என் மலர்tooltip icon

    மிதுனம்

    2025 தமிழ் புத்தாண்டு ராசிபலன்

    புதிய தொழில் வாய்ப்பு

    புத்தி சாதுர்யமான மிதுன ராசியினரே!

    எதிலும் மதி நுட்பத்துடன் செயல்பட்டு வெற்றி பெறும் மிதுன ராசியினருக்கு பிறக்கப் போகும் விசுவாசு ஆண்டுஇன்பங்களை வழங்கக் கூடிய ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள். ஆண்டின் துவக்கத்தில் ராசிக்கு 10ல் சனி பகவான் நிற்கிறார். தனது 3ம் பார்வையால் விரய ஸ்தானத்தையும், 7ம் பார்வையால் சுக ஸ்தானத்தையும் 10ம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

    14.5.2025 அன்று ஜென்ம ராசிக்குள் வரும் குரு பகவான் தனது 5ம் பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் சம சப்தம ஸ்தானத்தையும், 9ம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

    18.5.2025 அன்று கேது பகவான் சகாய ஸ்தானத்திற்கும் ராகு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் செல்கிறார். இந்த கிரகப் பெயர்ச்சியால் விசுவாசு ஆண்டு உங்களுக்கு ஏற்படுத்தப் போகும் பலன்களைப் பார்க்கலாம்.

    விசுவாசு ஆண்டின் பொது பலன்கள்

    கடந்த சில வருடங்களாக கண்ணீர் விட்டு வெளியில் சொல்ல முடியாமல் அனுபவித்த பிரச்சனைக்கு விடிவு காலமாக இருக்கும். குடும்ப பொருளாதார பிரச்சனையை சமாளிக்க நீங்கள் வாங்கிய கடனை சிறுது சிறிதாக அடைக்க முயல்வீர்கள். ராசிக்குள் குரு இருப்பதால் கெளரவத் தோற்றம் ஏற்படும்.

    நாத்திகராக இருப்பவர்களுக்கு கூட கடவுள் நம்பிக்கை ஏற்படும். கடவுளே இல்லை என்று கூறியவர்கள் கூட ப்ரபஞ்ச சக்தியை உணர்வார்கள். கைலாஷ் மானசரோவர் சென்று வர அரசின் ஆதரவு கிடைக்கும். புத்திர தோஷத்தினால் நீண்ட காலமாக தடைபட்ட புத்திர பாக்கியம் கைகூடும்.

    ராசியில் இருக்கும் குருவின் பார்வையும் 9ம் இடத்திற்கு இருப்பதால் செயற்கை கருத்தரிப்பிற்கு முயற்சி செய்பவர்களுக்கும் இது சாதகமான காலம். வெளிநாட்டு படிப்பு அல்லது வேலைக்கு முயற்ச்சிப்பவர்களுக்கு வாய்ப்பு கிட்டும்.

    இது வரை வெளிநாடு செல்லாதவர்களுக்கும் வெளிநாடு வாய்ப்பு கிட்டும். குழந்தைகளால் மன மகிழும் சம்பவங்கள் நடக்கும்.வீடு, வாகனம் தொடர்பான உங்களின் கனவுகள் பலிதமாகும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் சொந்த வீட்டிற்கு செல்வார்கள்.நோய் நொடி நீங்கும். வம்பு வழக்குகள் எதிர்பாராத வெற்றியைத் பெற்றுத் தரும்.

    அரசு வகை ஆதாயம் உண்டு. தந்தை, தந்தை வழி உறவினர்கள் வெளி பேச்சில் நல்லவர்களாகவும் மனதிற்குள் வஞ்சம் வைத்து பேசுவார்கள்.அதே போல் ஜென்ம குரு நன்மை செய்வாரா? என்ற பயமும் மேலோங்கும். இந்த ஆண்டு அவர் அதிசாரமாக கடகத்திற்கு செல்கிறார்.

    சற்றேறக்குறைய 2 மாதம் தன ஸ்தானத்தில் நிற்பதால் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடை தாமதங்கல் அகலும். மேலும் வக்ர கதியில் 4 மாதம் சஞ்சரிப்பதால் ஜென்ம குருவினால் பெரிய பாதிப்பு இருக்காது. உரிய வழிபாட்டு முறைகளை கடைபிடிக்க இந்த ஆண்டு உங்களுக்கு அனைத்து இன்பங்களையும் தரும்.

    பொருளாதாரம்

    வருமானம் அதிகரிக்கும் . இனிமேல்வராது என்று முடிவு செய்த வராக்கடன் வசூலாகும். குடும்ப உறுப்பினர்களின் நன்மதிப்பை பெற சற்று அதிகமாகவே செலவு செய்வீர்கள்.பெரும் விரயம் ஏற்படாது என்றாலும வீண் செலவுகளை குறைத்து உங்கள் வருமானத்திற்கு ஏற்ப திட்டமிட்டு அகலக்கால் வைக்காமல் நிதனமாக செயல்பட்டால் கடன் இல்லா பெருவாழ்வு வாழும் பாக்கியம் உண்டாகும்.

    வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் தொகை கிடைக்கும். பழைய சேமிப்புகள், இன்சூரன்ஸ் பாலிசிகள் முடிவடைந்து ஒரு நல்ல தொகை கைக்கு கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் நிலவும்.சுப நிகழ்வுகள் நடைபெறும்.

    மிருகசீரிடம் 3, 4

    தடை, தாமதங்கள் விலகும். அனைத்து மாற்றங்களும் உங்களின் எதிர்காலத்திற்கு நல்லதாகவே அமையும்.தொழில் செய்வோருக்கு முன்னேற்றத்திற்கான ஆரம்பங்கள் தெரியும்.வேலைப்பளு அதிகமாகும்.

    புதிய தொழில் துவங்க ஏற்ற காலம். சிலரது பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும். நண்பர்கள், உடன் பிறந்தோர் நட்பும், நல்லுறவும் ஏற்படும்.அடமானத்தில் உள்ள சொத்துக்கள் மீண்டு வரும். பாகப் பிரிவினையில் இருந்த சட்ட சிக்கல் தீரும். பல தலைமுறையாக தீராத சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

    தடைபட்ட வாடகை வருமானம் வரத்துவங்கும். ஆரோக்கிய குறைபாடுகள் அகலும். குலதெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும்.விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு அவசியம். வைத்தியம் பலன் தரும். சுப விரயங்கள் ஏற்பட்டாலும் தேவைக்கு பணம் கிடைக்கும். பெண்களுக்கு தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

    திருவாதிரை

    குல தெய்வ அனுகிரகம் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம், திருப்பம் உண்டாகும். பண வரவு சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவீர்கள். எதிர் நீச்சல் போட்டு இழந்ததை மீட்பீர்கள்.

    கடன் பிரச்சனைகள் சூரியனைக் கண்ட பனிபோல் படிப்படியாக குறையும். கணவன், மனைவி அந்நியோன்யம் கூடும்.குடும்ப உறுப்பினர்கள் ஒன்றினைந்து பித்ருக்கடன் தீர்த்து முன்னோர்களின் நல்லாசி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும்.

    வீடு, நிலம், தோட்டம், வாகன யோகமும் உண்டாகும். சிலர் வீட்டை புதுப்பிப்பார்கள்.சிலருக்கு சிறு பதவி உயர்வு கிடைக்கும். தாய், தந்தை வழிச் சொத்து, உயில் ஆதாயம் உண்டு. எதிரிகளின் பலம் குறையும். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோக நற்பலன் தரும்.

    புனர்பூசம் 1, 2, 3

    வேலை தொழில் வியாபாரத்தில் போட்டிகளையும், சிக்கல்களையும் சந்தித்தவர்களின் நிலமை சாதகமாக மாறும். உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் நல்லபடியாக முடிவுக்கு வரப் போகிறது.

    தொழிலுக்கு அரசின் உதவி கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் மன வேதனையில் இருந்தவர்கள் நம்பிக்கை, நாணயத்தை நிலை நிறுத்துவார்கள்.

    முயற்சிக்கு குடும்ப உறுப்பினர்கள் பக்க பலமாக இருப்பார்கள். பொருளாதார நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத தன லாபம் உண்டாகும்.வாழ்க்கைத் தரம் உயரும் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். எதையும் சமாளித்து நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

    புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மீதான வாடகை வருமானம் அதிகரிக்கும். கணவரால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் ஆதாயம் உண்டு. கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான்.

    திருமணம்

    களத்திர ஸ்தானமான 7ம் மிடத்தை சனி பார்த்தால் திருமணம் உரிய வயதில் நடக்குமா? தடையாகுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் மேலோங்கும். 7ம்மிடம் ஒருவரின் எதிர்பார்ப்பைப் பற்றிக் கூறுமிடம். திருமண வரன், திருமண வாழ்க்கை அதீத எதிர்பார்ப்பை சனி பகவான் நிச்சயம் தகர்ப்பார்.

    எதிர்பார்ப்பை குறைத்தவர்களுக்கு உரிய வயதில் உடனே திருமணம் நடக்கும். இந்த வருடத்தில் குருவின் பார்வையும் 7ம் மிடத்திற்கு இருப்பதால் அதிகமான மிதுன ராசியினருக்கு நல்ல திருமண வாழ்க்கை அமையும்.

    பெண்கள்

    பெண்களுக்கு இந்த விசுவாவசு ஆண்டில் அதிக நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சு எடுபடும் கௌரவம் அந்தஸ்து உயரும். உங்கள் வாழ்க்கைத் துணைவர் நீங்கள் மனதில் நினைப்பதையும் நினைக்காததையும் நடத்துவார்.

    மாமியார் மாமனாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள் .பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும் வேலைக்கு செல்லும் இடத்தில் மதிப்புடன் நடத்த படுவீர்கள்.

    பரிகாரம்:

    குல தெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு உங்களை காக்கும். வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து சித்தர்கள் வழிபாடு செய்தால் தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.

    ×