறையும். கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு என பிள்ளைகளைப் பற்றிய அனைத்து மனக்குறையும் தீரும். தவறான நட்பிலிருந்த பிள்ளைகள் மனம் மாறி குல கௌரவத்தை காப்பார்கள்.

  புத்திர பாக்கியம் கிடைக்கும். பல வருடங்களாக தீராத முன்னோர்களின் பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் அகலும். பூர்வீக சொத்துகள் தொடர்பாக நிலுவையிலிருந்த வழக்குகள் சாதகமாகும். பாகப் பிரிவினைகள் மத்தியஸ்தர்கள் மூலம் பேசப்பட்டு சுமூகமாக முடியும். வெளிநாட்டிலிருந்து பூர்வீகம் வந்து செல்வதிலிருந்த தடைகள் அகலும். குல, இஷ்ட தெய்வ பிரார்த்தனைகளை பூர்த்தி செய்ய ஏற்ற காலம். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான தொழில் வளர்ச்சி ஏற்படும். உங்களது திறமையை வெளி உலகத்திற்கு காட்ட புதிய, புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

  ஏப்ரல் 13, 2022க்கு பிறகு 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறும் குருபகவான் அஷ்டமச் சனியையும் மீறி தொழில், உத்தியோக ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவார். வியாபாரத்தை முறையாக திட்டமிட்டு முழுமையாக செயல்படுத்துவீர்கள். அஷ்டமச் சனி முடியும் வரை புதிய தொழில் முதலீட்டை தவிர்க்கவும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

  தொழில் கூட்டாளிகள் மற்றும் நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முன்பு இருந்ததை விட வருமானம் சற்று உயர்வாகவே இருக்கும். தொழில் உத்தியோகத்தில் நிலவிய நெருக்கடிகள் மாறும். செய்யும் தொழிலே தெய்வம் எனும் சிந்தனை மேலோங்கும். சிலருக்கு தொழில், உத்தியோக நிமித்தமாக வெளியூர், வெளிநாட்டுப் பயணம் செய்ய நேரும். வியாபாரமே செய்ய முடியாத அளவுக்கு கடன் பிரச்சனை, வேலை ஆட்கள் பிரச்சனை, குடும்பப் பிரச்சனை என பல குழப்பத்தில் இருந்தவர்களுக்கு தொழிலில் மீண்டும் எழுந்து நிற்கும் படியான மாற்றங்கள் உருவாகும்.

  சனியின் சஞ்சார பலன்கள்: 2022 முழுவதும் சனிபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அஷ்டமாதிபதி சனி சனி ஆட்சி பலம் பெறுகிறார். மேலும் அவரே பாக்கியாதி என்பதால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. குருவின் சஞ்சாரம் சற்று சாதகமாக இருப்பதால் அஷ்டமச் சனியின் தாக்கம் வெகுவாக குறையும்.

  26.2.2022 முதல் 6.4.2022 வரை சனி பகவானும் 6, 11ம் அதிபதியான செவ்வாய் இணைகிறார்கள். தொழில் அல்லது உத்தியோக நிமித்தமாக சிலர் வாழ்க்கை துணையை பிரிந்து வாழ நேரலாம் அல்லது கணவன் மனைவி கருத்து வேறுபாட்டாலும் பிரிய நேரும். கணவன், மனைவி கருத்து வேறுபாடு பஞ்சாயத்து நீதி மன்றம் செல்லும் நிலையை ஏற்படுத்தும். சிலருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும். தவறான நட்பு வலையில் மாட்டலாம்.களத்திரம், நண்பர்கள் மூலம் வம்பு, வழக்கு, கோர்ட் கேஸ் பிரச்சனை வரும்.

  நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்களால் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கும். நம்பிக்கை வைத்த நண்பரே துரோகியாகலாம். பழைய கூட்டாளி விலகலாம். புதிய கூட்டாளி சேரலாம். வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத சூழல் நிலவும். சிலர் தொழில் உத்தியோகத்திற்காக வெளிநாட்டு குடியுரிமை பெறலாம். சிலர் வெளிநாட்டு வேலையை விட்டு சொந்த தொழில் செய்கிறேன் என விரயத்தை உண்டு பண்ணலாம். சிலர் மன நிம்மதிக்காக ஆன்மீக இயக்கங்கள் அல்லது சங்கங்களுக்கு தங்கள் சேவையை அர்ப்பணிக்கலாம். சிலர் துக்கம் மிகுதியால் தலைமறைவாக வாழலாம்.

  ராகு/கேது பெயர்ச்சி: ஏப்ரல் 12ம் தேதி வரை 12ல் ராகுவும் 6ல் கேதுவும் இருக்கிறார்கள். 12ம் இடம் என்பது அயன, சயன, போக, விரய ஸ்தானம் மற்றும் வெளிநாட்டு பயணத்தை குறிக்கும். ராகு தான் நின்ற பாவக பலனை பிரமாண்டப்படுத்துவார். கேது தான் நின்ற பாவக பலனை சுருக்கம் தன்மை கொண்டவர். மிதுன ராசிக்கு பனிரென்டாம் இட பலன்களான விரயத்தை ராகு மிகுதிப்படுத்துவார். இன்றைக்கு சம்பாதித்த பணத்தை இன்றே செலவு செய்தால் மட்டுமே நாளைக்கு சம்பாதிக்கும் ஆசை வரும் என்ற கதையாக வரவுக்கு மீறிய செலவு இருக்கும்.

  குழந்தைகளின் படிப்பு, திருமணம் வீடு, வாகன செலவு என வாழ்க்கைக்கு அனைத்து தேவைகளையும் நிறைவு செய்து மகிழ்வீர்கள். வயது முதிர்ந்தவர்கள் மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்ய நேரும். எது எப்படி இருந்தாலும் படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.

  ஏப்ரல் 12ல் 11ம் இடமான லாபஸ்தானத்திற்கு ராகுவும் 5ம் இடத்திற்கு கேதுவும் செல்கிறார்கள். எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருப்பவராக இருந்தாலும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆயுள் ஆரோக்யம் அதிகரிக்கும். வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாத கடன் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு கடன் தொகை தள்ளுபடியாகும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த சட்டம் தொடர்பான பிரச்சனைகளுக்கு கோர்ட், கேஸ், வக்கீல் என்று அலைந்து விரக்தி அடைந்தவர்களுக்கும் வழக்கு சாதகமாகும். இதுவரை வெளிநாட்டு வேலைக்காக பல முறை முயன்றவர்களின் வெளிநாட்டு கனவு நிறைவேறும்.

  திருமணம்: அஷ்டமத்துச் சனியின் தாக்கத்தால் தான் திருமணம் தடைபட்டுக் கொண்டு இருக்கிறது. மேலும் சனி ராசி அதிபதி புதனுக்கு நட்பு கிரகம் என்பதால் தன் பயணப்பாதையில் சுக்கிரன், புதன் இருந்து தசா புத்தி சாதகமாக இருந்தால் திருமணத்தை நடத்தித் தருவார். இந்த நவம்பர் 2021ல் கும்பத்திற்கு மாறிய குரு ராசி, மூன்று, ஐந்தாம் இடத்தைப் பார்ப்பதால் ஜனன ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். அஷ்டமச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதகத்தை ஒப்பிடாமல் திருமணம் செய்யக் கூடாது.

  பெண்கள்: கணவனின் அன்பு, அனுசரனைக்காக ஏங்கிய பெண்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. இதுவரை புரிந்து கொள்ளாத உங்களின் கணவர் உங்களை புரிந்து கொண்டு உங்கள் மனதிற்கேற்ற மணாளனாக மாறுவார். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் மாமியாரால் புகழப்படுவீர்கள். தடைபட்ட திருமணம் நடக்கும். பண வரவில் இருந்த தடை தாமதம் விலகும். பொருளாதார முன்னேற்றம் மகிழ்சியை தரும். கணவர் மற்றும் அவர் வழி உறவினர்களால் பொருள் வரவு ஏற்படும்.

  விவசாயிகள்: இந்த ஆண்டுக்குள் மிதுன ராசி விவசாயிகள் கடன் பிரச்சனையில் இருந்து மீண்டு விடுவீர்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. குறுகிய கால பயிர்கள் நல்ல மகசூல் பெற்றும் தரும். நிலத்தகராறு, வாய்க்கால் வரப்பு தகராறு போன்ற பிரச்சனைக்கு சட்ட உதவியை நாடாமல் மத்தியஸ்தர் மூலம் தீர்ப்பது நலம். சரியான வேலையாட்கள் கிடைக்காமல் வேலைப்பளு மிகுதியாக இருக்கும்.

  உத்தியோகஸ்தர்கள்: உத்தியோகஸ்தர்களுக்கு மிகுதியான பொறுப்புகள் வழங்கப்படும். சிறு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உங்களது கடமைக்களை சிறப்பாக நிறைவேற்றி புகழ் அடைவீர்கள். மன திருப்தி கிடைக்கும். மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். இயன்றவரை வேலையை மாற்றம் செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசு உத்தியோகத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும்.

  முதலீட்டாளர்கள்/வியாபாரிகள்: ஏப்ரல் 12 வரை ராகு விரைய ஸ்தானத்தில் இருப்பதால் சிறிய முதலீட்டில் பெரிய லாபத்தை தந்து பேராசையை உருவாக்கி பெரிய முதலீட்டில் மாட்டிவிட்டு தேவையில்லாத பெரும் விரயத்தை தேடித் தருவார். புதிய ஒப்பந்தங்களில் மிகுந்த கவனம் தேவை. விசுவாசமான வேலையாட்கள் உங்களை விட்டு விலகிப் போவார்கள். நம்பகமான வேலையாட்கள் இன்மை உங்களுக்கு நிம்மதியின்மையை தரும்.அஷ்டமச் சனி முடியும் வரை அகலக்கால் வைக்காமல் இருப்பது நல்லது. அலைச்சல் மிகுந்த பயணங்கள் இருந்தாலும் ஆதாயமும் இருக்கும்.

  அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள் கவனமாக திட்டமிட்டு காய் நகர்த்த வேண்டிய காலம். வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்திற்கு சனிப் பார்வை இருப்பதால் நிறைவேற்ற முடியாத ஒரு வாக்கை கொடுக்க வைத்து அஷ்டமச் சனியால் வம்பு வழக்கை விட்டு வாசலில் நிறுத்துவார். உங்களின் வாக்கே உங்களை கட்டம் கட்டி நிற்க வைக்கும் என்பதால் வாக்கில் நிதானம் தேவை. கொள்கை கோட்பாடுடன் தூய்மையாக செயல்பட்டால் நிலைக்கலாம். நீடிக்கலாம்.

  மாணவர்கள்: வேற்று மொழி கற்கும் ஆர்வம் உண்டாகும். நன்றாக படித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.எனினும் சிறிய உடல் உபாதைகளால் ஏற்பட்டு அடிக்கடி பள்ளிக்கு விடுப்பு எடுக்களாம்.

  மிருகசீரிஷம் 3,4ம் பாதம்: உங்கள் எண்ணங்கள், லட்சியங்கள், ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்ற கடுமையாக உழைக்க நேரும். நிலையான தொழில், நிரந்தரமான உத்தியோகம் கிடைக்கும். செவ்வாய் கிழமை முருகனை சிவப்பு மலர் சாற்றி வழிபடவும்.

  திருவாதிரை: தேவையற்ற பணவிரயம் தம்பதிகளிடையே கருத்து வேற்றுமையை மிகைப்படுத்தும். எளிதாக பணம் கிடைக்க குறுக்கு வழியில் இறங்ககூடாது. திருவாதிரை நட்சத்திர நாளில் நடராஜரை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.

  புனர்பூசம் 1,2,3: 9,10 பகவானால் வேலை பளு, வேலை நேரம் அதிகமாகும். பணப்புழக்கம் அதிகமான இடங்களில் வேலை கிடைக்கும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றுதல் நன்று.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×